இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் 6 எலெக்ட்ரிக் கார்கள் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.
எலெக்ட்ரிக் கார்கள்
உலக அளவில் எலெக்ட்ரிக் கார்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களுக்கு அது பற்றிய புரிதல் அதிகரித்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியையும் ஒவ்வொரு கார் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. இந்திய சந்தையில் சில, பல தாமதங்களுக்குப் பிறகே எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் நிகழ்ந்து வந்தாலும், அதற்கான வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அந்தவகையில் இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகமாக இருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் பற்றிதான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
Tata Tiago EV
இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் என்கிற பெருமை டாடா தயாரிப்பான டிகோரிடம் இருக்கிறது. டியாகோவின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் என்ட்ரி லெவல் ஹாட்ச்பேக்காக டாடா பொஷிஷன் செய்ய இருக்கிறது. டிகோர் எலெக்ட்ரிக் வெர்ஷனில் பொருத்தப்பட்டிருக்கும் அதே மோட்டாருடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், டியாகோவின் பெர்ஃபாமென்ஸும் அந்த ரேஞ்சிலேயே இருக்கும் என்று கணிக்க முடிகிறது. ஆனால், அதை விட விலை குறைவாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. டிகோர் EV ரூ.11.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருக்கும் நிலையில், டியாகோ EV ரூ.8-10 லட்சம் என்கிற விலையில் சந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறது. 26 கிலோவாட் பேட்டரி பேக், அதிகபட்சமாக 70 ஹெச்.பி பவரை வெளிப்படுத்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், டிகோரை விட அதிகமாக சிங்கிள் சார்ஜில் 310 கி.மீ என்கிற ரேஞ்ச் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. டாடாவின் நெக்ஸான் எலெக்ட்ரிக் வெர்ஷன் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
Tata Altroz EV
டாடா EV கார்கள் வரிசையில் அடுத்த அறிமுகமாக Tata Altroz EV இருக்கும் என்கிறார்கள். நெக்ஸான் EV-யில் பயன்படுத்தப்படும் 30.2 கிலோவாட் பேட்டரி பேக், அதிகபட்சமாக 129 ஹெச்.பி பவரை வெளிப்படுத்தும் மோட்டாரை இயக்கும். ஆல்ட்ரோஸின் ALFA மாடுலர் ஃபிளாட்பார்ம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றும் வாய்ப்பை வழங்குவதால், ஒரு சில மாற்றங்களோடு அதே ஆல்ட்ரோஸ் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் என்று டாடா நம்புகிறது. பிரீமியம் ஹேட்ச்பேக்காக டாடா இதை பொஷிஷன் செய்யும். கடந்த 2020, 2021 ஆண்டுகளிலேயே அறிமுகப்படுத்த வேண்டிய இந்த மாடல், இந்த ஆண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hyundai Kona Facelift
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2019-ம் ஆண்டு Hyundai Kona எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. மெயின்ஸ்ட்ரீம் கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். சர்வதேச அளவில் 2020-ல் இதன் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், அடுத்த மாற்றத்துடன் புதிய ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்த ஹூண்டாய் தயாராகிவிட்டது. முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பம்பர்கள், ஹெட் லேம்ப்கள், புதிய டிசைன் அலாய் வீல்கள் என அட்டகாசமான அவுட்லுக்கோடு வெளிவர இருக்கிறது ஹூண்டாய் கோனாவின் ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் கார். ஆனால், மெக்கானிக்கலாக அதே 39.2 கிலோவாட் பேட்டரி பேக், 136 ஹெ.சி பவர் கொண்ட மோட்டார் என மாற்றமில்லாமல் வருகிறது. இதன் ரேஞ்ச் சிங்கிள் சார்ஜூக்கு 304 கி.மீ ஆக இருக்கும் என்கிறது ஹூண்டாய். இந்த எஸ்.யூ.வி, 64 கிலோவாட் பேட்டரி பேக், 204 ஹெச்.பி மோட்டார் வேரியண்டிலும் வருகிறது. இதன் ரேஞ்ச் 483 கிலோ மீட்டராக இருக்கும். ஆனால், இவற்றில் எந்த வேரியண்டை ஹூண்டாய் இந்தியாவில் களமிறக்கப் போகிறது என்பது சர்ப்ரைஸாகவே இருக்கிறது. ஆனால், கோனாவின் ஃபேஸ்லிஃப்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஆர்வமாகவே வேலை பார்த்து வருகிறது ஹூண்டாய்.
Mahindra eKUV100
முதன்முதலில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் கார், KUV100 NXT காரின் எலெக்ட்ரிக் வடிவம்தான். eKUV100 என்றழைக்கப்படும் இந்த மாடல், ஆரம்பத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகளைச் சந்தித்தது. ஆனால், அதையெல்லாம் சரி செய்து இந்த ஆண்டு e20 என்கிற பெயரில் அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் வேலை பார்த்து வருகிறது. பேட்டரி, பவர் பற்றி தகவல்கள் வெளியாகாத நிலையில், 250 கி.மீ ரேஞ்ச், 10 லட்ச ரூபாய்க்குள் விலை என்கிற டார்கெட்டோடு களமிறங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
Also Read – Electric Car: எலெக்ட்ரிக் கார் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 7 அம்சங்கள்!
Tata Nexon EV Long Range
டாடா நெக்ஸானில் ஏற்கெனவே விற்பனையாகிக் கொண்டிருக்கும் காரை விட அதிகபட்ச ரேஞ்ச் கொண்ட கார் இந்த ஆண்டு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நெக்ஸான், 30.2 கிலோவாட் பேட்டரி பேக், 312 கி.மீ ரேஞ்சுடன் வருகிறது. ஆனால், 40 கிலோவாட் பேட்டரி, 400 கி.மீ ரேஞ்ச் கொண்ட லாங் ரேஞ்ச் வெர்ஷனை அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Hyundai Ioniq 5
ஹூண்டாயில் இருந்து வெளியாகும் மற்றொரு எலெக்ட்ரிக் கார். பிரத்யேகமான E-GMP ஸ்கேட்போர்ட் ஆர்க்கிடெக்ஷரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார், 80ஸின் பிரபலமான கிளியர் லைன் உள்ளிட்ட வடிவமைப்பைக் கொண்ட தீமில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹாலஜன் பல்புகளுக்குப் பதிலாக எல்.ஈ.டி பல்புகளைக் கொண்ட பாக்ஸி ஹெட்லைட் டிசைன், கர்வ் பம்பர் டிசைன் என அசத்தலான அவுட்லுக் நிச்சயம் புருவம் உயர்த்தச் செய்யும் எனலாம். சர்வதேச அளவில் RWD மற்றும் AWD இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. சிங்கிள் மோட்டார் வடிவமைப்புடன் வரும் RWD மாடல்கள், 169 ஹெச்.பி பவரை வெளிப்படுத்தக் கூடியது. இரண்டு மோட்டார்களுடன் டிசைன் செய்யப்பட்டிருக்கும் AWD மாடல், அதிகபட்சமாக 306 ஹெச்.பி பவரை வெளிப்படுத்தும். சின்ன பேட்டரி பேக்கைக் கொண்ட மாடல், 385 கி.மீ மற்றும் பெரிய பேட்டரி பேக்கைக் கொண்ட மாடல் சிங்கிள் சார்ஜில் 481 கி.மீ ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இவற்றில் ஒரு மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டிருக்கிறது. அது இந்த ஆண்டு நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read –