90ஸ் கிட்ஸின் மனதுக்கு நெருக்கமான இடங்களில் பள்ளிகளுக்கு முக்கியமான இடம் எப்போதுமே இருக்கும். காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை பள்ளி வகுப்பு, விளையாட்டு, நட்பு, சண்டை என அதைப்பற்றி சிந்திப்பதிலேயே அவர்களின் நாள் முடிந்துவிடும். 90ஸ் கிட்ஸின் ஒரு நாளை ஆக்கிரமித்திருந்த 12 பள்ளிகால எவர்கிரீன் நினைவுகள்…
-
1 லெஜெண்டுகள்
பள்ளியில் லஞ்சுக்கு முந்தைய பீரியட் பொறுமையை ரொம்பவே சோதிக்கும். ஒருபுறம் பசி வயிற்றைக் கிள்ளும், மறுபக்கம் பாடம் என ஒரே நேரத்தில் ரெண்டு பிரச்னையை சாமாளிக்கிறதுக்குத் தனி தெம்பு வேணும். லஞ்சுக்கு முந்தைய பிரீயடில் முதல் பெஞ்ச் பசங்க தீவிரமாக பாடத்தைக் கவனிக்க, பின்னாடி இருக்க லெஜண்ட்ஸ் சிலபேரு திருட்டு டிபன் பாக்ஸைத் தொறந்து கமுக்கமாக சாப்பிட ஆரம்பிச்சிருப்பாங்க. தன்னோட டிபன் பாக்ஸைத் திறந்தா லஞ்சுல சாப்பிட எதுவும் இருக்காதுனு விவரமா அடுத்தவனோட டிபன் பாக்ஸை காலி பண்ணத் தொடங்கியிருப்பாங்க. பெரும்பாலான லெஜண்டுகள் டீச்சர்கிட்டயோ, சார்கிட்டயோ மாட்டாம முழுசா டிபன் பாக்ஸை முடிச்சிருவாங்க. அதையும் மீறி சிலநேரம் சிக்கிட்டா, `காலைல சாப்பிடல... ரொம்ப பசி’ அப்டி, இப்டினு செண்டிமெண்ட் பிட் போட்டு தப்பிச்சிருவாங்க.
-
2 புக் கிரிக்கெட்
90ஸ் கிட்ஸ் மத்தியில் பாப்புலரா இருந்த கிரிக்கெட்டை கிரவுண்ட்ல போய்தான் விளையாடணும்னு இல்லை. பாடப் புத்தகத்துலயும் விளையாடலாம்னு கண்டுபிடிச்சதே அவங்கதான். ரூல்ஸ் ஒண்ணும் பெருசா இல்லை. ரேண்டமா புத்தகத்தைத் திறக்கணும். எந்த பேஜ் வருதோ அந்தப் பக்கத்தோட பேஜ் நம்பரோட கடைசி நம்பர்தான் உங்க ஸ்கோர். கடைசி நம்பர் ஜீரோ வந்தா அவுட். இப்படி மாத்தி மாத்தி ரெண்டு பேரு அவுட் ஆகுற வரைக்கும் விளையாடலாம். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஜீரோ வர்ற வரை ஆடலாம். பத்து விக்கெட் போனதுக்கு அப்புறம் யார் அதிக ரன் எடுத்திருக்காங்களோ அவங்க வின்னர்... அவ்ளோதான் ரூல்ஸ். போரடிக்கிற நேரங்கள்ல இதுதான் பெரிய எண்டர்டெய்ன்மெண்டே...
