கொரோனா கொடும்தொற்று செய்திகள் ஆக்கிரமித்திருக்கும், தமிழ்நாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில், அவற்றையும் மீறி லைம்லைட்டில் இருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றவர், அப்போதெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். சட்டமன்றத்திற்கு அவர் வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. அதுபோல, தி.மு.க நிகழ்ச்சிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்களிலும் அவர் ஸ்கோர் செய்ததில்லை.
ஆனால், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘கோயில் அடிமை நிறுத்து’ என்று எந்தவிதமான அர்த்தமும் தொனிக்காத, ஒரு வாசகத்தை முன்வைத்து, விநோதமான பிரச்சாரம் ஒன்றை முன்வைத்தார். தமிழகத்தில், அரசாங்கத்தின் இந்து சமய அறநிலையத்துறை வசம் உள்ள கோயில்களை மீட்டு, தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான், ஜக்கி வாசுதேவின் அந்தப் பிரச்சாரத்திற்கு அர்த்தம். அதையடுத்து, ஜக்கி வாசுதேவை கடுமையான வார்த்தைகளாலும், நேர்மையான தரவுகளுடனுன், புள்ளிவிபரமாக விமர்சித்தார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அது, சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதையடுத்து, ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக, பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா களத்தில் குதித்து, ‘யார் இந்த பி.டி.ஆர்.பி.தியாகராஜன்?’ என்றார். அதற்கும் பி.டி.ஆர்.பி.தியாகராஜன் கடுமையாக எதிர்வினையாற்றினார். இந்த வாதங்கள், கருத்துக்கள், அவரை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
ஆனால், ஜக்கி விவகாரமோ… ஹெச்.ராஜாவுக்கான எதிர்வினைகள் மட்டுமல்ல… அதற்கு முன்பும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தீர்க்கமான முறையில், புள்ளி விபரங்களுடன் பல முக்கியமான-சிக்கலான விவகாரங்களில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, நீட் தேர்வு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொடர்பான விமர்சனம் என பல விவகாரங்களில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்துக்கள் மிக நுட்பமானவை; முக்கியமானவை; எதிர்தரப்பால் கூடுதல் கவனத்துடன் கவனிக்கப்பட்டவை.
ஜி.எஸ்.டி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு அவர் தெரிவித்த ஆலோசனைகள், முன்வைத்த கோரிக்கைகள், சுட்டிக்காட்டிய நிறை-குறைகள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், அந்த விவகாரங்கள் கொஞ்சம் “டிரை சப்ஜெக்ட்” என்பதால், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அப்போது ‘லைம்லைட்’டிற்கு வரவில்லை. ஆனால், ஜக்கி மற்றும் ஹெச்.ராஜா விவகாரத்தில், தரைலோக்கலாக இறங்கி அடித்தவிதம், சமூக வலைத்தளங்களில் பழனிவேல் தியாகராஜனை அனைவரையும் கவனிக்க வைத்தது.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்குப் பின்னணியில் உள்ள சுவாரசியங்கள் இதோடு முடிந்துவிடவில்லை. அவருடைய குடும்பப் பின்னணியும், கல்விப் பின்புலமும், இன்றைய தமிழக அரசியல் சூழலில் ஆச்சரியமளிப்பவை! ஆனால், அதைவிட அதிக சுவாரசியமும், ஆச்சரியமும் நிறைந்தது அவருடைய அரசியல் ‘என்ட்ரி!’ அதைப் புரிந்து கொள்ள, அவருடைய குடும்பப் பின்னணியைப் தெரிந்து கொள்வது இன்னும் சுவாரசியத்தை அதிகரிக்கும்.
100 ஆண்டு அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பம்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல… தமிழ்நாடு உருவாவதற்கு முன் இருந்த சென்னை மாகாணத்தில்(Madras Prsidency) அமைந்திருந்த சட்டமன்றம் தொடங்கி, தற்போதைய சட்டமன்றத்திற்கு என கடந்த 100 ஆண்டுகளில் நடைபெற்ற 90 சதவிகித தேர்தல்களில் பழனிவேல் தியாகராஜனின் குடும்பம் பங்கேற்றுள்ளது. அதில் பல வெற்றிகளையும், சில தோல்விகளையும் பெற்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளி தவிர்த்து, எப்போதும் சட்டமன்றத்தில் அவரது குடும்பத்தினர் முக்கியப் பொறுப்புக்களில் இருந்துள்ளனர்.
