67வது தேசிய விருதில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் `அசுரன்’ படத்துக்குக் கிடைத்திருக்கின்றன. இந்திய அளவில் சிறந்த படமாக `அசுரன்’ தேர்வாகி இருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், `அசுரன்’ எதனால் சிறந்த படம் என்பதைப் பார்க்கலாம்.
-
1 நடிப்பு
நடிகர் - நடிகைகளின் தேர்வும் அவர்களின் நடிப்பும் ‘அசுரன்’ படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம். தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், அம்மு அபிராமி, டிஜே என படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர்களின் பங்களிப்பு படத்திற்கு நன்றாகவே உதவியது. அதிலும், இரண்டு கெட்டப்களில் எதார்த்தமாக நடித்திருந்த தனுஷுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. இள வயது கதாபாத்திரத்தில் வேகம் குறையாமலும், வயதான கதாபாத்திரத்திற்காக பல், தலைமுடி, உடல்மொழி என பலவற்றுக்கும் கவனம் செலுத்தி அசத்தியிருப்பார்.
-
2 திரைக்கதை
‘அசுரன்’ திரைப்படத்தின் மூலக்கதை பூமணி எழுதிய வெக்கை நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஆனால், படத்தின் திரைக்கதையில் கீழ்வெண்மணி படுகொலை சம்பவத்தையும் பஞ்சமி நிலம் பற்றியும் வெற்றிமாறன் சேர்த்திருப்பார். இரு வெவ்வேறு பிரச்னைகளை ஒரே படத்தில் சொல்லி, அது பெருவாரியான மக்களிடம் சென்றடைந்திருப்பது அசுரனின் முதல் வெற்றி. சாதி அரசியலையும் சமகால அரசியலையும் முகத்தில் அறைந்ததைப் போல் சொல்லியதும், நாவல்களைப் படமாக்கும் போது அதிகமாகும் கமர்ஷியல் நெடி இதில் இல்லாமல், தனது சிறப்பான திரைமொழியால் அசுரனை கையாண்டிருப்பார், வெற்றிமாறன். அதுமட்டுமில்லாமல் தனுஷ் - வெற்றிமாறன் என்கிற கூட்டணிக்கு இருக்கும் பாஸிட்டிவ் எனர்ஜியும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியது என்றும் சொல்லலாம்.
-
3 கமர்ஷியல் Vs கருத்து
‘கமர்ஷியல் படங்கள் விருது வாங்காது; சமூக பிரச்னைகளைப் பற்றி பேசும் படம் விருதுக்கானது மட்டும்தான்’ என்று பரவலாக பேசப்படும். ஆனால், ‘அசுரன்’ படம் இந்த இரண்டு விஷயங்களையும் அழகாக சமன் செய்திருக்கும். ஒரு ஹீரோவுக்கான பில்டப், ஆக்ஷன், மாஸ் என எல்லாமுமே அசுரனில் இருந்தாலும்; அந்த கமர்ஷியலின் சரியான அளவும், அது பேசிய அரசியலும்தான் இன்றைக்கு தேசிய விருது வரைக்கும் சென்றிருப்பதன் காரணம். படத்தின் இடைவேளை வரைக்கும் கஷ்டப்படும் கதாநாயகன், ‘எப்போ திருப்பி அடிப்பான்’ என ரசிகர்கள் அனைவரைக்கும் வெறியேற்றிவிட்டு, பின்னர் ஹீரோ சண்டையிடும் காட்சியும் ‘அசுரன்’ படத்தில் இருக்கும்; க்ளைமேக்ஸில் ஜெயிலுக்குப் போகும் ஹீரோ, ‘படிப்புதான் முக்கியம். படிச்சு நல்ல நிலைமைக்கு வா; வந்ததுக்கு அப்பறம் நமக்கு மத்தவங்க கொடுத்த கஷ்டத்தை நீ யாருக்கும் கொடுக்காதே’ என தன் மகனுக்கு சாதி அடக்குமுறையை ஒழிக்க வேண்டும் என சொல்லும் காட்சியும் ‘அசுரன்’ படத்தில் இருக்கும். இதுதான் ‘அசுரன்’ சிறந்த படம் என்பதற்கான சான்றுகளில் ஒன்று.
-
4 இசை
படம் பார்க்கும் ஆடியன்ஸை அந்தக் கதையோடு ஒன்றவைப்பதற்கு இசையும் ஒரு முக்கியமான காரணம். அதை ‘அசுரன்’ படத்தில் சிறப்பாகவே செய்திருப்பார் ஜி.வி.பிரகாஷ் குமார். கதாநாயகனின் சோகத்தோடும் ஆக்ரோஷத்தோடும் நம்மையும் பயணிக்க வைத்ததில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசைக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அதேபோல், பாடல்களிலும் படத்திற்கு தேவையான வலுவை சேர்த்திருப்பார். ‘எள்ளுவய பூக்கலையே...’, ‘கத்திரிப்பூவழகி...’ பாடல்கள் அந்தக் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப இருக்கும்.
0 Comments