மானஸ்தன் படத்தில் சரத்குமார் லெட்டர் படிக்கும்போது பக்கத்தில் நின்று நாக்கை நீட்டி ஒருவிதமான சர்காஸத்தை வெளிப்படுத்துவது, கிரி படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக இவர் ட்ரம்ஸ் வாசிக்கும்போது ஒருவித பீதியான ரியாக்ஷன் கொடுப்பது, வின்னர் படத்தில் அத்தனையும் சரவெடி காமெடிகள்தான் என்றாலும் நம்பியார் எமோஷனாக பேசும்போது ஏக்கம், சந்தோஷம் கலந்த ஒரு ரியாக்ஷனை பேக்கிரவுண்டில் கொடுத்துக்கொண்டிருப்பது, தவசி படத்தில் ரத்தம் கக்கி காமெடியின்போது பக்கத்தில் நிற்பவர் தவுலத்தாக பேசும்போது சிரித்துக்கொண்டே தம்ஸ்அப் காட்டுவது… இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். வெர்பல் காமெடி தவிர இவர் பாடிலாங்குவேஜ் காமெடிகளை சுட்டிக்காட்ட. எனக்கு நீண்ட நாள் ஏக்கம். ப்ரண்ட்ஸ் படத்தில் நேசமணி எனும் சித்தப்பா கதாபாத்திரத்தின் கதையைப் பற்றி. எந்தத் துணையும் இல்லாமல் கிருஷ்ணமூர்த்தியை வளர்ப்பதோடு கோவாலோடு சேர்த்து பலருக்கு இவர் வேலை கொடுக்கும் அளவுக்கு வாழ்வில் வளர்ந்திருப்பார். தவிர எனக்கு பர்ஃபாமன்ஸாக தனது நடிப்பில் கட்டிப்போட்ட படங்களும் சில இருக்கிறது. அது என்னவோ தெரியவில்லை இவர் காமெடி செய்து செய்து சிரிக்க வைத்து வைத்து இவரை அப்படியே பார்த்துப் பழகிய நமக்கு இவர் எமோஷனலாக அழுதால் நமக்கு அது தொற்றிவிடுறது.

சங்கமம்
முதல் காதல், முதல் அடி, முதல் படம்… என்று எதையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அப்படி முதன்முதலில் ஒரு படம் பார்த்து அழுதது சங்கமம்தான். மணிவண்ணன் தனது கலைக்காகவும் கலையை உயிரென நினைக்கும் ஏழை எளியோரின் குரலாக படத்தில் இவரது குரல் ஒலிக்கும். சவால் விடுத்து வீட்டுக்கு வந்தவரை கண்டமேனிக்கு பேசிக்கொண்டிருப்பார்கள் இவர் பெற்ற மூன்று மகன்கள். அதில் வடிவேலுவும் ஒரு ஆள். கொஞ்சம் அதிகமாக வசை பாடுபவரும் இவரே. அதன் பின்னர் மணிவண்ணன் கொடுக்கு எமோஷனல் ஸ்பீச்சில் கரைந்துபோகும் வடிவேலு, கண்ணைக் குளமாக்கும் ஒரு பர்ஃபாமன்ஸ் செய்வார். ‘மனுஷனோட வாழ்க்கை இதோட முடிஞ்சு போயிடுச்சுன்னு நெனோச்சோம்யா’ என சொல்லி வயிற்றை அடித்துக்கொள்வார். அப்படி ஒரு வடிவேலுவை நாம் யாருமே பார்த்திருக்க முடியாது. எங்களை மன்னிச்சுடுங்கனு சொல்லிவிட்டு மணிவண்ணனை கடைசியில் கட்டிப்பிடித்து அழுவார். வார்த்தைகளற்ற ஒரு நடிப்பு.

ராஜகாளியம்மன்
அம்மன், பாளையத்து அம்மன், அன்னை காளிகாம்பாள் போன்ற படங்களின் வரிசையில் ராஜகாளியம்மன் படத்தையும் 90ஸ் கிட்ஸால் மறக்க முடியாது. தெரிந்தோ தெரியாமலோ நமது வாழ்க்கையின் மிகப்பெரிய அங்கமாக மாறிப்போன படங்கள் இவை. ரம்யா கிருஷ்ணன், கௌசல்யா, வடிவேலு இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். கரண்தான் படத்தின் வில்லன். நிழல்கள் ரவி வடிவேலு வேசத்தில் கௌசல்யாவைத் தனியாக அழைத்து வருவார். ஆனால் கௌசல்யா சாமி ரம்யாகிருஷ்ணன் வேசத்தில் வந்திருப்பார். அப்போது ஒரு டயலாக். ‘உன்கூட வர்றது உன் அண்ணன்னு நினைச்சியா என்று நிழல்கள் ரவி கேட்க… உன் கூட வர்றது உன் தங்கச்சினு நெனச்சியா என்று ரம்யா கிருஷ்ணன் சொல்ல… அந்த காலத்து தக் லைஃப் ரம்யா கிருஷ்ணன். சரி இதுபோகட்டும். ஏமாந்து கரணுக்கு தனது தங்கச்சியைக் கட்டிக்கொடுக்கும்போது சரி, உண்மை தெரிந்து இவரை கொன்ற பிறகு சரி படத்தின் எல்லா இடங்களிலும் பிரித்து மேய்ந்திருப்பார். அதுவும் இவர் சாகும் முன்பு கோவிலில் வெளிக்காட்டிய நடிப்பு முக்கியமாக சந்தன மல்லிகையை பாடலுக்கு ராட்சத பாறையும் கரையும்.
எம்டன் மகன்
படம் முழுவதும் வடிவேலுவின் ராஜ்ஜியம்தான். நாசர் – பரத் இருவருக்கு இடையேயான அப்பா மகன் பாசம் வேற லெவலில் ஒர்க் ஆகியிருந்தாலும் இவர்களுக்கு இடையில் பாலமாக அமைந்து மேஜிக் காட்டியவர் வடிவேலு. அந்த இடத்தில் வேறு ஒருவரையும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சந்தோஷத்தின்போது பரத் சாப்பாட்டை தட்டிவிடும்போது காமெடி மாமனாக இருப்பதில் ஆரம்பித்து வாய்ப்பு கிடைக்கும்போது எம்டனையே வெளுத்து வாங்கி ஒரு கட்டத்தில் அப்பறம் என்ன வாங்க போவோம் என்று சொல்வது, ஒரு பீரோவுக்குள் இவர் செய்யும் லூட்டி எல்லாவற்றுக்கும் மேலாம க்ளைமாக்ஸில் தன்னுடைய பேச்சால் எம்டனை கரைத்து மகன் பரத்தை கட்டியணைக்க செய்வது என படத்தில் இவரது பங்கு மிகப் பெரியது.
தேவர் மகன்
இவரது ஆரம்பகட்ட ஸ்டேஜில் மெர்சலான ஒரு நடிப்பு வெளிப்பட்ட இடம்தான் தேவர்மகன். படத்தில் இவருக்கு சங்கிலி முருகனுக்கும் நடந்த நகைச்சுவையான விஷயத்தை கமலுக்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருப்பார். ஒட்டுமொத்த அரங்கமே சிரிப்பால் நிறையும். இவருடன் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் இயக்குநர் சங்கரே விழுந்து விழுந்து சிரிப்பார். அப்படியான ஒரு கிளாசிக் கல்ட் படத்தில் இவர் கடத்திய எமோஷனும் நடிப்பும் கொஞ்சம் நஞ்சமல்ல. கையை வெட்டிய பிறகு இவர் கமலுடன் பேசும் காட்சியில் அவ்வளவு யதார்த்தம்.

இவை இல்லாமல் கிங், மானஸ்தன் போன்ற படங்களும் ஃபேவரைட்தான். சரத்குமார் முதன்முதலில் வடிவேலுவை சந்திக்கும்போது மரத்துக்கு அடியில் ஜாலியாக படுத்திருப்பார் வடிவேலு. ஆரம்பத்தில் எடக்கு மடக்காக பேசி கடைசியில் தான் ஒரு அனாதை என்பதை சொல்லி ‘எனக்கு யாரும் இல்ல சாமி’ என்று அழுவார். அந்த சிறு நேர எமோஷனே வேறு லெவல். அடுத்தது கிங் படத்தில் விக்ரம் தன்னுடைய அப்பா நாசருக்கு இருக்கும் நோயை படக் கதையாக சொல்வார். அப்போதும் சரி அதற்குப் பின் அந்த நோயானது அப்பாவுக்கு இல்லை எனக்குதான் என்று விக்ரம் சொல்லும்போது சரி வேறு லெவல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.