லாக்டௌன் சமயத்தில் ஆறிலிருந்து அறுபது வயது வித்தியாசமின்றி குடியிருந்ததே ஓடிடியில்தான் எனலாம். அந்தளவிற்கு நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜீ 5 உள்ளிட்ட நிறைய ஓடிடி தளங்களில் வியாபாரம் உச்சம் தொட்டது. பல மாதங்கள் கழித்து தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். இருப்பினும் ஆபிஸ் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்புவோர்களுக்கு `நாங்க இருக்கோம்’ என்று வரவேற்கிறது அவரவர்கள் பார்க்கும் வெப் சீரிஸ். அப்படி மக்களை ஈர்த்த சில வெப் சீர்ஸ்களின் அடுத்த சீஸன் இந்த வருடம் வெளியாகவிருக்கிறது.
-
1 Sex Education (Season 3)
காமெடி - டிராமா ஜானரில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸுக்கு ஏராளமான ரசிகர் படை உள்ளது. டீனேஜக்கு ஏற்படும் செக்ஸுவல் பிரச்னைகளைப் பத்தி பேசுவதுதான் இந்த சீரிஸின் சாரம்சம். முழுக்கவே அபத்தமாய் இல்லாமல் ரசிக்கும்படியான அடல்ட் விஷயங்களோடு சேர்த்து பல எமோஷன்களையும் இந்த சீரிஸ் பேசியிருக்கிறது. 2019 ஜனவரியில் முதல் சீஸனும், 2020 ஜனவரியில் 2-வது சீஸனும் வெளியான நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே இதன் 3-வது சீஸன் வெளிவர வேண்டியது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச் சென்றுவிட்டது. ஆனால், இந்த வருடத்திற்குள் இதன் 3-வது சீஸன் வெளிவந்துவிடும்.
-
2 Stranger Things (Season 4)
குழந்தைகளை டார்கெட்டாக வைத்து இந்த சீரிஸை தயாரித்திருந்தாலும் இதற்கு மீசை வைத்த பல 90ஸ் கிட்ஸ்களேஎ அடிமையாக உள்ளனர். அந்தக் காலகட்டத்தில் நடக்கும் கதையென்பதால் இதில் வெளிக்காட்டும் எமோஷன்கள் அனைத்தும் சிறப்பாய் சிங்க் ஆகிறது. சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானர் என்பதால் இதைப் பார்க்க பெரிய அறிவியல் ஞானமெல்லாம் வேண்டுமென்பதில்லை. இதில் சொல்லப்படும் Parallel world கான்செப்டிற்கு இதன் கிரியேட்டர்கள் பயன்படுத்திய சயின்ஸ் ரொம்பவே சிம்பிள்தான். நட்பு, காதல், ஃபேமிலி சென்டிமென்ட், சயின்ஸ் ஃபிக்ஷன், திகில் என இந்த சீரிஸ் முழுவதுமே ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்தான். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதன் 4-வது சீஸன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
3 You (Season 3)
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான சீரிஸ்தான் `யூ'. இதயம் பலவீனமானவர்கள் இந்த சீரிஸ் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. `இல்லை நான் பார்ப்பேன்’ என்றால் இந்த சீரிஸை பார்த்துக் கையாள வேண்டும். காதலிக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம். அது எந்த எல்லை என்பதைத் தெர்ந்துகொள்ள `யூ'வைப் பாருங்கள். முதல் சீஸனின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை விட இரண்டாம் சீஸனின் எண்டிங் ட்விஸ்ட் அடிபொலி. `நீ கெட்டவன்னா நான் கேடு கெட்டவன்டா' என்பது போல் இருந்தது இதில் ஹீரோயினாக நடித்திருந்த விக்டோரியா பெட்ராட்டியின் பர்ஃபாமன்ஸ். இந்த சீரிஸைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், டிரை பண்ணுங்க மக்களே. வொர்த்து!
