ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சுமார் மூன்று லட்சம் வீடுகள் இந்த புயலால் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் யாஸ் புயல் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அவ்வகையில், ஒடிசாவில் செய்தியாளர் ஒருவர் சாமானியர் ஒருவரிடம் “இதுபோன்ற மோசமான வானிலை நிலவும் நேரங்களில் ஏன் வீட்டை விட்டு வெளியே வருகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் சாமானியரின் வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரல்.
ஐபிஎஸ் அதிகாரியான அருண் போத்ரா உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து கருத்துக்களை தெரிவித்தனர். வீடியோவில், செய்தியாளர் அந்த நபரிடம் வீட்டை விட்டு வெளியே வந்ததற்கான காரணத்தைக் கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் அந்த நபர், “நீங்களும்தான் வெளியே இருக்குறீர்கள்” என்றார். இதற்கு பதிலளித்த செய்தியாளர்,
செய்திகளை சேகரிக்க நான் வெளியே வந்தேன்” என்றார். இதனையடுத்து அவர், அதனால்தான் நானும் வெளியே வந்தேன். நான் வரவில்லை என்றால் நீங்கள் செய்திகளை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?” என்றார். இதனை அருண் போத்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,“எவ்வளவு கனிவான மனிதராக இருக்கிறார்?” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தார்.
யாஸ் புயலானது கடந்த புதன்கிழமை காலை 9.15 மணியளவில் ஒடிசாவின் பாத்ரக் மாவட்டத்தில் உள்ள தம்ரா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் கரையைக் கடந்தபோது 130 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீடியது. கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பல கடலோர கிராமங்களில் கடல்நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டவில்லை என்றாலும் குறிப்பிட்ட நிலைக்கு நீர் மட்டம் உயரந்தது. எனவே, ஆறுகளின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவின் பத்திரமாக அப்புறப்படுத்தினர். பகல் 1:30 மணியளவில் யாஸ் புயலானது முழுமையாக கரையைக் கடந்தது. புயல் பாதிப்பால் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Also Read : `மும்பை – துபாய்; எரிபொருள் செலவு ரூ.8 லட்சம்’ – 18K டிக்கெட் எடுத்த தனியாளுக்காகப் பறந்த விமானம்!