தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமலில் இருக்கும் ஊரடங்கில் மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலையில் இந்திய அளவில் அதிகம் தொற்று பரவல் இருக்கும் 10 மாநிலங்களில் தமிழகமும் இருக்கிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருக்கிறது. அந்தவகையில், கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கைத் தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்படி கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தொற்று பரவல் வேகத்தைக் குறைக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
புதிய கட்டுப்பாடுகள்
- மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்க மட்டுமே அனுமதி. மற்ற கடைகள் திறக்கத் தடை.
- ஏடிஎம், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல செயல்படும்.
- ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.
- பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான பொருட்களை வீடுகளுக்கு அருகே இருக்கும் கடைகளில் வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நீண்டதூரம் பயணிப்பவர்கள் தடுக்கப்படுவார்கள்.
- காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் செயல்பட அனுமதியில்லை.
- தேநீர் கடைகள் இயங்க அனுமதியில்லை.
- இ-கமர்ஸ் நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.
- வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்படும்.
- அத்திவாசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றுக்காக மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ் பதிவுமுறை கட்டாயம்.
- இ-பாஸ் பதிவு நடைமுறை 17-05-2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.
- ஏற்கனவே அமலில் இருக்கும் இரவும் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
- ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு (16, 24-05-2021) மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த புதிய கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 24-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.