தண்ணீரில் அமுக்கப்பட்ட காற்று நிரப்பப்பட்ட பந்து எப்போது வெளியே வருவோம் என்ற எதிர்பார்ப்போடு சரியான சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கும் என்பார்கள். அதே அடிப்படைதான் இந்த Revenge Shopping-க்குக்கும். என்ன என்று கேட்கிறீர்களா… சொல்கிறேன்… கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2020 ஜனவரில் சீனாவில் பெரும்பாலான ஷாப்பிங் மால்கள் தொடங்கி, கடைகள் வரையிலும் இழுத்து மூடப்பட்டன. அதன்பின்னர், கொரோனா பரவல் குறைந்த நிலையில், 2020 ஏப்ரல் மாதத்தில் சீனாவின் ரீ-டெய்ல் மார்க்கெட் திறந்துவிடப்பட்டது.
சீனாவின் கெங்சூ பகுதியில் இருக்கும் பிரெஞ்சு பிராண்டான Hermes’ நிறுவன ஷோ ரூமில் மட்டும் திறக்கப்பட்ட முதல் நாள் விற்பனை 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் (தோராயமாக ரூ.20.02 கோடி) தாண்டியது. சீனாவில் ஒருநாள் விற்பனை ரெக்கார்டுகள் பலவற்றையும் அந்த நாள் விற்பனை ஜஸ்ட் லைக் தட் தகர்த்தெறிந்தது. சர்வதேச சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் இதனால், ஒரே நைட்டி 20% அளவுக்கு எகிறியது. குவாரண்டீனில் இருந்து வெளிவந்த மக்கள் பலரும் ரிவெஞ்ச் ஸ்பெண்டிங் எனப்படும் அதி தீவிரமான ஷாப்பிங்கில் இறங்கினர். குறிப்பாக, சீன மக்கள் அத்தியாவசியமல்லாத ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவித்தனர். லக்ஸுவரி பிராண்டுகள் விற்பனை வழக்கத்துக்கும் மாறாக அதிகரிக்கத் தொடங்கியது. மனநல நிபுணர்கள் இதையே ரிவெஞ்ச் ஷாப்பிங் அல்லது ரிவெஞ்ச் ஸ்பெண்டிங் என்றழைக்கிறார்கள்.
Revenge Shopping
இந்த சொல்லாடலின் தொடக்கமும் சுவாரஸ்யமானது. வரலாறைப் புரட்டிப் பார்த்தால், மேற்கத்திய நாடுகளுக்கான தனது எல்லையை சீனா எப்போதும் மூடியே வைத்திருக்கிறது. ஆனால், 1970-களின் இறுதியில் சீனா மேற்கத்திய நாடுகளுக்கான கதவைத் திறந்துவிட்டது. ஓப்பன் மார்க்கெட் கலாசாரம் சீனாவை ஆட்டுவிக்கத் தொடங்கிய அந்த தொடக்க காலத்தில் சீன மக்கள், வெளிநாட்டுப் பொருட்கள் தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாங்கிக் குவித்தனர். வெளிநாட்டுப் பொருட்களுக்கு உரிமையாளர்களாக இருப்பது ஒருவகை கௌரவம் என்று கருதி ஆடம்பரப் பொருட்களின் மீதான தங்கள் ஆசையை வெறித்தனமாக வெளிப்படுத்தினர். குறிப்பாக, 1980களின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான பத்தாண்டுகளில் சீனாவில் வெளிநாட்டு பிராண்டுகளின் விற்பனை ஏகத்தும் எகிறியது. அப்போதுதான் Revenge Shopping என்ற சொல்லாடல் முதல்முறையாகப் பயன்பாட்டுக்கு வந்தது.
அந்த சூழ்நிலை கொரோனாவில் தற்போது மீண்டு வந்திருக்கிறது. திடீரென உங்களிடமிருந்து ஒரு ஆண்டு முழுவதையும் பறித்துக் கொண்டு, எந்த வேலையையும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு உங்கள் எதிர்வினை எப்படிப்பட்டதாக இருக்கும். ஒரு ஆண்டு முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் நீங்கள்?… கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் போது காசிமேடு மீன் மார்க்கெட்டிலும் மற்ற மார்க்கெட்டுகளிலும் மக்கள் சாரைசாரையாகப் படையெடுத்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இதுவும் ஒருவகையில் Revenge Shopping வகையறாவில் சேர்ந்ததுதான்.
கொரோனா ஊரடங்கால் அமெரிக்கர்கள் சுமார் 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.12 லட்சம் கோடி) அளவுக்கு சேமிப்பை கையிருப்பு வைத்திருக்கிறார்கள் என்கிறது பிரபல ப்ளூம்பெர்க் இதழ். அதேபோல், பிரான்ஸ் மக்கள், தங்கள் குடும்ப செலவுகள் வகையில் (தோராயமாக ரூ.4.7 லட்சம் கோடி) அளவுக்கு சேமித்திருப்பதாக அந்நாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்றின் கணக்கு சொல்கிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மொத்தமாக சந்தைகள் திறக்கப்பட்டால் இந்த பணம் மொத்தமாக எங்கு செல்லும் என்ற கேள்வி நமக்கு எழாமல் இல்லை. அத்தியாவசிய பொருட்கள் என்பதில் ஓரளவுக்கே செலவழிக்க முடியும். அதேநேரம், ஆடம்பரப் பொருட்களில் முதலீடு என்பது அளவற்றது. கொரோனாவால் உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், லம்போர்கினி ஆடம்பர கார்களின் தேவை என்பது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. உற்பத்தி எண்ணிக்கையைத் தாண்டி முன்பதிவு செய்திருப்பவர்கள் பட்டியல் நீண்டிருப்பது Revenge Shopping-ன் தீவிரத்தை நமக்கு ஓரளவுக்குப் புரியவைக்கும்.
இந்தியாவில் என்ன நடக்கும்?
கொரோனா இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது இந்தியா. இப்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கும் நிலையில், படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால், இந்தியாவில் Revenge Shopping-ன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு. வாஷிங்டனில் இருக்கும் Pew Research சென்டரின் ஆய்வு முடிவின்படி, பெருந்தொற்று காலத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கணக்கின்படி 2020 ஆண்டுவாக்கில் இந்தியாவில் 99 மில்லியன் மக்கள் உலக அளவில் நடுத்தரவர்க்கத்தில் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஒரு வருட ஊரடங்கு இந்த கணக்கைத் தவிடுபொடியாக்கியிருக்கிறது. சமீபத்திய கணக்கின்படி, இந்தியாவில் 59 மில்லியன் மக்கள் ஏழ்மை நிலையில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில், அது இரட்டிப்பு நிலையையையும் தாண்டி 134 மில்லியனாக இருக்கும் என்கிறது அந்த ஆய்வு. அதேபோல், 2020 ஜனவரியில் 4.3% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பார்கள் என்ற கணக்குகளைப் பொய்யாக்கி அந்த கணக்கீடு 9.7% ஆக அதிகரித்திருக்கிறது.
இந்தியா முழுவதும் சந்தைகள் பழைய நிலையில் இயங்கத் தொடங்கிய பின்னர், மக்களின் செலவழிக்கும் திறன் எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read – முரட்டு சிங்கிளா இருப்பதிலும் பாஸிட்டிவ் இருக்கு பாஸ்… என்னன்னு கேக்குறீங்களா?