லட்சக்கணக்கில் செலவழித்து வீடு வாங்கும்போது சில ஆயிரங்கள் செலவழித்து மதிப்பீடு செய்து வாங்குவதே சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். ஒரு வீட்டை எந்த அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள்… அதற்கான நடைமுறைகள் என்ன?
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு கனவாக இருக்கும். கனவு வீட்டை வாங்கத் தயாராகிக் கொண்டிருப்பவரா நீங்கள்… வீட்டை வாங்குவதற்கு அதை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். வீட்டை எப்படி மதிப்பிடுகிறார்கள்னு தெரிஞ்சுக்கலாமா? ஒரு வீட்டை வாங்குவதற்கு முன்பு இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று வில்லங்கம், மற்றொன்று விலை.

வில்லங்கம்
வீட்டின் பத்திரத்தை வாங்கி அந்த சொத்தில் ஏதேனும் வில்லங்கங்கள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே வாங்க முடிவெடுங்கள். தாய்ப்பத்திரத்தைக் கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்திலோ அல்லது ஆன்லைனிலோ வில்லங்கம் பார்க்க முடியும். பத்திரம் தொலைந்துவிட்டது என டூப்ளிகேட் பத்திரம் கொடுக்கப்பட்டால் உஷாராக இருப்பது அவசியம் என்கிறார்கள் வல்லுநர்கள். பத்திரத்தை வைத்து எதாவது ஒரு இடத்தில் கடன் பெற்று, முறையாகச் செலுத்தாமல் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் மூலம் டூப்ளிகேட் பத்திரம் வாங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் இதற்கென பிரத்யேகமாக இருக்கும் Competent Lawyers எனப்படும் வழக்கறிஞர்கள் உதவியை நாடினால், அந்த சொத்தின் வில்லங்கங்கள் குறித்து தெளிவாக விசாரித்து நீங்கள் ஒரு முடிவெடுக்க உதவுவார்கள்.
வீடு மதிப்பீடு – 7 பாயிண்டுகள்

- வீடு மதிப்பீடு என்பது வாங்குபவர் – விற்பவர் இடையே ஒரு புரிதலோடு மேற்கொள்ளப்படும் நடைமுறை. இருவருக்கும் சந்தேகம் ஏற்படும் போது மத்திய அரசில் பதிவு செய்த மதிப்பீட்டாளரின் உதவியை அணுகலாம்.
- வீடு அமைந்திருக்கும் மனை, வீடு, வீட்டிலிருக்கும் வசதிகள், இதர அம்சங்கள் என 4 விஷயங்கள் வீட்டை மதிப்பிடுவதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் அம்சங்களாகும்.
- வீடு அமைந்திருக்கும் மனையின் மதிப்பு என்பது அன்றைய சந்தை நிலவரத்தைப் பொறுத்து கணக்கிடப்படும். வீட்டைப் பொறுத்தவரையில், கட்டப்பட்டிருக்கும் பரப்பளவு, கட்டடத்தின் வயது, சுவரின் அகலம், உறுதித் தன்மை, வீட்டை கட்டிய நிறுவனம்/கட்டுநர் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- வீட்டின் மொத்த மதிப்பானது கட்டப்பட்ட ஆண்டில் இருந்து ஆண்டுக்கு தலா ஒன்றரை சதவிகிதம் குறைக்கப்படும். உதாரணமாக, வீடு கட்டப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியிருந்தால் 15% தேய்மானமாகக் குறைக்கப்படும்.
- வீட்டின் உள் அலங்காரம், வீட்டில் இருக்கும் வசதிகள், வாஸ்து, ஃபர்னிச்சர் போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- வீட்டின் சாக்கடை வசதி, தண்ணீர் வசதி, கழிவுநீர் வடிகால் அமைப்பு, மோட்டார் வசதி போன்றவை இதர அமசங்களாகக் கணக்கில் கொள்ளப்படும்.
- இந்த அம்சங்கள் அடிப்படையில் வீட்டின் தற்போதைய மதிப்பு (Present Worth) கணக்கிடப்படும். வீட்டின் அருகில் கோயில், பள்ளி, வங்கி, கல்லூரி உள்ளிட்ட வசதிகள் இருந்தால், வீட்டின் மொத்த மதிப்பான பிரசண்ட் வொர்த்தை விட அதிகமாகும். அதேநேரம், டாஸ்மாக், மீன் மார்க்கெட் போன்றவை வீட்டுக்கு அருகே அமைந்திருந்தால் பிரசண்ட் வொர்த்தை விட விலை குறைவாகும்.
Also Read – ஆன்லைன் ஆஃபர் டே சேல்ஸ் ஷாப்பிங் – செய்யக் கூடாத 7 தவறுகள்!
0 Comments