சமீபத்தில் வெளியான `விக்ரம்’ பட ஃபர்ஸ்ட் கிளான்ஸில் அனைவரையும் பெரிதும் கவர்ந்த விஷயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று கமலின் குரல். தகிட தக தமிதா’ எனத் தொடங்கி இறுதியில் கமல் சிரிக்கும் அந்த வெடிச்சிரிப்பு அடடா.
இப்படி கமல் தன் குரலில் எத்தனையோ பாடல்களை தன்னுடைய படங்களில் பாடி அசத்தியிருந்தாலும் வெகு சில நேரங்களில் மற்ற ஹீரோக்களுக்கும் பாடியிருக்கிறார். அந்த பாடல்களைப் பற்றி இங்கே.
`முத்தே முத்தம்மா’ – உல்லாசம்
பிற ஹீரோக்களுக்கு கமல் பாடியதில், ‘முதன்முதலாக பாடியது எனக்குத்தான்’ என்ற பெருமை அஜித்துக்குத்தான். 1997-ஆம் ஆண்டு வெளியான அஜித், விக்ரம் நடிப்பில் உருவான ‘உல்லாசம்’ படத்தில்தான் கமல் முதன்முதலாக வேறொரு ஹீரோவுக்கு பாடியது. கார்த்திக் ராஜா இசையில் பாரதி பாஸ்கர் என்பவர் எழுதிய ‘முத்தே முத்தம்மா’ எனும் டூயட் பாடலை ஸ்வர்ணலதா மற்றும் பவதாரிணியுடன் இனைந்து பாடியிருப்பார் கமல். படம் முழுக்க இளமைத் துள்ளும் அந்தப் படத்தின் இந்தப் பாடலிலும் தன் குரலால் இளமை சேர்த்திருப்பார் கமல். அதிலும் முதல் சரணத்தின் இறுதியில் ‘நிஜமாக வாழும் காதல், நிழலாகிப் போகாது’ என வரும் வரிகளில் காதலை தன் குரலில் குழைத்து குழைத்துத் தந்திருப்பார் கமல்.
`நெருப்பு வாயினில்’ – புதுப்பேட்டை
‘புதுப்பேட்டை’ ஆடியோ வெளியானபோது அனைவருக்கும் பெரும் ஆச்சர்யமாக இருந்தது கமல் இதில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பதுதான். பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய ‘நெருப்பு வாயினில்’ எனத் தொடங்கும் மாண்டேஜ் பாடலை கமல் தனது பிரத்யேக சிரிப்புடன் பாடி அசத்தியிருப்பார். படத்தில் ஹீரோ தனுஷ் மரண பயத்தில் வலம் வரும் காட்சிகளுக்கு பின்னணியில் கமலின் அடர்த்தியான குரலில் ‘இது என்ன கடவுளே.. புரியாது கடவுளே’ என வரும்போது தியேட்டர்களில் கூஸ் பம்ப்ஸ்தான்.
`தெக்கத்தி சிங்கமடா’ – முத்துராமலிங்கம்
80,90-களை ஆண்ட இளையராஜா – பஞ்சு அருணாச்சலம் கூட்டணி ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இணைந்த படம் ‘முத்துராமலிங்கம்’. இதுதான் பஞ்சு அருணாச்சலம் பணியாற்றிய கடைசி படமும்கூட. அந்தப் படத்தில் அவர் எழுதி இளையராஜா இசையமைத்த ‘தெக்கத்தி சிங்கமடா’ எனும் ஓப்பனிங் பாடலை கமல் தன் கம்பீர குரலில் பாடி மிரட்டியிருப்பார். ஆனால் அந்த குரலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் கௌதம் கார்த்திக் ஆடி நடித்திருப்பார் என்பதுதான் அதிலிருக்கும் பெரும் சோகம். அதுவும் மொக்கை மேக்கிங்கில்
ஹப்பி – ஹிந்தி
பாலிவுட் நடிகர் பங்கஜ் கபூர் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு ஹிந்தியில் உருவான படம் `ஹப்பி’. சார்லி சாப்ளினுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக உருவான இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. இந்தப் படத்தில் இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று கமல் ஒரு பாடலை பாடி அழகு சேர்த்திருப்பார்.
Also Read – பாடகர் மனோவின் இசை ரசிகர்களே… இந்த குவிஸ் உங்களுக்கானதுதான்!