ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஃப்ளை எமிரேட்ஸ் நிறுவன விமானம் ஒன்று மும்பையிலிருந்து துபாய்க்கு ஒரே ஒரு பயணியுடன் பறந்திருக்கிறது. 18,000 ரூபாய் டிக்கெட்டில் 360 பேர் அமரும் அந்த விமானத்தில் தனியாளாக அவர் பறந்திருக்கிறார். என்ன காரணம்?
இது நம்புவதற்கு சற்று சிரமமானதாக இருக்கலாம். ஆனால், உண்மையில் நடந்த சம்பவம்தான். மும்பையிலிருந்து துபாய்க்குக் கடந்த 19-ம் தேதி சென்ற ப்ளை எமிரேட்ஸ் நிறுவனத்தின் போயிங் – 777 ரக விமானத்தின் ஒரே ஒரு பாஸஞ்சர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புவேஷ் ஜவாரி மட்டும்தான். 360 பேர் அமரக் கூடிய அந்த விமானத்தில் மற்ற சிலரும் டிக்கெட் புக் செய்திருந்தநிலையில், தானும் புக் செய்ததாகச் சொல்கிறார் ஜவாரி.

ஆனால், அவர் பயணம் செய்த தேதியில் வேறெந்த பயணியும் இல்லாத நிலையில் தனியாளகவே பயணம் செய்திருக்கிறார் அவர். விமானத்தின் பணியாளர் குழுவோடு பேசி பொழுதைப் போக்கியதாகச் சொல்லும் அவர், தனக்கு ராசியான 18-ம் நம்பர் சீட்டை கேட்டு வாங்கி அமர்ந்துகொண்டதாகவும் கூறுகிறார். `நான் விமானத்தில் ஏறியதும், விமானப் பணிப்பெண் கைதட்டி என்னை வரவேற்றார். உள்ளே போனபிறகுதான் அதற்குக் காரணம் தெரிந்தது. அவ்வளவு பெரிய விமானத்தில் அன்றைய தினம் நான் மட்டுமே பயணியாக இருந்தேன் என்பது..’ என்று அந்தத் தருணங்களை புவேஷ் ஜவாரி கண்கள் அகல விவரித்திருக்கிறார். மும்பை – துபாய் இடையே இதுவரை 240 முறைக்கும் மேல் பயணித்திருக்கிறேன். ஆனால், இந்தப் பயணம் ஒரு வித்தியாசமான அனுபவம் என்றும் அவர் சொல்கிறார்.
`விமானப் பயணிகளுக்கான அறிவிப்பு பொதுவாக இருக்கும். ஆனால், அந்தப் பயணத்தின்போது
மிஸ்டர். ஜவேரி சீட் பெல்டை அணிந்துகொள்ளுங்கள்’ என எல்லா அறிவிப்புகளுமே எனது பெயரைக் குறிப்பிட்டே இடம்பெற்றது ஒரு புதிய அனுபவம். விமானத்தை விட்டு கீழே இறங்கியதும். ரொம்பவும் ரிலாக்ஸாகப் போய் கன்வேயர் பெல்டில் வந்த எனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டேன். அதில், என்னுடைய லக்கேஜ் மட்டும்தான் வந்தது. அது பார்ப்பதற்கு விநோதமாக இருந்தது’’ என்றும் புவேஷ் ஜவேரி தெரிவித்தார்.
என்ன காரணம்?
`இந்தியாவிலிருந்து துபாய்க்கு போயிங் 777 வகை சார்ட்டர் விமானங்களை வாடகைக்கு அமர்த்தினால் ரூ.70 லட்சம் வரை செலவாகும். அதேநேரம், அந்த விமானம் திரும்பும்போது வேறெந்த லோடும் இல்லாத நிலையில், இந்த ரேட் இரட்டிப்பாகும்’ என்று விமானப் போக்குவரத் துறை அமைச்சக வட்டாரங்களில் சொல்கிறார்கள். கொரோனா காலத்தில் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணிக்க தூதரக அதிகாரிகள், யு.ஏ.இ-யின் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. கோல்டன் விசா வைத்திருக்கும் புவேஷ் ஜவேரி, ரூ.18,000-த்துக்கு மும்பை – துபாய் டிக்கெட் எடுத்திருக்கிறார்.

மும்பையிலிருந்து துபாய் செல்ல ரூ.8 லட்சம் மதிப்பிலான 17 டன் எரிபொருள் செலவாகும் நிலையில், ஒரே ஒரு பயணிக்காக விமானம் இயக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் பேசிய விமானப் போக்குவரத்து அதிகாரி ஒருவர், “இந்தியா வரும்போது போதுமான எண்ணிக்கையில் பயணிகள் இருந்திருக்கலாம். அதனால், அவர்கள் துபாயிலிருந்து மும்பை பயணப்பட்டிருக்கலாம். எந்தவொரு பயணியும் இல்லாவிட்டாலும் விமானம் துபாய் திரும்பி ஆக வேண்டும். அதனால், ஒரே ஒரு பயணியுடன் அந்த விமானம் பயணித்திருக்கலாம்’’ என்று காரணம் கூறியிருக்கிறார்.
Also Read – பட்டம் விடுவது முதல் மீம் வரை… தினசரி செய்யும் இந்த 5 விஷயம் சட்டவிரோதம்னு தெரியுமா?
0 Comments