தமிழ் சினிமாவில் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்த விவாதம் என்பது எப்போதாவதுதான் கிளம்பும். ஏனென்றால், இங்கே ஒரே சூப்பர் ஸ்டார்தான் உண்டு. அவர் ரஜினிகாந்த். பெரும்பாலும் இந்த விவாதம் கிளம்புவதற்குப் பின்னால், தமிழ் சினிமா வரலாறு தெரியாத நபர்களால்தான் இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் தில் ராஜு மூலமாக இந்த விவாதம் கிளம்பி ஓய்ந்தது. சரி, ரஜினிக்கு அந்தப் பட்டம் கிடைத்தது முதல் அடுத்து இந்தப் படத்துக்கோ அல்லது இந்தப் படத்துக்கு இணையான அல்லது மேலான அங்கீகாரத்துக்கோ சொந்தமாகப் போகிறவர் பற்றியும் இந்த வீடியோ ஸ்டோரியில் பார்ப்போம்.
‘சூப்பர் ஸ்டாருக்கான வரையறை என்ன?’ 20 வருஷத்துக்கு முன்னாடி ரஜினியே இதைப் பத்தி சொல்லியிருக்கார்.
2003-ம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சாமி’ படத்தின் வெற்றிவிழாவில், கே.பாலசந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ரஜினி கலந்துகொண்டார். விக்ரம், சூர்யா, விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில் ரஜினி ஒரு மாஸ் ஸ்பீச் கொடுத்திருப்பார். அதிலேயே சூப்பர் ஸ்டாராவதற்கான தகுதிகளை அவர் வரையறை செய்திருப்பார்.
“சூப்பர் ஸ்டார்ன்றது கமிஷனர், ஐஜி, முதல்வர், பிரதமர் போன்ற பதவிதான். சூப்பர் ஸ்டார்ன்றதும் ஒரு பொசிஷன்தான். அது காலம் செல்லச் செல்ல ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் போகும். அந்த இடத்தில் இருப்பவர் ரிட்டயர்டு ஆவார்; ஆனால், அந்தப் பதவி மட்டும் அப்படியே இருக்கும்”னு ரஜினி சொல்லியிருப்பார். அதோட, “லாங் லிவ் கிங்-னு சொல்வாங்க. ஆனால், அந்த கிங் இறந்துட்டா, ஒரு புது ராஜா வருவார்”னு இன்னும் தெளிவா புரியற மாதிரி சொல்லியிருப்பார்.
அதோட, “யார் பல வெற்றிப் படங்களைத் தருகிறாரோ, யார் படங்கள் அதிக லாபம் தருதோ, யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கோ, யார் படங்கள் இன்வெஸ்டருக்கு நஷ்டம் தராதோ அவர்தான் சூப்பர் ஸ்டார்னு சிம்பிளா போட்டு ஒடைச்சிருப்பார் ரஜினிகாந்த்.
சோ, ரஜினி ஸ்டேட்மென்ட்டை வெச்சுப் பார்க்கும்போது அஜித், விஜய் ரெண்டு பேருமே சூப்பர் ஸ்டார் ரேஞ்சுலதான் வர்றாங்க. ஆனால், ரஜினி சொன்ன மாதிரியே அவர் ரிட்டயர்டு ஆன பிறகுதான் அந்த இடத்துல அப்போ யார் இருப்பாங்கன்றது உறுதியா சொல்ல முடியும்.
அதே சமயம் ரஜினிகிட்ட இருக்கிற சூப்பர் ஸ்டார் பட்டம் ஏன் அவ்ளோ மாஸ்..?
அதைத் தெரிஞ்சுக்கணும்னா, நாம ரஜினியோட டிராக் ரெக்கார்டையும் பாக்கணும்..
நமக்கெல்லாம் தெரியும்… ரஜினிகாந்தை முதன்முதலில் திரையில் அறிமுகப்படுத்தியதும், சிவாஜி ராவ் கெயிக்வாட் என்ற அவருக்கு ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்ததும் இயக்குநர் கேபாலசந்தர்தான் என்று. ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், மூன்று முடிச்சி, அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், காயத்ரி, சங்கர் சலீம் சைமன், ஆயிரம் ஜென்மங்கள், மாங்குடி மைனர் என வில்லன் மற்றும் சப்போர்ட்டிங் ஆக்டரா மட்டும்தான் வலம் வந்தார். இந்தப் படங்களையெல்லாம் பார்த்து, ரஜினியின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்த, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கதாசிரியர் கலைஞானம்தான் ரஜினிக்குள் புதைந்துள்ள சூப்பர் ஹீரோவைக் கண்டுணர்ந்தவர். அவர்தான் தனது கதையில் தயாரித்த ‘பைரவி’ படத்தில் ரஜினியை முதன்முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அப்போது ரஜினி மீது இருந்த பிம்பம் காரணமாக, அவரை ஹீரோவாக்க கடும் எதிர்ப்புகளை கலைஞானம் சந்தித்திருக்கிறார். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரஜினியை ‘பைரவி’யில் ஹீரோவாக்கினார் கலைஞானம்.
Also Read – சென்னை மவுன்ட் ரோடில் 2K கிட்ஸ் அறிந்திடாத தியேட்டர்கள்!
பைரவி படம் ரிலீஸ். படத்தை தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது கலைப்புலி தாணு. அவர் ஒரு வேலை பண்றார். எல்லா முக்கியமான தியேட்டர்களிலும் ரஜினியின் பெரிய பெரிய போஸ்டர், கட் அவுட்களை வைத்ததுடன், அவற்றில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த என்று கொட்டை எழுத்தில் ஹைலைட் செய்கிறார். எம்.ஜி.ஆர் எல்லாம் திரைத்துறைக்கு ஓய்வு கொடுக்காத காலத்திலேயே இப்படி ஒரு பட்டம் சூட்டப்பட்டதில் ரஜினியே டரியல் ஆகிட்டார். ஆனால், ‘உங்க ஒர்த்து உங்களுக்குத் தெரியாது’ன்ற ரீதியில் அவர் சமாதானப்படுத்தப்பட்டார். பைரவி செம்ம ஹிட். ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துடனே ரஜினி எனும் ஹீரோ உதயமானார்.
பட்டமோ, பதவியோ மேட்டர் இல்லை. அதைத் தக்கவைக்கிறதுதான் மேட்டர். அப்படி ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை தன் திறமையான நடிப்பாற்றல் மூலமாகவும், ஸ்டைல் எனும் தனித்துவம் மூலமாகவும் இன்றுவரை ரஜினிகாந்த் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையே அல்ல.
ரஜினிகாந்துக்கு 80ஸ்தான் ரொம்ப முக்கியமானது. ‘முள்ளும் மலரும்’, ‘அவள் அப்படித்தான்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்கள் மூலமாக ஒரு தேர்ந்த நடிகராக தன்னை தமிழ் சினிமாவில் பதிவு செய்துகொண்ட அவர், ‘பில்லா’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘காளி’, ‘ஜானி’, ‘பொல்லாதவன்’, ‘முரட்டுக் காளை’ என மாஸ் காட்டி தன்னுடைய ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு நியாயம் செய்தார். அந்தக் காலக்கட்டத்தில் யாருமே ரஜினியை ரஜினி என்று அழைக்கமாட்டார்கள். சூப்பர் ஸ்டார் என்றுதான் அழைப்பார்கள். அது அனிச்சையாகவே நடந்தது.
1980-ல் இருந்து 1995 வரையிலான 15 ஆண்டுகளில் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா ரஜினி நடிச்ச படங்களின் எண்ணிக்கை 100-ஐ தொடும். ஆவரேஜா பார்த்தாலு வருஷத்துக்கு 7 படங்கள். சுழண்டு சுழண்டு உழைச்சாலும் மலைக்க வைக்கிற நம்பர் இது. அதுவும் இந்தப் படங்களில் வசூல் ரீதியில் தோல்வி என்று பார்த்தால் வெறும் ஒற்றை இலக்க நம்பர்தான் வரும்.
இப்போ புரியுதா ரஜினி ஏன் சூப்பர் ஸ்டார்னு?
சரி, சூப்பர் ஸ்டார் ஆக குவாலிட்டீஸ் என்னென்ன-ன்ற கேள்வி எழலாம். இதோ ஓர் உத்தேசப் பட்டியல்:
> ஒரு படம் முழுக்க முழுக்க எங்கேஜ் பண்ணனும், அதுவும் ஹீரோவால. இதை ரஜினி படங்கள் எப்பவும் நிறைவா செஞ்சிட்டு இருக்கிறதை கவனிக்கலாம்.
> தனக்கான தனித்துவத்தை நிறுவனம். ரஜினியின் தனித்துவம் ஸ்டைல்ன்றது எல்லாருக்குமே தெரியும். நிக்கிறது, நடக்குறது, சிரிக்கிறது எல்லாத்துலயும் தனி ஸ்டைலை அவர் இன்னிக்கு வரைக்கும் காட்டிட்டு இருக்கார்.
