ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையை கிருஷ்ணகிரியில் அமைக்க இருக்கிறது. 500 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் அந்த ஃபேக்டரி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
உலக நாடுகள் பலவும் மரபுசாரா மற்றும் புதுப்பித்தக்க எரிபொருள் பயன்பாட்டை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில், பெட்ரோல் – டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களுக்கென தனி சந்தையே செயல்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டதோடு, பெட்ரோல் பங்குகள் போல் சார்ஜிங் ஸ்டேஷன்களும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அந்த வகையில் இந்தியாவிலும் மின்சார வாகன உற்பத்திக்கு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்திருக்கிறது. டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகளும் மின்வாகன பயன்பாடு, உற்பத்திக்கென பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. தமிழகத்திலும் கடந்த 2019-ல் மின்சார வாகனக் கொள்கை வெளியிடப்பட்டது.
ஓலா தொழிற்சாலை
தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-ன்படி மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், கிருஷ்ணகிரியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் டூவீலர் உற்பத்தித் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இது உலகின் மிகப்பெரிய டூவீலர் தொழிற்சாலையாகும். இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10,000 பேர் வேலைவாய்ப்புப் பெறுவார்கள் என்கிறார் தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மின்சார வாகனக் கொள்கையின்படி, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்வாகனங்களுக்கு 2030-ம் ஆண்டு வரை மாநில ஜி.எஸ்.டி வரி 100% திரும்ப வழங்கப்படும். இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது முழுமையாக முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். அதேபோல், 100% மின்சார வரிவிலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓலா நிறுவனம் அமைக்கும் உலகின் மிகப்பெரிய டூவீலர் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வரும்.
இந்த ஆலையில் இருசக்கர வாகனத்துக்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களும் தயாரிக்கப்படும். அந்த ஆலையில் 3,000 ரோபோக்கள் வாகனம் தயாரிப்புப் பணியில் ஈடுபட இருக்கின்றன. இதனால், 2 விநாடிக்கு ஒரு டூவீலர் உற்பத்தி நடக்கும்’’ என்றார்.
கிருஷ்ணகிரி தொழிற்சாலை தொடர்பான அறிவிப்பை ஓலா நிறுவனம் கடந்த 2020-ல் வெளியிட்டது. முதலில் 2022-ம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 2021 ஜூலை மாதம் முதலே உற்பத்தி தொடங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் அறிவித்திருக்கிறார். கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் பேஸ்-1 பணிகள் ஏறக்குறைய முடிவடைய இருப்பதாக அவர் புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
முதலில் ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து ஒரு கோடி ஸ்கூட்டர்களாக உயர்த்த ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டிருக்கிறது. கிருஷ்ணகிரியில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கூட்டர்கள் உள்நாடு மட்டுமல்லாது பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இருக்கிறது அந்த நிறுவனம்.
சார்ஜிங் ஸ்டேஷன்கள்
மின்சார வாகன உற்பத்தியில் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்த ஈடெர்கோ மின்சார வாகன தொழிற்சாலையை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியது ஓலா. மின்சார வாகன உற்பத்தித் துறையில் நிபுணத்துவம் பெற அந்தத் தொழிற்சாலை ஓலா நிறுவனத்துக்கு உதவியது. தமிழகத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக சுமார் 400 நகரங்களில் முதற்கட்டமாக சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணியிலும் ஓலா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஜூலை இறுதியில் ஸ்கூட்டர்கள் ரெடியானதும், விரைவிலேயே தமிழகத்தில் விற்பனையை அந்த நிறுவனம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சாலைகளில் வலம் வர அதிக நாட்கள் பிடிக்காது. வி ஆர் வெயிட்டிங் பாஸ்!
Also Read – உங்க பெயர்ல எத்தனை சிம் கார்டு இருக்கு… கண்டுபிடிக்க ஈஸியான வழி!