1920-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பழனிவேல் தியாகராஜனின் தாத்தா பி.டி.ராஜன், 1952-ல் நடைபெற்ற தேர்தல்கள் வரை அனைத்திலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1932-37 காலகட்டத்தில் அவர்தான் பொதுப்பணித்துறை அமைச்சர். சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் பி.டி.ராஜன் ஓராண்டு பொறுப்பு வகித்தார். 1957 தேர்தலில் அவர் தோல்வி அடைந்த பிறகு, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
தலா 10 ஆண்டுகள் இடைவெளி!
பழனிவேல் தியாகராஜனின் தாத்தா பி.டி.ராஜன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அடுத்த 10 ஆண்டுகளுக்கு மட்டும், அவரது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கவில்லை. ஆனால், 1967 தேர்தலில், பழனிவேல் தியாகராஜனின் தந்தை பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தொடங்கி 2006 வரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஏதோ ஒரு பொறுப்புக்கு போட்டியிட தி.மு.க அவருக்கு சீட் கொடுத்தது. தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நேரங்களில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனுக்கு முக்கியப் பதவிகள் கொடுக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். தி.மு.க-வின் சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவராக பி.டி.ஆர் பழனிவேல் ராஜனை நியமிக்கும் அளவுக்கு, கருணாநிதி அவரிடம் நம்பிக்கை வைத்திருந்தார். 2006-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியேற்பை முடித்துவிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், திண்டுக்கல் சென்று கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு, ரயிலிலேயே உயிரிழந்தார். அப்போது அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார் பழனிவேல் தியாகராஜன். அப்போதுதான், தியாகராஜனை பரவலாக மதுரைவாசிகளுக்கே தெரியவந்தது. அந்தளவுக்கு தமிழகத்தோடும், தமிழக அரசியலோடும் எந்தத் தொடர்பும் இன்றி ரகசிய மனிதரைப்போல்தான் தியாகராஜன் இருந்தார்.
பழனிவேல்ராஜன் இறந்ததையடுத்து, அடுத்த 10 ஆண்டுகள் பி.டி.ஆர் குடும்பம் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. தந்தையின் இறுதிச் சடங்கை முடித்த தியாகராஜன் மீண்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டார். அதன்பிறகு, மதுரையும், மதுரையை தலைநகரமாக வைத்து அரசியல் செய்த தென்மாவட்டங்களும், முழுமையாக மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. (பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் உயிரோடு இருந்தபோது, அவர் கொஞ்சம் அழகிரிக்கு முட்டுக்கட்டை போட்டு வைத்திருந்தார்.)அதோடு, தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியையும், கருணாநிதிக்கு அழகிரிக்கு கொடுத்த பிறகு, தென் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத முதலமைச்சராக அழகிரி வலம் வந்தார் . ஆனால், அதெல்லாம் தி.மு.க ஆட்சியில் இருந்த வரைதான் நீடித்தது. 2011-ல் ஆட்சியை தி.மு.க ஆட்சியை இழந்தபிறகு காட்சிகள் மாறின.
காட்பாதர், நாயகன், தேவர் மகன் ஸ்டைல் ‘ரீ என்ட்ரி’!
கருணாநிதியின் மூத்த வாரிசு அழகிரிக்கும், அரசியல் வாரிசான ஸ்டாலினுக்கும் இடையில் சகோதரச் சண்டை முற்றியது. அதில், தி.மு.க வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம் என இரண்டாக உடைந்திருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அழகிரியின் நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, கருணாநிதி அவரைக் கட்சியில் இருந்து விலக்கினார். அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், மதுரையும், தென் மாவட்டங்களும் அவர் கையில்தான் இருந்தன. அதை தன் வசப்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலின் மெல்ல அதற்கான வேலைகளைத் தொடங்கினார். அழகிரியின் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசி, தன் பக்கம் இழுக்கத் தொடங்கினார். மெல்ல மெல்ல தென்மாவட்டங்கள் ஸ்டாலின் பக்கம் திரும்பினாலும், மதுரை மட்டும் அவருக்குச் சவாலாக இருந்தது.
