தி.மு.க-வின் புதிய சுகாதாரத் துறை அமைச்சர் ரேஸில் சைதை தொகுதி எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ எழிலன் இருக்கிறார்கள். ரேஸில் முந்துவது யார்?
10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்த தி.மு.க, அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதற்கான வேலைகள் அறிவாலயத்திலும், ராஜ்பவனிலும் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எப்படியாவது அமைச்சரவையில் இடம்பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
ஆனால், முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினின் யோசனைகள் அனைத்தும், கொரோனா சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? அதற்கான பணிகளை திறமையாக மேற்கொள்ள, சுகாதாரத்துறையை யாருக்குக் கொடுக்கலாம் என்பதில்தான் உள்ளது. அதில், மு.க.ஸ்டாலினின் பரிசீலனையில், சென்னை சைதாப்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்தான் முதலிடத்தில் உள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று வேலை பார்ப்பவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும் இருப்பதால், மா.சுப்பிரமணியன் அந்த ரேஸில் முன்னணியில் உள்ளார்.
காரணம், மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது, புயல், வெள்ளம், சிக்கன்குனியா பாதிப்பு ஏற்பட்டது போன்ற இக்கட்டான நேரங்களில் சிறப்பாகப் பணியாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர். அதோடு, கொரோனா முதல் அலை தொடங்கிய நேரத்தில், அவர் தனது தொகுதியான சைதாப்பேட்டையில், அனைவருக்கும் முன்னோடியாக இருந்து கொரோனா நலத்திட்ட உதவிகளை சிறப்பாக வழங்கியவர்.
அந்த நேரத்தில், மா.சுப்பிரமணியனின் மூத்த மகன் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்திருந்தார். அந்தத் துயரையும் கடந்து வேலை பார்த்த மா.சுப்பிரமணியனுக்கு சுகாதாரத்துறையைக் கொடுக்கலாம் என்பது ஸ்டாலினின் முடிவாக உள்ளது. அதே நேரத்தில், வேறு சிலர் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் எழிலன் நாகநாதனுக்குக் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.