-
3 கேட்ரேஜ் பென்சில்
அப்போலாம் இந்த பென்சில் வைச்சிருக்கதே கௌரவம்னு பள்ளிக்கூடத்துல பேசிக்குவாங்க. 9 - 11 கேட்ரேஜ் இருக்க இந்த பென்சிலை யூஸ் பண்றத விட, அதுல இருக்க கேட்ரேஜைக் காப்பாத்துறதுதான் பெரிய டாஸ்கே. அதுல ஒண்ணு மிஸ்ஸானா கூட அந்த பென்சிலையே யூஸ் பண்ண முடியாது. பக்கத்து கிளாஸ், பக்கத்து பெஞ்ச் பசங்களோட பென்சில் கேட்ரேஜை ஆட்டையப் போடுறதே சில பேரோட முழு நேர வேலையா இருக்கும். அந்த மாதிரி டைம்ல நம்ம பென்சிலைக் காப்பாத்திக்கிறதே தனி கெத்துதான். ஒவ்வொரு கேட்ரேஜுல இருக்க பென்சில் எழுதி தீர்ந்து போனவுடனே, அதை எடுத்து கீழ மாட்டுனா, மேல புதுசா பளபளனு வேறொரு கேட்ரேஜ் வந்து நிக்கும். அதெல்லாம் 90ஸ் கிட்ஸோட பரவச நிலை அனுபவங்கள்ல ஒண்ணு.
-
4 பள்ளிக்கூடத்து சாப்பாடு
என்னதான் மதியம் வீட்டுச் சாப்பாடு சாப்டாலும், பள்ளிக்கூடத்துல முட்டை போடுற அன்னிக்கு பருப்போட அந்த முட்டையை மசிச்சு அடிக்கிற சுகமே சுகம். பள்ளிக்கூடத்துப் பையில தட்டுக்குனு ஒரு நிரந்தர இடமே ஒதுக்கி வைச்சிருப்பாங்க பல பேரு. முட்டைப் பிரியர்கள் பலர், சாப்பாடு வேண்டாம்னு வீட்டுல சொல்லிட்டு அன்னிக்கு ஒருநாள் தட்டோட பள்ளிக்கூடம் வருவாங்க. மதியம் சாப்பாட்டு பெல் அடிச்சவுடனே சின்ன பசங்க தொடங்கி பெரிய அண்ணன்கள் வரைக்கும் சாப்பாடு வாங்க லைன்ல இடம்பிடிக்க பெரிய போராட்டமே நடக்கும். ஒருவழிய நம்ம டைம் வந்து நல்லா வெந்து தங்கம் மாதிரி ஜொலிக்குற பருப்போட, முட்டையும் வாங்கிட்டு மரத்து நிழல்ல நம்ம கேங்கோட வட்டமாக உக்காந்து சாப்டுறதே தனி குஷிதான்.
ரசமா, சாம்பாரான்னு தெரியாத அளவு ஒரு பதத்துல இருக்கும் பள்ளிக்கூடத்து குழம்பு. அதுக்குன்னு தனி ருசி இருக்கும். அரசுப் பள்ளிகளில் படித்த பெரும்பாலான 90ஸ் கிட்ஸின் பேவரிட் ஃபுட் லிஸ்ட்ல பள்ளிக்கூட சாம்பாருக்கு நிச்சயம் இடம் இருக்கும். அதே மாதிரி பள்ளிக்கூடத்துல வாரத்துல ரெண்டு நாள் முட்டை கொடுப்பாங்க. அப்படி முட்டை கொடுக்குற நாள்ல முட்டை சாப்பிடாதவங்களுக்கு கவனிப்பு பலமா இருக்கும். `முட்டையை வாங்கி எனக்குத்தான் கொடுக்கணும்’னு ஒரு கோஷ்வி கொய்யாப்பழம், பென்னி ஐஸ், கடலைமிட்டாய் வாங்கிக் கொடுத்து அவங்ககிட்ட காலையிலேயே ரிசர்வ் பன்ற சீன்லாம் நடக்கும். -
5 யூனிஃபார்ம் செக்கிங்
பள்ளிக்கூடங்கள்ல 90ஸ் கிட்ஸ் பார்த்து ரொம்பவே பயப்படுறது பி.இ.டி சாரோ அல்லது டீச்சராத்தான் இருப்பாங்க. காலைல பிரேயர் பெல் அடிச்சதுக்கு அப்புறம் ஸ்கூலுக்கு லேட்டா வர்றவங்களுக்கு தண்டனை கொடுக்குறது தொடங்கி வகுப்புகளை கட் அடிச்சுட்டு கிரவுண்ட்ல தஞ்சமடையுறவங்களைக் கண்டுபிடிச்சு நேரா கிளாஸுக்குக் கூட்டிட்டுப் போறதுவரை கண்டிப்புக் காட்டும் அவங்களைப் பார்த்தாலா பல பேருக்கு உதறல் எடுத்துடும். அதுவும் காலைல யூனிஃபார்ம் கரெக்டா போட்டிருக்கோமானு வர்ற செக்கிங்ல இருந்து அன் - யூனிஃபார்ம் போட்டிருக்க நாட்கள்ல தப்பிக்கிறதே ஆண்டவன் புண்ணியம்தான்.
