மில்லினியல் ஃபாதர்ஸ், அவர்களது பெற்றோர்கள் இருந்த சூழலை விட வித்தியாசமான சூழலிலும் முற்றிலும் வேறுபட்ட லைஃப்ஸ்டைலோடும் வாழ்பவர்கள். ஒரு தலைமுறை இடைவெளி முந்தைய தலைமுறைகளை விட தற்போதைய சூழலில் நிறையவே மாற்றங்களைக் கண்டிருக்கிறது எனலாம். அதேபோல், அவர்களின் வாழ்க்கை முறையும் ரொம்பவே மாறியிருக்கிறது. மில்லினியல் ஃபாதர்ஸ் என்ற வரையறை 2021-ம் ஆண்டில் 23 – 38 வயது வரையிலான தந்தைகளைக் குறிக்கும் சொல்.
குழந்தை வளர்ப்பில் மில்லினியல் ஃபாதர்ஸ் செய்யும் 5 முக்கியமான விஷயங்கள்!
நேரம் செலவிடுதல்
முந்தைய தலைமுறைகளைப் போல் அல்லாமல் மில்லினியல் ஃபாதர்ஸ், தங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுகிறார்கள். 90ஸ் தந்தைகளை விட நான்கு மடங்கு கூடுதலான நேரத்தை அவர்கள் குழந்தைகளுக்காக ஒதுக்குவதாகச் சொல்கிறது அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழக ஆய்வு. குடும்பத்தோடு படம் பார்ப்பது, வாக்கிங், விளையாட்டு என அதிகமான நேரத்தை செலவிடுவதையே விரும்புகிறார்கள். குழந்தைகள் மட்டுமல்லாது குடும்பத்தோடு நெருக்கமாக இருக்க மெனக்கெடுகிறார்கள்.

குழந்தைப்பேறு விடுப்பு
குழந்தைகள் பிறந்தபிறகு வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பொதுவாக மகப்பேறு விடுப்பு எடுப்பதுண்டு. அதற்காக உலகமெங்கிலும் சட்டங்களே இயற்றப்பட்டிருக்கின்றன. அதேபோல், குழந்தை பிறப்பை அடுத்து தங்கள் குடும்பத்தின் புது வரவைப் பார்த்துக்கொள்ள மில்லினியல் ஃபாதர்ஸும் குழந்தைப்பேறு விடுப்பு எனப்படும் Paternity Leave எடுப்பது வழக்கமாகியிருக்கிறது. குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என்றாலே அது தாயின் வேலை மட்டுமே என்ற நிலை மாறி, தந்தைமார்களும் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள்.
புரிதல்
தங்கள் குழந்தைகளிடம் ஓப்பன் மைண்டடாக இருந்து அவர்களைப் புரிந்துகொள்ள தந்தைகள் ரொம்பவே முயற்சி செய்கிறார்கள். டீனேஜ் என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதைப் புரிந்துவைத்திருக்கும் அவர்கள், தங்கள் குழந்தைகள் பள்ளி சூழல், போட்டியான உலகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதையும் ஏற்றுகொள்கிறார்கள். அத்தோடு வெளிப்புற சூழல்கள் கொடுக்கும் அழுத்தத்தில் இருந்து தங்கள் குழந்தைகள் வெளிவரவும் மனமகிழ்வோடு உதவுகிறார்கள்.

அடையாளம்
மில்லியனியல் ஃபாதர்ஸ் முந்தைய தலைமுறை பெற்றோர்களோடு வேறுபட்டு நிற்கும் மற்றொரு இடம், தந்தை என்ற ஸ்தானத்தை முக்கியமான அடையாளமாகப் பார்க்கும் தன்மை. அமெரிக்காவின் வாஷிங்டனில் இருக்கும் Pew Research Center நடத்திய ஆய்வு ஒன்றில் 57% ஆண்கள், தந்தை என்ற அடையாளத்தை முக்கியமானதாகக் கருதுவதாகக் கூறியிருக்கிறார்கள். இதே கேள்விக்கு 58% தாய்மார்கள் ஆம் என பதிலளித்திருக்கிறார்கள்.
வீட்டு வேலைகள்
குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதோடு தாய்மார்களின் வொர்க் லோடைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளையும் மில்லினியல் ஃபாதர்ஸ் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த விவகாரத்தில் முந்தைய தலைமுறை தந்தைகளை விட அதிக ஈடுபாட்டோடு தங்களை அவர்கள் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சுத்தம் செய்தல், சமையல், மளிகைப் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட வேலைகளில் அவர்கள் தங்கள் லைஃப் பாட்னருக்கு உதவிகரமாக இருக்கிறார்கள்.
நீங்க மில்லினியல் ஃபாதரா… உங்க குழந்தைகளோடு தினமும் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்… உங்க அனுபவம் எப்படி… கமெண்ட்ல பகிருங்கள் நண்பர்களே..!
Also Read – இந்த 6 விஷயங்கள் உங்ககிட்ட இருந்தா நீங்க Toxic பேரண்ட்!
0 Comments