> மாஸுக்கான நடிகராக இருக்கணும். மாஸ்னா ஒரு குறிப்பிட்ட ஏஜ் க்ரூப் மட்டும் அல்ல. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஒட்டுமொத்தமா எல்லாரையும் கவர் பண்ணனும். அதுவும் ரஜினியால மட்டும்தான் சாத்தியமாச்சு.
> ஆக்ஷன், அதிரடி மட்டும் காட்டிட்டு இருந்தா பத்தாது… சென்ட்டிமென்ட்ல உருக வைக்கணும்; காமெடி பண்ணி வயிறு குலுங்க சிரிக்க வைக்கணும்; தியேட்டர்ல எழுந்து டான்ஸ் ஆட வைக்கிற அளவுக்கு மூவ்மென்ட்ஸ் இருக்கணும், வசனங்கள் பேசும்போது நமக்கு மெய் சிலிர்க்கணும் இப்படி எல்லா ஏரியாவுலயும் தனித்துவத்தோட தன்னிகரற்று ஸ்கோர் பண்ணனும். முள்ளும் மலரும்ல கண்கலங்க வைக்கிற அதே ரஜினி, தில்லு முல்லுல படம் முழுக்க வயிறு வலி ஏற்படுற அளவுக்கு சிரிக்க வைப்பாரு. அண்ணாமலைல எல்லாமே கலந்து கட்டின ஃபுல் மீல்ஸ் தருவாரு. தளபதி, பாட்ஷாவுல மிரட்டி ரசிகர்களை சிலிர்க்க வைப்பாரு. படையாப்பா, முத்து, சந்திரமுகி சிவாஜி, கபாலின்னு லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சா ஒவ்வொண்ண பத்தியும் ஒரு மணி நேரம் பேசலாம்.
> எல்லாத்துக்கும் மேல ஜெயிச்சுட்டே இருக்கணும். தயாரிப்பாளர்கள் தானா சம்பளத்தை பல மடங்கு உயர்த்திட்டே போகுற அளவுக்கு வசூல் வேட்டை ஆடணும். ஒரு படத்தை விட அடுத்த படம் செம்ம ஹிட் ஆகணும். இடையில் சறுக்கினா, யாரும் லாஸ் ஆகாத அளவுக்கு சரிகட்டணும்.
இதெல்லாம்தான் ரஜினியை இன்னிக்கு வரைக்கும் சூப்பர் ஸ்டாரா வெச்சுட்டு இருக்கு.
சரி, அப்படின்னா ரஜினிக்கு முன்னாடி யாரு சூப்பர் ஸ்டார்?
அஃப்கோர்ஸ் எம்.ஜி.ஆர்தான். சூப்பர் ஸ்டாருக்குரிய எல்லாத்தையும் அவர் பண்ணிட்டு இருந்தார். ஆனால், அவரது பட்டம் ‘மக்கள் திலகம்’. அந்தக் காலத்துல சூப்பர் ஸ்டாருக்கு நிகரான பட்டம்னே சொல்லலாம்.
சரி, இப்போ யாரு சூப்பர் ஸ்டார்?
அதே ரஜினிதான். வேற யாரு?
இந்த இடத்துல அஜித், விஜய் யாருன்னு மறுபடியும் கேள்வி எழலாம். அஜித், விஜய் – தல, தளபதி.
ஏன் இவங்கள்ல ஒருத்தரை இப்பவே சூப்பர் ஸ்டார்னு அழைக்கலாமேன்னு கேட்கலாம். அது சாத்தியமே இல்லைன்றதுக்கு ரெண்டு ரீசன் இருக்கு.
ஒண்ணு. ரஜினி இன்னும் ரிட்டையர் ஆகலை.
ரெண்டு… ஒரு உறையில் ரெண்டு கத்தி இருக்க முடியாது. எம்ஜிஆர் காலத்துல, எம்ஜிஆர் மக்கள் திலகம் என்றழைக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் என்றால், அப்போது சிவாஜி கணேசன் நடிகர் திலகம் என்றழைக்கப்பட்ட சூப்பர் ஆக்டர்.
ரஜினி காலத்தில் ரஜினி சூப்பர் ஸ்டார். கமல் சூப்பர் ஆக்டர்.