-
6 ஒரே நோட்டில் 3 சப்ஜெக்ட்
டெய்லி பள்ளிக்கூடத்துக்கு எடுத்துட்டு வர்ற நோட்டுகளோடு எண்ணிக்கையைக் குறைக்குறதுக்கு ரொம்ப புத்திசாலித்தனமா ஒரு ஐடியா 90ஸ் கிட்ஸ் மத்தியில் பரவலா இருந்துச்சு. ஒரே நோட்டை ரெண்டாவோ மூணாவோ பிரிச்சு, இடையில இருக்க ஒரு பேப்பரை மட்டும் மடிச்சு விட்டுட்டா, முன்னாடி பின்னாடினு ரெண்டு, மூணு சப்ஜெக்டுக்கு அதையே யூஸ் பண்ணிக்கலாம். சில நேரங்கள்ல வீட்டுப்பாடம் செஞ்சு சப்மிட் பண்ணும்போது டீச்சர்கிட்ட சிக்கி அடி வாங்குனதையெல்லாம் இந்த கணக்குல எழுதிடக் கூடாது.
-
7 வானத்துல பறக்குற மொமண்ட்
டெஸ்ட், பரிட்சைல பாஸாகுறது கொடுக்குற சந்தோஷத்துக்கு எந்த அளவுக்கும் குறைச்சல் இல்லாதது, வீட்டுப் பாடத்தைப் பாராட்டி, `எக்ஸலண்ட்’னு டீச்சர் கொடுக்குற காம்ப்ளிமெண்ட். கூடுதலா ஒரு ஸ்டாரோ, ரெண்டு ஸ்டாரோ கொடுத்துட்டா நம்மள ரெண்டு, மூணு நாளைக்கு கைலயே பிடிக்க முடியாது. அப்படியே வானத்துல பறக்குற ஒரு சந்தோஷத்தை டீச்சர் கொடுக்குற ஸ்டார் நமக்குத் தரும்.
-
8 கிளாஸ் லீடர் அலப்பறைகள்
ஒவ்வொரு கிளாஸுக்கும் ஒரு லீடர் இருப்பாங்க. சாருக்கோ டீச்சருக்கோ திடீர்னு ஏதாவது வேலை வந்துட்டாலோ, ஹெச்.எம் ரூமுக்குப் போய்ட்டாலோ கிளாஸ் அமைதியா இருக்கான்னு பாத்துக்குறதுதான் இவங்க வேலை. அதுலயும் பக்கத்துல இருக்க பசங்ககிட்ட பேசிட்டு இருக்கவங்க பேரை எழுதி வைச்சுடுவாங்க. அதுலயும் புடிக்காத பசங்க பேருக்குப் பக்கத்துல, சேட்டை, மிக மிக சேட்டைனு கூடுதலா கொடுக்குற ஒவ்வொரு கமெண்டும் சாருகிட்ட வாங்குற அடியோட பலத்தை அதிகரிக்கும்.
