கேரளாவின் புகழ்பெற்ற கவிஞர் ஓ.என்.வி.குரூப் நினைவாகக் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஓ.என்.வி.குரூப்
கேரளாவின் மதிப்புமிக்க கவிஞர், எழுத்தாளராகக் கொண்டாடப்படும் ஓட்டப்பாலக்கல் நீலகண்டன் வேலு குரூப், இலக்கியத்துக்காக இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான ஜனன்பித் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர். கொல்லத்தை அடுத்த சாவரா பகுதியில் 1931-ம் ஆண்டு மே 27ம் தேதி பிறந்த குரூப், திரைப்படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியவர். இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாகப் பணியாற்றிய அவருக்கு 1998-ல் பத்மஸ்ரீ, 2011-ல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தியது. அகில இந்திய மாணவர் பேரவையின் தலைவராகவும் இருந்த அவர், கடந்த 2016-ம் பிப்ரவரி 13-ல் வயது முதிர்வு காரணமாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஓ.என்.வி விருது
ஓ.என்.வி. குரூப் நினைவாக 2017ம் ஆண்டு முதல் இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பு செய்த எழுத்தாளர்களுக்கு ஓ.என்.வி கல்ச்சுரல் அகாடமி சார்பாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான விருது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், முதல் 4 ஆண்டுகளிலுமே மலையாள எழுத்தாளர்களுக்கே இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. 2017-ல் சுகதகுமாரி, 2018-ல் எம்.டி.வாசுதேவன் நாயர், 2019-ல் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மற்றும் 2020-ல் எம்.லீலாவதி ஆகிய மலையாள எழுத்தாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. விருதுக்கான சான்றிதழ், பொற்கிழியுடன் ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசையும் உள்ளடக்கியது.
வைரமுத்து
இந்தநிலையில், 2021-ம் ஆண்டுக்கான ஓ.என்.வி விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவுக்கு வெளியில் இந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் வைரமுத்துதான். மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான ஜூரி குழு, வைரமுத்துவை இந்த விருதுக்குத் தேர்வு செய்ததற்கு கேரள திரையுலகில் இருந்தே எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது. `மீடு புகாரில் சிக்கிய வைரமுத்துவுக்கு இந்த விருதை அளிக்கக் கூடாது’ என பாடகி சின்மயி-யும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இதுதொடர்பாக மலையாளத் திரைப்பட நடிகை பார்வதி, `17 பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த தகவல்களுடன் வெளிவந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் வைரமுத்து போன்றோருக்கு நமது மாநிலத்தின் பெருமதிப்பிற்குரிய கவிஞர் ஓ.என்.வி குரூப் பெயரிலான விருது வழங்குவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அடூர் கோபாலகிருஷ்ண உள்ளிட்ட ஜூரிக்கள் இதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்?’ என்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். மேலும், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதேபோல், விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள வைரமுத்துவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை, “18 பெண்கள் கூறிய பாலியல் புகார் உங்கள் செவிகளில் கேட்கவில்லையா? இதுதான் நீங்கள் பெண்கள் பாதுகாப்புக்குக் கொடுக்கும் மரியாதையா? இதைச் செய்ததன் மூலம் இந்தப் பிரச்னையிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.