லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள், சோசியல் மீடியா என இன்று எல்லாம் டிஜிட்டல் மயம். தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால் டிஜிட்டல் சார்ந்தே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் கேட்ஜெட்களைப் பயன்படுத்தும் நேர அளவு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் கேட்ஜெட்களில் நாம் அதிக நேரம் செலவிடுவதால் கண்களுக்குப் பல பாதிப்புகள் ஏற்படலாம்.
அதிகப்படியான கேட்ஜெட் பயன்பாட்டால் கண் எரிச்சல், கண்களில் இருந்து நீர் ஒழுகுதல், ஒளியை எதிர்க்கொள்ள சிரமம், கண் பார்வை மங்குதல், கண் சிவப்பு நிறமாக மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.
டிஜிட்டல் கேட்ஜெட்டுகளை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பிரச்னைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள 5 எளிய வழிகள்.
-
1 இடைவெளி மற்றும் அமரும் விதம்
லேப்டாப் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தும்போது நான் சரியான விதத்தில் அமருதல் நல்லது. உங்கள் கண்களின் நேர் நிலையிலிருந்து, டிஜிட்டல் திரையானது கொஞ்சம் கீழே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்களுக்கும் திரைக்கும் இடையில் ஒரு கை நீளத்துக்கான இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
-
2 ரூல் ஆஃப் 20
டிஜிட்டல் கேட்ஜெட்கள் பயன்பாட்டின் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இடையே 20 விநாடிகள் இடைவெளி எடுத்துக் கொள்ளலாம். இந்த 20 விநாடிகள் இடைவெளியின் போது ஸ்கிரீனைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொள்வது கண் பாதிப்பைக் குறைக்கும்.
-
3 அதிகமாகக் கண் சிமிட்டுங்கள்
பொதுவாக ஒருவர் 15 முதல் 20 முறை ஒரு நிமிடத்துக்குக் கண் சிமிட்டுவார்கள். ஆனால், தொடர்ச்சியான டிஜிட்டல் திரை பயன்பாடு கண் சிமிட்டுவதைக் குறைத்துவிடும். அதிக முறை நீங்கள் கண் சிமிட்டினால், கண்களில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்க அது உதவும்.
-
4 ஊதா நிறக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள்
அதிக நேரம் டிஜிட்டல் திரையைப் பயன்படுத்த வேண்டி இருப்பவர்கள் ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கண்ணாடியை மருத்துவர்களின் அறிவுரையைப் பெற்றுப் பயன்படுத்தலாம் என்கிறார்கள். நீண்ட நேரம் டிஜிட்டல் திரையைப் பார்க்க வேண்டியவர்கள் நீண்டகால பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு உரிய காண்டாக்ட் லென்ஸ்கள், கண்ணாடிகளை மருத்துவர்களின் அறிவுரையுடன் தேர்வு செய்யலாம்.
-
5 பயிற்சி
வேலைக்கு நடுவே கண்களுக்குப் பயிற்சி அளிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். விழிகளை மேலும் கீழும் அசைத்து பயிற்சி கொடுக்கலாம், உள்ளங்கையால் கண்களை மூடி ரிலாக்ஸாகலாம்.
0 Comments