ஆயிரம் விளக்குத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன் என்பதும், அவர் கலைஞருக்கு மருத்துவம் பார்த்தவர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். இன்னும் சிலருக்கு அவருடைய அப்பா நாகநாதன் முனைவர் பட்டம் பெற்றவர், பொருளாதாரப் பேராசிரியர் என்பதும், தமிழக அரசின் திட்டக் குழு தலைவராக இருந்தார் என்பதும் தெரியும். ஆனால், அந்தக் குடும்பத்தைப் பற்றி தெரியாத செய்திகள் நிறைய உண்டு. சுவாரசியமான அந்த செய்திகள் பற்றி பார்க்கலாம்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் தென்னாட்டு ஜான்சிராணி என்று போற்றப்பட்டவர், தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு முதன் முதலில் தேர்வு செய்யப்பட்டவர் கடலூர் அஞ்சலைஅம்மாள். அவருடைய மகள் அம்மாக்கண்ணு அம்மையார். 9 வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அஞ்சலை அம்மாள், சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலையான போது, அவருடைய தயார் அஞ்சலை அம்மாள் சிறையில் இருந்தார். அதனால், காந்தியடிகளே அம்மாக்கண்ணு அம்மையாரை அழைத்துச் சென்று, தனது ஆசிரமத்தில் சில காலம் வளர்த்தார். காந்தியடிகளால் வளர்க்கப்பட்ட அம்மாக்கண்ணு அம்மையார்-விடுதலைப் போராட்ட வீரரும், கார்ல்மார்க்சின் தாஸ்காப்பிடல் நூலை மொழிபெயர்த்தவருமான ஜமதக்கனியின் பெயரன்தான் எழிலன் நாகநாதன்.
அம்மாக்கண்ணு அம்மையார்-ஜமதக்கனியின் மகள் சாந்தி ஜமதக்கனி-முன்னாள் திட்டக் குழுத் தலைவரான நாகநாதன் தம்பதியின் மகனான எழிலன் நாகநாதன், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் பயின்றவர். இவருடைய தந்தையார் நாகநாதன் தமிழக அரசின் திட்டக்குழு தலைவராக இருந்தார் என்பதைவிட, 2006-ஆம் ஆண்டு இலவச கலர் டி.வி புகழ் தி.மு.க தேர்தல்அறிக்கையை வடிவமைத்தவர். அந்தத் தேர்தல் அறிக்கைதான் அன்றைக்கு தி.மு.க-வின் வெற்றிக்கு உதவியதோடு, அகில இந்தியாவைவும் தி.மு.க-வின் பக்கம் திருப்பியது. அதற்காகவே, கலைஞர் நாகநாதனுக்கு திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த தேர்தலில் நாகநாதன் தோல்விஅடைந்தாலும், அவருக்கு திட்டக்குழுத் தலைவர் பதவியைக் கொடுத்தார். அதன்பின்பு 2011 தேர்தல் தோல்விக்குப் பிறகு, கலைஞர் – நாகநாதன் நட்பில் சிறிய இடைவெளி விழுந்தது. அந்த இடைவெளியை அவருடைய மகன் எழிலன் நாகநாதன் நிரப்பினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியிலும், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலையிலும் மருத்துவம் படித்த எழிலன் நாகநாதன் பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம்பெற்றவர். கலைஞரின் ஆஸ்தான் மருத்துர் கோபால் இல்லாத சமயங்களில், கலைஞருக்கு சிகிச்சையைத் தொடர்வதில் உதவி செய்தார். அந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் துர்கா ஸ்டாலின் வட்டத்திற்குள் எழிலன் நாகநாதன் வந்திருந்தார். குறிப்பாக 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கலைஞர் உடல்நலன் மிகுந்த பாதிப்பிற்குள்ளான நேரத்தில் எழிலன் நாகநாதன்தான் அவரை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். அந்த நேரத்தில் அவர் ‘இளைஞர் இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி வந்தார். அந்த அமைப்பு மூலம், ஈழத் தமிழர் பிரச்சினை, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் பிரச்சினை, எட்டு வழிச்சாலை போன்ற பிரச்னைகளில் உரத்துக் குரல் கொடுப்பது, அது தொடர்பான போராட்டங்களில் பங்கேற்பது என்று ஆக்டிவ்வாக இருந்தார். அதோடு தொலைக்காட்சி விவாதங்களில் மூடநம்பிக்கை எதிர்ப்பு, திராவிட அரசியல் போன்ற தலைப்புகளில் ஆர்வமுடன் பங்கேற்று வந்தார்.
இதுபோன்ற தகுதிகளை வைத்து, தி.மு.க சார்பில் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார். துர்கா ஸ்டாலின் ஆசி இருந்ததாலும், கடைசி காலத்தில் கலைஞருக்கு அவர் செய்த சேவைகளைக் கருத்தில் கொண்டும் தி.மு.க-வில் சீட் கொடுக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் 4 முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்குத் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், உதயநிதி மூலம் அந்தத் தொகுதியைப் பெற ஹசன் முகமது ஜின்னா முயற்சி செய்தார். ஆனால், அவரை அந்தப் போட்டியில் ஓரம் கட்டி எழிலன் நாகநாதன் சீட் வாங்கினார். உதயநிதியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகச் சொன்ன குஷ்பு, தன் பிரசாரத்தை அவருடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில்தான் தொடங்கினார். ஆனால், திடீரென குஷ்புவுக்கு பா.ஜ.க-வில் ஆயிரம் விளக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டு, அவர் எழிலன் நாகநாதனை எதிர்த்துப் போட்டியிட்டார். குஷ்புவைவிட 32,000 வாக்குகள் அதிகம் பெற்று எழிலன் நாகநாதன் வெற்றி பெற்றார்.
2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எழிலன் நாகநாதன் போன்றவர்கள் எல்லாம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற வேட்பாளர்களாக தி.மு.க முகாமிலும் சரி… பத்திரிகையாளர்கள் மட்டத்திலும் கணிக்கப்பட்டனர். ஆனால் ஏனோ, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அந்த வட்டத்தில் இருந்து எழிலன் நாகநாதன் கழற்றிவிடப்பட்டுள்ளார். தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 2021 மே மாதம் 6-ஆம் தேதிக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று, அங்குதான் அமைச்சரவைப் பட்டியலைத் தயார் செய்தார். அப்போது எழிலன் நாகநாதனுக்குத்தான் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த ரேஸில் முன்னிலையில் இருந்தவர் எழிலன் நாகநாதன்தான். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது கட்சியிலும் சரி… மு.க.ஸ்டாலின், உதயநிதி வட்டத்திலும் சரி… அவருக்குநெருக்கமான பிணைப்பு இல்லை.
எம்.எல்.ஏ பொறுப்பிற்கு வந்துவிட்டாலும், இன்னும் சமூக அக்கறையுள்ள, சமூக நீதிவிவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஹிந்தி தெரியாது போடா என்ற பிரசாரத்தை சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கியவர் எழிலன் நாகநாதன்தான். கட்சி அரசியலில் அவருக்குப் போதிய இடம் கொடுக்கப்படவில்லை. ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், உற்சாகமாக வேலைகளைப் பார்க்கிறார். சட்டமன்றத்திற்கு சென்று வருகிறார். இவருடைய மனைவி பிரியதர்ஷினியும் மருத்துவர்தான். இவர்களுக்கு கவின் பிரபாகரன் என்ற மகனும், தென்றல் என்ற மகளும் உள்ளனர்.