முந்தைய கேப்டன்களைவிட கோலி வேற வெலல். ஆனால், அதையும் தாண்டி எகிறி அடிக்கிறார் ரஹானே. இருவரில் யார் மூலம் வந்தாலும் வெற்றி இந்தியாவுக்குத்தான். அதனால் குமுதா எப்பவும் ஹேப்பி அண்ணாச்சி. இருந்தாலும் இருவரின் கேப்டன் குணாதிசயங்களில் சில நறுக் வித்தியாசங்கள் இருக்கின்றன. அது என்ன… பார்க்கலாம்!
-
1 ஆல்வேஸ் ஆக்ரோஷம்!
ஒன்சைடு போட்டியோ, கடைசி பந்து வரை த்ரில்லிங் ரேஸாக இருக்கும் போட்டியோ… கோலி எப்பவும் ஆக்ரோஷமாகவே இருப்பார். காற்றில் பறக்கும் பன்ச், உற்சாகக் கூக்குரல், சொதப்பினால் கத்தித் தீர்ப்பது, எதிரணியினரை முறைப்பது என ஆல்வேஸ் ஆக்ரோஷம். ஆனால், ரஹானே ஆழ்கடல் அமைதியுடன் இருப்பார். போட்டியின் போக்கோ அல்லது முடிவோ அவரிடம் எந்த சலனத்தையும் உண்டாக்காது. இந்தியாவின் மிகச் சிறந்த வெற்றிகளுள் ஒன்றான பார்டர் - கவாஸ்கர் டிராபி வெற்றியின்போது கூட, அமைதியாகவே ரஹானே வலம் வந்தது ஒரு உதாரணம்!
-
2 நீயும் நானும் ஒன்று!
அணியினரின் வெற்றி தோல்விகளுக்கு கோலி பொறுப்பெடுத்துக் கொள்வார். அணியில் யார் சாதித்தாலும் முஷ்டி முறுக்குவதும், யார் சொதப்பினாலும் இறுக்கமாக முன் நிற்பதும் கோலி ஸ்டைல். இது ரஹானேவிடம் கொஞ்சம் வித்தியாசப்படும். அணி உறுப்பினரின் வெற்றிக்கு அவரை முன்நிறுத்துவதும், சொதப்பல் என்றால் ஒட்டுமொத்த அணியினரையும் காபந்து பண்ணுவதும் ரஹானே பாணி.
-
3 பேட்டிங் ஃபார்ம்!
தனிப்பட்ட ஃபார்ம் ‘கேப்டன்’ கோலியின் நடவடிக்கைகளில் பாசிட்டிவ்/நெகட்டிவ் தாக்கத்தை உண்டாக்கும். ஆனால், தனது பேட்டிங் ஃபார்ம் எப்படி இருந்தாலும், ‘கேப்டன்’ ரஹானே தெளிவாக நிதானமாக இருப்பார்.
-
4 திறந்த புத்தகம்!
கோலியின் மனதில் இருக்கும் திட்டம் என்ன என்பதை அவரது உடல்மொழி, நடவடிக்கை, உரையாடல்கள் பளிச் பளிச் என வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். ஆனால், ரஹானேவோ ஜென் துறவி போல அமைதியோ அமைதியாக இருப்பார். என்ன நினைக்கிறார், என்ன செயல்படுத்தப் போகிறார் என்பது அது நடந்து முடிந்தபின்-தான் நமக்குத் தெரிய வரும்..!
-
5 பிடிச்ச பிடி!
கோலி ஒரு திட்டத்துடன் களமிறங்கினால், அதையே இறுதிவரை செயல்படுத்த மெனக்கெடுவார். கள நிலவரத்துக்கேற்ப திட்டத்தை மாற்றிக் கொள்வதென்பது மிக மிக அரிதான நிகழ்வாகும். ஆனால், ரஹானே இலக்கை மனதில் வைத்துக் கொள்வார்…அதே சமயம், அதற்கான வியூகத்தினை சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்வார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் ஒவ்வொரு செஷனுக்கும் ஏற்ப வியூகம் வகுத்து, அதை ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்திச் சென்றார்.
0 Comments