-
9 நூதன தண்டனைகள்
கிளாஸை கட் அடிக்குறது, டெஸ்டுல ஃபெயில் ஆகுறது, சொல்லாமக் கொள்ளாம லீவ் போடுறது, ஸ்கூலுக்கு லேட்டா வர்றது - இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கு ஒவ்வொரு தண்டனை கிடைக்கும். முட்டி போடுறது, பிரம்படினு மரபான தண்டனைகள் ஒருபுறம் இருந்தாலும், யோகா ஸ்டைல்ல கை ரெண்டையும் நீட்டிக்கிட்டு லைட்டா முட்டியை முன்னாடி மடக்கி நிக்குறது ஆஃப் சிட்டிங். கை முட்டில ஸ்கேலை வைச்சு தீட்டுற தீட்டு ஒருவாரத்துக்கு எஃபெக்ட் காட்டும். ரெண்டு பேரை பக்கத்துல பக்கத்துல நிக்கவைச்சு, ஒருத்தர் காதை மற்றவர் பிடிச்சுக்கிட்டு ஒரு மணி நேரம் முட்டியை மடக்கி நிக்குறதுக்கெல்லாம் அதீத மனதைரியமும் வலி தாங்குற நெஞ்சுரமும் வேண்டும். (டீச்சர்ஸ்லாம் நாங்க நல்லா படிக்கணும், ஒழுங்கா இருக்கணும்னுதான் இந்த மாதிரிலாம் பனிஷ்மெண்ட் கொடுத்தாங்க. இது சும்மா ஃபன்னுக்குத்தாங்க, மத்தபடி யாரையும் புண்படுத்தணும், குறைசொல்லனும்னு இல்லிங்க. ஃபன் டோன்லயே எடுத்துக்கோங்க)
-
10 டூர் அனுபவம்
கன்னியாகுமரி, சென்னை, ஊட்டி, கொடைக்கானல்னு பள்ளிக்கூடத்து தோஸ்துகளோட ஸ்கூல் டூர் போய்ட்டு வர்றது செம்ம ஜாலியா இருக்கும். டூருக்கு வீட்ல காசு வாங்குறத விட அவங்ககிட்ட ஓக்கே வாங்குறது பெரிய கலை. அப்பா, அம்மாகிட்ட கூட ஓக்கே வாங்கிடலாம். ஆனா வீட்ல இருக்க தாத்தா, பாட்டி, மாமா - இவங்கள, `சரி பத்ரமா போய்ட்டு வாப்பா’னு சொல்ல வைக்குறதுக்குள்ள பெரும்பாடாகிடும். அவங்ககிட்ட சரியான நேரம் பார்த்து பேசி சம்மதிக்க வைச்ச பிறகு, பட்ஜெட் இல்லன்னு ஒரு சாக்கு போக்கு சொல்லி வீட்ல நம்ம பிளானைத் தட்டிவிடப் பார்ப்பாங்க.
அப்பதான் `சஞ்சய்கா’ ஆபத்பாந்தவனா வந்து நமக்குக் கைகொடுக்கும். வீட்ல கொடுக்குற 50 பைசா, ஒரு ரூபாயைத் தினமும் பள்ளிக்கூடத்துல சிறுசேமிப்புத் திட்டத்துல சேர்த்து வைச்சிருப்போம். அதை எடுத்துக்கலாம்னு சொல்லி சமாளிச்சுடணும். அப்புறம் பஸ்ல ரெண்டு பக்கம் சீட்ல உக்காந்து போறத விட, நடுவுல போடுற பெஞ்சுல இரண்டு பக்கமும் திரும்பி கலாய்ச்சுக்கிட்டே ஒவ்வொரு ஊராப் போய் பார்த்துட்டு வர்றது ஆயுசுக்கும் மறக்காது. தூங்கி விழுந்து, ஒருவழியா கன்னியாகுமரில சூரியோதயம் பார்த்து, திருச்செந்தூர் முருகனைக் கும்பிட்டு, அப்படியே கடல்ல காலை நனைச்சு வீடு திரும்புனா, அதைப்பத்திதான் ஒரு வாரம் பேச்சு இருக்கும்.