இந்த வரிசைப்படி அணுகினால், அஜித்தும் விஜய்யும் சூப்பர் ஸ்டார் கேட்டகரியில்தான் வருவார்களே தவிர, அதற்கு எதிர் துருவமான சூப்பர் ஆக்டர் மிஸ்ஸிங்.
அதனால, சூப்பர் ஸ்டார் பட்டம் இல்லாமலேயே அந்த இடத்தின் நெருக்கத்தில் தல, தளபதி என்ற பெயரில் அஜித்தும் விஜய்யும் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.
ரைட்டு. அப்புறம் ஏன்யா இந்த சூப்பர் ஸ்டார் சிக்கல் வருது?-ன்னு நீங்க கேட்கலாம். அதுக்கு காரணம், நம்மலோட இந்த சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை மத்த ஸ்டேட் காரங்க, பாலிவுட் காரங்க, நேஷனல் மீடியா காரங்களால புரிஞ்சிக்க முடியலைன்றதுதான் காரணம்.
நேஷனல் மீடியால எடுத்துகிட்டா, தமிழ் ஸ்டார் நடிகர்களை மென்ஷன் பண்ணும்போது தமிழ் சூப்பர் ஸ்டார்னு பாரபட்சம் இல்லாம எல்லாரையும் அழைப்பாங்க. அவங்களைப் பொறுத்தவரைக்கும் அது ஜஸ்ட் ஒரு அடைமொழி. அவ்ளோதான். ஆனா, சூப்பர் ஸ்டார்ன்ற அந்த அடைமொழி இங்கே நமக்கு மிகப் பெரிய பட்டம்!
இந்த சென்ஸ்லதான் யதார்த்தமா தில் ராஜு சூப்பர் ஸ்டார்னு சொல்ல, அதை பதார்த்தமா தமிழுலகம் பதம் பாத்துடுச்சே. இதே மாதிரி ஒரு சம்பவம் ஏற்கெனவே சூர்யாவுக்கும் நடந்துருக்கு.
2021-ல் ‘ஜெய் பீம்’ ரிலீஸ் ஆனப்ப, அமேசான் பிரைம் தன்னோட விளம்பரத்துல, வழக்கமா பின்பற்றுற பாணியிலேயே சூப்பர் ஸ்டார் சூர்யான்னு போட்டுட்டாங்க. அதை கவனிச்ச ரஜினி ரசிகர்கள் கொந்தளிச்சுட்டு ஏடாகூடமா ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் ‘ஜெய் பீம்’ ட்ரெய்லர் ரீலீஸ் ஆன்லைன்ல நடந்துச்சு. அப்பவும் நெறியாளர் ‘சூப்பர் ஸ்டார்’னு மென்ஷன் பண்ண, பதறிப் போன சூர்யா பக்குவாம எடுத்துச் சொன்னார்: “எனக்கு இன்னும் உறுத்திட்டே இருக்கு. சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிசார் மட்டும்தான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார்”னு சொன்னப்புறம்தான் ரஜினி ரசிகர்கள் அமைதியானாங்க.
இந்த அளவுக்கு இங்கே ரத்தமும் சதையுமா வேல்யூ நிறைஞ்சதுதான் சூப்பர் ஸ்டார் பட்டம்ன்றது!
சரிப்பா, யாருதாம்மா அடுத்த சூப்பர்ஸ்டாருன்னு திரும்பவும் நீங்க கேட்கலாம். அதுக்கு ஒரே பதில்: ரஜினி ரிட்டயர் ஆனாதான், யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது உறுதியாகும். அதுவரைக்கும் அஜித், விஜய் எல்லாருமே பட்டத்து இளவரசர்கள்தான்.
சாமி பட விழாவில் பேசினப்போ, ரஜினியே “விக்ரம் செம்ம மாஸ் ஹீரோ. அவர் உச்சத்தை தொட்டுட்டார்”ன்ற ரேஞ்சுல பேசினார். ஆனா, இப்போ… ரஜினி அதே சூப்பர் ஸ்டார்தான். ஆனா விக்ரம் கிராஃப் ஏற்ற இறக்கங்களோட இருக்கு. சோ, இன்னிக்கு இருக்குற உச்ச நடிகர்களோட கிராஃபும் நாளைக்கு ஏறலாம், இறங்கலாம். அப்போ, யாரு சூப்பர் ஸ்டார்னு நிச்சயம் காலம் முடிவு பண்ணும். ரஜினி சொன்ன மாதிரி அந்தப் பதவி அப்படியே இருக்கும். ஆள் நிச்சயம் வேற ஒருத்தரா இருப்பார். சோ, காத்திருப்போம்.