-
4 Lucifer (Season 5 - Part 2 )
ஒரு ஸ்டைலிஷான டிடெக்டிவ் ஜானர் சீரிஸை கண்டு மகிழ `லூசிஃபர்' சீரிஸ் உங்களுக்கு மிக அருகாமையில். இந்தத் தொடரின் மிகப்பெரிய ப்ளஸ் லூசிஃபர் மார்னிங் ஸ்டாராக நடித்த டாம் எல்லிஸ். அவரின் ஸ்டைலான நடிப்பும் பிரிட்டிஷ் அக்சென்ட்டில் பேசும் வசனமும் பார்ப்பதற்கே `வாவ்’ என்றிருக்கும். கதையின் அடித்தளத்தில் ஃபேன்டசி இருந்தாலும் அது உறுத்தாத வகையில் ஸ்க்ரீன்ப்ளேவையும், கதையையும் அமைத்துள்ளனர் இதன் கிரியேட்டர்கள். இந்த வருடத்தின் ஆரம்பித்தில்தான் 5-வது சீஸனில் 8 எபிசோடுகள் வெளியானது. கொரோனா காரணமாக இந்த சீஸனில் மீதமுள்ள 8 எபிசோடுகள் வெளியாகவில்லை. மீதமுள்ள 8 எபிசோடுகளும் 5-வது சீஸனின் இரண்டாம் பாகமாக இந்த வருடத்தில் வெளியாகிவிடும்.
-
5 The Familyman (Season 2)
இந்தியா - பாகிஸ்தான் அரசியல் மற்றும் குடும்பம் ஆகிய இரண்டு விஷயங்களையும் கையிலெடுத்திருக்கிறார் இந்த `ஃபேமிலி மேன்'. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ் ஆகியோர் முதல் சீஸனில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது சீஸன் இந்த வருடம் வெளியாகவிருக்கிறது. கூடுதல் ஸ்பெஷலாக 2-வது சீஸனின் முன்னணி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களையும் சமாளிக்கும் குடும்பஸ்தனாக இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையே ஏற்படும் மோதலையும் சாமாளிக்கும் நாயகனாக சிறப்பாய் நடித்திருக்கிறார் மனோஜ் பாஜ்பாய். இதன் 2-வது சீஸன் இந்த வருடத்தின் நடுவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
6 Peaky Blinders (Season 6)
காட்ஃபாதர்தான் கேங்ஸ்டர் படங்களுக்கு எடுத்துக்காட்டு என்றால் சீரிஸ் உலகில் `பீக்கி ப்ளைண்டர்ஸ்' தொடர்தான் சிறந்த எடுத்துக்காட்டு. முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த ஆண்டான 1918 சமயங்களில் கதை நகர்வதால் பார்பதற்கும் அனுபவிப்பதற்கும் அவ்வளவு அழகாவும், ஆழமாகவும் உள்ளது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை எபிசோடு செல்லச் செல்ல தீ வேகத்தில் சூடுபிடிக்கிறது. அதன் பிறகு நம் மூளையே இந்த சீரிஸிற்கு ஃப்ரெண்டாகிவிடும். அந்த நிலை வரும்போதே இதில் நாயகனாக நடித்திருக்கும் தாமஸ் ஷெல்பியின் வெறித்தன ரசிகனாகிவிடுவீர்கள். இந்த சீரிஸின் 6-வது சீஸனும் ஆன் தி வே.
-
7 Dexter (Season 9)
8 சீஸன் கொண்ட இந்த சீரிஸில் மொத்தம் 96 எபிசோடுகள் இருக்கின்றன. `மென்டலிஸ்ட்', `பர்சன் ஆஃப் இன்ட்ரஸ்ட்', `சைக்', `வொயிட் காலர்' போன்ற லாங் டேர்ம் சீரிஸ்களின் ரசிகராக நீங்கள் இருந்தால் இந்த டெக்ஸ்டரும் உங்களைக் கட்டாயம் திருப்திப்படுத்துவான். டிவிஸ்டுக்கு மேல் டிவிஸ்ட் என ஒவ்வொரு சீஸனுமே உங்களை அசரடிக்கும். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் 8 சீஸனினோடு இதன் கதையை முடித்துக்கொண்டனர். ஆனால், ரசிகர்கள் இன்னும் டெக்ஸ்டரைப் பற்றி பேசுவதாலும், 8-வது சீஸனின் முடிவு இன்னும் சிறப்பாய் இருந்திருக்கலாம் என்ற விமர்சனத்தினாலும் 9-வது சீஸனை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும், இதில் நிறைய புது முகங்களை நடிக்கவைக்கத் திட்டமிட்டுள்ளனர். 8 ஆண்டுகள் கழித்து `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என கெத்தாக கலமிறங்குகிறார் டெக்ஸ்டர் மோர்கன்.
0 Comments