குடிநீரை சுத்தமாக்கப் பொதுவாக குளோரின் பயன்படுத்தப்படுகிறது. இப்படி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் Chlorinated water என்றழைக்கப்படுகிறது. இதனால் கிடைக்கும் பலன்கள்… இருக்கும் ரிஸ்குகள் என்னென்ன?
Chlorinated water
தண்ணீரால் பரவும் நோய்கள் கோடைகாலத்தில் பரவலாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், நீங்கள் பருகும் நீரைக் கொதிக்க வைத்தோ அல்லது குளோரின் மூலம் சுத்தம் செய்தோ பயன்படுத்துங்கள் என்கிறது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம். குறிப்பாக பேரிடர் போன்ற சமயங்களில் மாசடைந்திருக்கும் குடிநீரை சுத்தப்படுத்த குளோரினைப் பயன்படுத்துவதை சுகாதாரத் துறையே பரிந்துரைப்பதாகவும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் வைரஸ்களை அழிக்கும்பொருட்டு அதில் குளோரின் எனும் வேதிப்பொருளை சேர்த்து, அதன்மூலம் சுத்திகரிப்பதன் மூலம் கிடைப்பதுதான் Chlorinated water. இதனால், தண்ணீரால் பரவும் காலரா, டயேரியா, டைபாய்டு போன்ற நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
குளோரின் மூலம் தண்ணீரை எப்படி சுத்திகரிப்பது?
குளோரின் மூலம் தண்ணீரை சுத்திகரிப்பது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சில வழிமுறைகளைக் குறிப்பிட்டிருக்கிறது.
- துணி அல்லது வடிகட்டிகள் மூலம் தண்ணீரில் இருக்கும் அளவில் பெரிதான மாசுப் பொருட்களை அகற்றுங்கள்.
- ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு சொல்லு ப்ளீச் சேர்த்து, 5% குளோரின் கரைசலைப் பயன்படுத்தவும்.
- ஒரு மணி நேரம் கழித்து, தண்ணீரை நுகர்ந்து பார்த்தால் சிறிய அளவில் வரும் குளோரின் வாசனை, சுத்திகரிக்கப்பட்டதை உணர்த்தும்.
குளோரினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
குளோரினில் இருக்கும் trihalomethanes (THMs) போன்ற தனிமங்களை அதிகமாக உட்கொள்ளும்போது, அவை ஆஸ்துமா, சிறுநீரகப் பாதையில் கேன்சர் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்த வல்லவை. அதேபோல், குளோரின் அதிகம் சேர்க்கப்பட்ட தண்ணீரின் சுவை, அதை நீங்கள் குடிக்க முடியாதபடி இருக்கும். குடிநீரை சுத்திகரிக்க எவ்வளவு குளோரினைப் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை வல்லுநர்களின் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாடற்ற வகையிலான குளோரின் பயன்பாடு, உங்கள் உடல்நலனைக் கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இதனால், பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயெ குளோரினைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
Also Read – எப்போதும் டயர்ட் ஆக உணர்கிறீர்களா… இந்த 5 காரணங்களாக இருக்கலாம்!