-
11 பி.இ.டி பீரியட்
வாரத்துல இரண்டு நாட்கள் வர்ற பி.இ.டி பீரியட் கொடுக்குற சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரு மணி நேர பி.இ.டி பீரியட்ல கிளாஸ ரெண்டு டீமா பிரிச்சு குவிக்கா ஒரு 5 ஓவர் மேட் நடத்தி முடிக்கிறது பெரிய சவால். அதுவும் ஒருநாளோட கடைசி பீரியட் பி.இ.டி பீரியடா வந்தா கேக்கவே வேணாம். அசால்டா 10 ஓவர் மேட்சையே நடத்தலாம். காலைல இருந்தே பேட், பால் ரெடி பண்றது, டீம் பிரிக்குறதுன்னு கிரவுண்டுக்கு போறதுக்கு முன்னாடியே பல வேலைகளை கிளாஸ் டைம்ல முடிச்சுட்டு வெறித்தனமா காத்திருக்க டைம் இருக்கே... ஒவ்வொரு பீரியட் முடிஞ்சு எப்படா கிரவுண்டுக்குப் போவோம்னு ஒரு கேள்வி மண்டைல ஓடிட்டே இருக்கும். அதேமாதிரி வாலிபால், கோகோ, ஃபுட்பால், பேட்மிண்டன்னு வருஷா வருஷம் நடக்குற ஆண்டுவிழா சமயத்துல, இதுக்காக பிராக்டிஸ் பண்றதா சொல்லிட்டு கிரவுண்டுலயே தவம் கிடக்குறதும் பேவரிட் நாட்கள் கணக்குல சேர்ந்துடும்.
-
12 கடைசி பெல்
தினமும் பள்ளிக்கூடம் போனதுமே 4 மணிக்கு பெல் அடிக்குறது ஒரு தடவை மைண்டுக்குள்ள வந்துட்டு போகும். எட்டு பீரியட்களும் முடிஞ்சு அந்த கோல்டன் மணி எப்போ அடிப்பாங்கனு லஞ்சுக்கு அப்புறம் முதல் பீரியட்லயே எதிர்பார்க்க ஆரம்பிச்சுடுவோம். மணி அடிச்சதும் முதல் ஆளா யாரு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே போறா.... முதல் ஆளா யாரு வீட்டுக்குப் போறானு ஒரு கோஷ்டி தினமும் போட்டியே நடத்திட்டு இருக்கும். வீட்ல இருந்து பள்ளிக்கூடத்துக்குப் போற நேரமும், திரும்ப பள்ளிக்கூடத்துல இருந்து வீட்டுக்கு வர்ற நேரமும் பல முக்கிய முடிவுகள் எடுக்க ஆலோசனை நடத்துற நேரம். சைக்கிளோ, நடையோ அப்போ நடக்குற டிஸ்கஷன்ஸ்லாம் வேற லெவல்ல இருக்கும். அண்டர்டேக்கரை ரே மிஸ்டீரியோ ஜெயிச்சுருவானா... இந்தியா வேர்ல்டு கப் அடிச்சுடுமா... நாளைக்கு கிரிக்கெட் மேட்சுக்கு ரெடியா, ஊர் பொங்கலுக்கு டிரெஸ் எடுத்துட்டியானு உள்ளூர் தொடங்கி உலக லெவல் வரைக்கும் போய்ட்டு இருக்கும் பேச்சு.
இப்படி உங்கள் ஸ்கூல் டைம் இண்ட்ரஸ்டிங்கான எவர்கிரீன் மொமண்ட் ஏதாவது இருந்தா... கமெண்ட்ல சொல்லுங்க...
0 Comments