மதுரையில் இருந்த தி.மு.க நிர்வாகிகளான மூர்த்தி, தளபதி, வேலுச்சாமி, தமிழரசி, தேன்மொழி கோபிநாதன் போன்றவர்கள் எல்லாம் அழகிரியின் அதிதீவிர விசுவாசிகளாகவே இருந்தனர். அதை உடைக்க நினைத்த ஸ்டாலின், அவர்களுக்கு மாற்று தேட ஆரம்பித்தார். தனக்கான விசுவாசியாகவும் இருக்க வேண்டும், அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் அரசியலை சமாளிக்கும் ஆற்றல் உள்ளவராகவும் இருக்க சரியான ஆள் என மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்தது, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைத்தான்!
அதையடுத்து, சிங்கப்பூரில் ஸ்டாண்டர் சாட்டர்டு வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தமிழகம் திரும்பினார். மதுரையில் அரசியல் டான்களாக வலம் வந்த தனது தாத்தா, அப்பாவின் செல்வாக்கை மீண்டும் பிடிக்க மதுரை அரசியலை மையமாக வைத்து, தி.மு.க-விற்குள் அடியெடுத்து வைத்தார் பழனிவேல் தியாகராஜன்.
2014-ல் அவர் தமிழகத்தில், திமுக அரசியலை கையில் எடுப்பதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் ‘திங்க் டாங்க்’கில் முக்கியமான ஒரு ஆளாகவும் ஆலோசகராகவும் பழனிவேல் தியாகராஜன் இருந்தார். அந்தத் தொடர்புகளை அவர் பெறுவதற்கு அவர் குடும்பப் பாரம்பரியத்தைவிட, அவர் திருச்சி என்.ஐ.டியில் படித்த கெமிக்கல் என்ஜினியரிங் படிப்பும், அமெரிக்காவின் பஃபலோ பல்கலைக் கழகத்தில் பெற்ற முனைவர் பட்டம் உள்ளிட்ட கல்வித்தகுதிகள்தான் முக்கியக் காரணங்களாக இருந்தன.
தி.மு.க-வின் டிஜிட்டல் முரசொலி!
ராகுல் காந்தியின் திங்க் டேங்கில் இருந்தாலும், அவர் காங்கிரஸ் கட்சியில் போய்ச் சேர்ந்துவிடவில்லை. மாறாக, ஸ்டாலின் தலைமையை ஏற்று, அழகிரியால் மதுரையில் டேமேஜான தி.மு.க இமேஜே சரி செய்யும் பொறுப்பைத்தான் முழுமையாக ஏற்றுக் கொண்டார். அந்த நேரத்தில், ஜி.எஸ்.டி வரிவிதிப்புத் தொடர்பான விவாதங்கள் தொடங்கின. அதில் தனது கருத்துக்களை புதிய கோணத்தில் அவர் வெளிப்படுத்தியது, தி.மு.க தலைமையிடம் அவருக்கு நல்ல பெயரை மேலும் பெற்றுக் கொடுத்தது. அதுபோல், தி.மு.க-விற்கு வலுவான ஐ.டி.விங்க் ஒன்றை பழனிவேல் தியாகராஜன் உருவாக்கினார். பிரசாந்த் கிஷோர் டீம், உதயநிதி டீம் போன்றவை எல்லாம் தேர்தல் நேரத்தில் ஊதியத்திற்கு அமர்த்தப்பட்ட தற்காலிக குழுக்கள்தான். ஆனால், பழனிவேல் தியாகராஜன் அடித்தளம் போட்டுவைத்த தி.மு.க ஐ.டி விங்க்தான் அடுத்த தலைமுறைக்கு அந்தக் கட்சியை எடுத்துச் செல்லப்போகிற “டிஜிட்டல் முரசொலி”யாகத் தன் வேலையைத் தொடங்கியது. அது கட்சிக்குள் அவருக்கு மேலும் பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
