சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் எப்போது ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது… ஆண்கள் தினம் கொண்டாட்டத்தின் பின்னணி என்ன?
சர்வதேச ஆண்கள் தினம்
உலகம், சமுதாயம் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆண்கள் அளித்துவரும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 19-ல் சர்வதேச ஆண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல், ஆண்கள், தங்கள் உடல், மனநலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் உழைப்பைக் கௌரவிக்கும் வகையிலும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறடு.
வரலாறு
டிரினாட் & டொபாக்கோவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் ஜெரோம் டீலக்சிங் (Jerome Teelucksingh) என்பவர், கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் 19-ல் முதல்முறையாக ஆண்கள் தினமாகக் கொண்டாடினார். தனது தந்தையின் நினைவாக அவரது நூற்றண்டு பிறந்தநாளை ஆண்கள் தினமாக அவர் கொண்டாடினார். அத்தோடு, ஆண்களும் சிறுவர்களும் எதிர்க்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பொதுவெளியில் உரையாட இந்த நாளில் ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என மற்றவர்களையும் அவர் ஊக்குவித்தார். பின்னர், வெஸ்ட் இண்டீஸ் முழுவதும் கொண்டாடப்பட்ட ஆண்கள் தினம், படிப்படியாக சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
ஆண்கள் தினத்தின் 6 அடிப்படைக் கொள்கைகள்
ஆண்டுதோறும் நவம்பர் 19-ல் 6 அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு ஆண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- அன்றாட வாழ்வில் உழைக்கும் வர்க்கமான ஆண்களை, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உருவாக்க பாடுபடுவது.
- சமூகம், இனக்குழு, குடும்பம், திருமண உறவு, குழந்தை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ஆண்கள் பங்களிப்பைக் கொண்டாடுவது.
- ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் சமூக, உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வு சிறப்பாக அமைய உறுதியளிப்பது.
- பல்வேறு தளங்களில் அவர்கள் ஒடுக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- மற்ற பாலினங்களோடான உறவை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
- ஒவ்வொருவரும் தங்கள் முழுமையான திறனை வெளிப்படுத்த முறையான வாய்ப்புகளை அளித்தல்.
ஆண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
ஆண்களின் உடல் நலன், மனநலன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதுகுறித்து பொதுவெளியில் வெளிப்படையான கலந்துரையாடலை ஊக்குவிக்கவும் ஆண்கள் தினம் வலியுறுத்துகிறது. ஆண்கள் ஒடுக்கப்படுவது குறித்தும், சமூகம், குடும்பத்துக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு குறித்தும், மற்ற பாலினங்களுடனான உறவு மேம்பட வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ளவும் ஊக்குவிக்கிறது. சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான முதல் காரணம் என்பது அடிப்படையான மனிதாபினா விழுமியங்களை எடுத்துக் கூறுவதற்கும் ஆண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான் என்கிறார்கள் ஆண்கள் உரிமைக்காகப் போராடும் அமைப்புகள்.
2021-ம் ஆண்டுக்கான கருப்பொருள்
ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் – `ஆண்கள் மற்றும் பெண்கள் இடையிலான உறவை மேம்படுத்துதல் (Better relations between men and women)’ என்பதாகும். உலகம் முழுவதும் இந்த நாளில் ஆண்களும் சிறுவர்களும் எதிர்க்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்படும். அந்த பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஆண்கள் தினம் கொண்டாட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன… சர்வதேச ஆண்கள் தினத்தை நீங்க எப்படிக் கொண்டாடுனீங்க… கமெண்ட்ல சொல்லுங்க மக்களே..!
Also Read – உங்கள் சகிப்புத்தன்மை எப்படி… சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா?