ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படம் மூலமா நடிகர் மாதவன் டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையையே மாத்திய இஸ்ரோ ஸ்பை கேஸ் பத்தி தெரியுமா… 1994 தொடங்கி 25 வருஷத்துக்கும் மேலா நீதிமன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் நம்பி நாராயணனை முதன்முதலில் எதை அடிப்படையா வைச்சு கைது பண்ணாங்கனு தெரியுமா… வீடியோவை முழுசா பாருங்க… இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறது நம்பி நாராயணனை தேசத்துரோகினு பொய்யா சித்தரிச்ச இஸ்ரோ ஸ்பை கேஸ் பத்திதான்…
நம்பி நாராயணன் கைது
நம்பி நாராயணன் நாகர்கோவிலில் பிறந்து, மதுரை தியாகாராஜா இன்ஜினீயரிங் காலேஜில் இன்ஜினீயரிங் படிச்சவர். அதுக்கப்புறம் நாசாவோட Fellowship ஓட அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டில படிச்சவர். அதுக்கப்புறம் இஸ்ரோவில் முக்கியமான சயின்டிஸ்டா உயர்ந்தவர். இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாயால் அடையாளம் காணப்பட்டவர். மற்றொரு முன்னோடியான சதீஷ் தவான், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோருடன் பணியாற்றிய பெருமை கொண்டவர். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையில் 53 வயதில் விதி விளையாடியது.
1994 நவம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்த நம்பி நாராயணன் வீட்டுக்கு கேரள போலீஸ் 3 பேர் வந்திருக்கிறார்கள். தங்களுடன் ஜீப்பில் வரச் சொன்ன அவர்கள், என்ன வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறியாத நம்பி, `என்னைக் கைது செய்திருக்கிறீர்களா?’ என்று அப்பாவியாய் கேட்டிருக்கிறார். இல்லை என்று சொல்லி ஜீப்பின் முன்சீட்டில் அமரவைத்து அவரை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய்ருக்காங்க. அங்க உயரதிகாரிங்ககிட்ட பேசிக்கோங்க என்று சொல்லி பெஞ்சில் உட்கார வைத்திருக்கிறார்கள். இரவு நீண்ட நேரமாகியும் எந்தவொரு உயரதிகாரியும் வராததால், அன்றைய இரவை பெஞ்சிலேயே கழித்திருக்கிறார் இஸ்ரோவின் கிரையோஜெனிக் புராஜெக்ட் டீமின் தலைமைப் பொறுப்பில் இருந்த நம்பி.
காலை கண் விழித்தவரிடம், இந்திய ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக, தேசத்துரோக குற்றத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள் கேரள போலீஸார். அதிர்ந்துபோயிருக்கிறார் நம்பி. அதன்பின்னர், உளவுத் துறையினர் விசாரணையில் மனதளவிலும் உடலளவிலும் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சுமார் 30 மணி நேரம் நிற்கவைக்கப்பட்ட நிலையிலேயே விசாரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், எந்தவொரு குற்றமும் இழைக்காத அவர், பொய் குற்றச்சாட்டுகளை எந்தவொரு சூழலிலும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. தான் ஒரு நிரபராதி என்பது மட்டுமே அவரது பதிலாக இருந்திருக்கிறது.
நம்பியின் கைதுக்கு முன் 1994 அக்டோபரில் மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்கிற பெண் கைது செய்யப்பட்டார். அவர், இந்திய ராக்கெட் என்ஜின்களின் வரைபடங்களை ரகசியமாக பாகிஸ்தானுக்கு விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் கைதுக்குப் பிறகே, அந்த வரைபடங்களை பல லட்ச ரூபாய்க்கு ரஷீதா மூலம் பாகிஸ்தானுக்கு விற்க முயன்றதாக நம்பி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பிறகு, நம்பியுடன் பணிபுரிந்த சசிக்குமாரன், சந்திரசேகர் மற்றும் லேபர் காண்ட்ராக்ட் எடுத்திருந்த சுதிர் குமார் ஷர்மா. இதில், சுதிருக்கு இஸ்ரோ என்பதற்கான விளக்கம் கூடத் தெரியாது என்கிறார்கள். அதேபோல், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷீதா மற்றும் அவரது தோழி பௌஃசியா ஹூசைன் ஆகிய இருவரையும் அதற்கு முன்பு நம்பி ஒருமுறை கூட சந்தித்ததில்லை. ஒருவழியாக இந்த வழக்கு சிபிஐ கைக்குப் போகவே, 1996-ல் நம்பி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கேரள ஹைகோர்ட்டில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர், 1998-ல் நம்பி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது ஒவ்வொருமுறை நீதிமன்றத்தில் ஆஜரான போதும் ‘தேசத்துரோகி’ என்ற பட்டத்தோடு அவருக்கு எதிராகப் போராட பெரும் கூட்டமே திரண்டிருக்கிறது. இவரது கைது குடும்பத்தினரையுமே கடுமையாகப் பாதித்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை கடுமையான மழையில் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த நம்பி நாராயணனின் மனைவியை அடையாளம் கண்டுகொண்ட டிரைவர், அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். விடுதலையான பின்னர், மீண்டும் இஸ்ரோவில் பணியில் சேர்ந்த அவர் 2002-ல் பணி ஓய்வுபெற்றார்.
அதேநேரம், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனைவு செய்ததற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்போராட்டத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார் நம்பி. இந்த விசாரணையில், கடந்த 2018 செப்டம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கியமானதொரு உத்தரவைப் பிறப்பித்தது. நம்பியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நம்பி கைது செய்யப்பட்டபோது உளவுத் துறையில் துணை இயக்குநராக இருந்த ஸ்ரீகுமார், சமீபத்தில் அகமதாபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். வழக்குகளைப் பொய்யாக ஜோடித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், தனது வழக்கிலும் இதையே அவர் செய்ததாக நம்பி நாராயணன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கு, ரூ.1.3 கோடி அளவில் இழப்பீடு வழங்க கேரள அரசு முன்வந்திருக்கிறது. இருந்தும், இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் சுதந்திரமாகவே இருக்கிறார்கள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இழப்பீடு என்பது எனக்கு இரண்டாம்பட்சம்தான் என்கிறார் நம்பி…
நம்பி நாராயணனின் இந்த துணிவான போராட்டத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.. மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read- தமிழ் மக்கள் மலையாள சினிமாவை ஏன் கொண்டாடுறாங்க… 3 முக்கிய காரணங்கள்!
hats off and great salute to you Mr.Nambi Sir. you must get justice sir.