2016 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்தியத் தொகுதியில், தி.மு.க சார்பில் போட்டியிட மு.க.ஸ்டாலின் அவருக்கு சீட் கொடுத்தார். அப்போதே இவரைத் தோற்கடிக்க அழகிரியின் ஆதரவாளர்கள் உள்ளடி வேலைகளைப் பார்த்தனர். ஆனால், அவற்றை உடைத்து, பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றார். இருந்தாலும், தி.மு.க-விற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதன்பிறகு ஜெயலலிதா மறைவு, சசிகலா முதலமைச்சர் பதவிக்குத் தேர்வு, கருணாநிதி மறைவு, பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, எடப்பாடி முதலமைச்சரான பரபரப்பு என தமிழக அரசியல் களத்தில் வேறு விவகாரங்கள் பிரதானமாக இருந்தன. அந்த நேரத்தில் பழனிவேல் தியாகராஜனின் அரசியல் என்ட்ரி கவனம் பெறவில்லை.
ஆனால், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புப் பெற்ற பழனிவேல் தியாகராஜன், இந்தமுறையும் வெற்றி பெற்றார். கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகக் கருதப்படும், நிதியமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கிக் கொடுத்தார். இந்தப் பதவியை அதிகம் எதிர்பார்த்தவர் துரைமுருகன். 40 ஆண்டுகளாக எம்.எல்.ஏ பதவியிலும், அமைச்சர் பதவியிலும், தி.மு.க-வின் பொருளாளர், பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்துகளைப் பெற்ற துரைமுருகனைவிட, பழனிவேல் தியாகராஜன் தான் அந்தப் பொறுப்புக்கு சரியானவர் என மு.க.ஸ்டாலின் முடிவு செய்ததால், துரைமுருகனின் முயற்சி பலிக்கவில்லை. மேலும், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் தவிர்த்து நிதியமைச்சர் பதவியை தி.மு.க-வில் வேறு யாரும் வகித்ததில்லை. அந்தளவிற்கு அந்தக் கட்சியில் முக்கியமானதாகக் கருதப்படும் பதவியைப் பெற்றுள்ள பழனிவேல் தியாகராஜன், அந்தப் பதவிக்கு நிச்சயம் பெருமை சேர்த்து, நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா என்பதை அவரது எதிர்கால செயல்பாடுகளைப் பொறுத்தே அறிய முடியும்.
சென்னையில் இருந்து… மதுரையில் அரசியல்!
பழனிவேல் தியாகராஜனின் வீடு மதுரையில் அரண்மனையைப் போன்றது. ஆனால், அங்கு அவர் அதிகமாக வசித்ததே இல்லை. 1987-ஆம் ஆண்டே அமெரிக்காவிற்கு படிக்க சென்றுவிட்ட பழனிவேல் தியாகராஜன், அவருடன் கல்லூரியில் படித்த மார்கரெட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பழனி தியாகராஜன், வேல் தியாகராஜன் என இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலுமே அதிகம் வசித்த பழனிவேல் தியாகராஜன், இந்தியா திரும்பிய பிறகு, சில ஆண்டுகள் மட்டுமே மதுரை வீட்டில் வசித்தார். அதன்பிறகு, குடும்பத்துடன் சென்னைக்கு வந்துவிட்டார். ஆனால், சென்னையில் இருந்தாலும், வாரத்தில் ஒருமுறை அல்லது மாதத்தில் ஒருமுறையாவது மதுரைக்கு சென்று, மீனாட்சி அம்மனை தரிசித்து விடுவார். அந்த சமயங்களில் மட்டும், அவர் மதுரை வீட்டில் தங்குகிறார். அதோடு, சென்னையில் இருந்தாலும், மதுரை அரசியலில் தன் பிடி தளராமல் பார்த்துக் கொள்கிறார்.