கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வாடிக்கையாளர்களை ஏமாற்றவில்லை பல நிறுவனங்கள். கிரியேட்டிவ்வான விளம்பரங்கள், புது ஐடியாக்களுடன் வந்த விளம்பரங்கள் எதிர்பார்ப்பை எகிறவைத்தன. இப்படியெல்லாமா யோசிப்பீங்க… நீங்க வேற லெவல் மாஸ் ப்ரோ என நெட்டிசன்களை புருவம் உயர்த்தச் செய்த 5 விளம்பரங்கள்…
-
1 ஓலா
உலக அளவில் டாக்ஸி சேவையில் முன்னணியில் இருக்கும் ஓலா, ஏப்ரல் முதல் தேதியில் வெளியிடப்படும் சிறப்பு விளம்பரத்துக்கு ரொம்பவே மெனக்கெடும். அந்தவகையில், ஓலா ஏர் ப்ரோ என்ற பெயரில் பறக்கும் எலெக்ட்ரிக் டாக்ஸியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது ஓலா. இதுகுறித்த வீடியோவுடன் சமூக வலைதளத்தில் அறிவித்த ஓலா, ஒரு கையாலேயே தூக்கிவிடக் கூடிய அளவில் மிகவும் இலகுவான அந்த டாக்ஸியால் செங்குத்தாக எந்த இடத்திலும் தரையிறங்க முடியும். அதேபோல், பறக்க முடியும் என்று தெரிவித்திருந்தது. ஓலா ஏர்ப்ரோவை பார்க் செய்வது எளிது என்றும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.
உலகின் முதல் மற்றும் ஒரே எலெக்ட்ரிக் பறக்கும் காரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்று ட்விட்டரில் அறிவித்த ஓலா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பாவிஷ் அகர்வால், வீடியோ ஒன்றை பகிர்ந்ததுடன், வாடிக்கையாளர்கள் சோதனை ஓட்டத்துக்காக olaairpro.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். எலெக்ட்ரிக் காரின் அம்சங்களை விளக்கும் வீடியோவில் அந்த நிறுவனத்தின் முன்னணி நிர்வாகிகள், பொறியாளர்கள் விரிவாகப் பேசியிருந்தார்கள். இந்த வீடியோதான் சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக். -
2 போக்ஸ்வேகன்
ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான போக்ஸ்வேகன், எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விளக்கும்விதமாக தங்கள் நிறுவனத்தின் பெயரை `வோல்ட்ஸ்வேகன்’ என்று மாற்றுவதாக அறிவித்தது. இதுகுறித்து ட்விட்டரில், ``66-வது வயதில் பெயரை மாற்றுவது அசாதாரணமானது என்பதை நாங்கள் அறிவோம். எங்களது இதயம் எப்போதும் இளமையானது.
வோல்ட்ஸ்வேகனை அறிமுகப்படுத்துகிறோம். போக்ஸ்வேகனைப் போலவே, ஆனால் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் கவனம் செலுத்தப் போகிறோம். முதல் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வியான ஐடி.4 கார் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது’’ என்று அறிவித்தது அந்த நிறுவனம். இது ஆட்டோமொபைல் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே, ஏப்ரல் முதல் நாளை ஒட்டி விளையாட்டாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக வோக்ஸ்வேகன் பின்னர் ஒப்புக்கொண்டது.
-
3 அர்பன் கம்பெனி
`அலாரம் அட் ஹோம்’ திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அர்பன் கம்பெனி நிறுவனம். `நீங்கள் எங்கிருந்தாலும் பிரச்னையில்லை. காலை 9 மணி ஜூம் மீட்டிங்கை மிஸ் செய்ய வேண்டாம். சரியான நேரத்தில் உங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பும் சேவையை அறிமுகப்படுத்துகிறோம். அலாரமை இனி ஸ்நூஸ் செய்துவிட்டோமே என்று நீங்கள் வருந்த வேண்டிய அவசியம் இருக்காது’’ என்று சமூக வலைதளங்களில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும், `AbTohUthJa’ என்ற புரோமாகோடைப் பயன்படுத்தி 50 சதவிகிதம் அளவுக்கு தள்ளுபடியும் பெறலாம் என்றது அந்த நிறுவனத்தின் விளம்பரம்.
-
4 லேஸ்
தேநீரின் ஒருவகையான `தூத் பட்டி’ பெயரில் புதிய ஃப்ளேவரை அறிமுகப்படுத்துவதாக லேஸ் நிறுவனம் அறிவித்தது. தேநீரின் சுவையோடு ஸ்நாக்ஸா என நெட்டிசன்களிடம் லேஸின் அறிவிப்பு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு சிலர் இதை ஏப்ரல் ஃபூல் பிராங்க் என கண்டுபிடித்த நிலையில், மறுபுறம் நடந்த பெரிய விவாதத்தால் சோசியல் மீடியா அதகளமானது.
-
5 சப் வே
அமெரிக்க உணவு நிறுவனமான சப் வேயின் விநோதமான அறிவிப்பால், அதன் வாடிக்கையாளர்கள் ஜெர்க்கானார்கள். `கொத்தமல்லி குக்கி’ என்ற பெயரில் பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்தப் போவதாக போட்டோவுடன் சோசியல் மீடியாவில் சப் வே அறிவித்தது. ஆஸ்திரேலிய அவுட்லெட்டுகளில் கொத்தமல்லி குக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
0 Comments