தமிழில் சிறுவர் இலக்கிய முன்னோடியாகத் திகழ்ந்தவர் வாண்டுமாமா. சிறுவர்களுக்காக இவர் எழுதிய கதைகளை பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க வைத்தவர் வாண்டு மாமா. தமிழில் சிறுவர்கள் எழுத்துலகில் தீவிரமாக இயங்கிய வாண்டு மாமா வாழ்வில் எதிர்நீச்சல் போட்ட 6 தருணங்கள்.
-
1 சிறுவயது சிரமங்கள்
வி.கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட வாண்டு மாமா புதுக்கோட்டை மாவட்ட அரிமழம் என்ற கிராமத்தில் ஏப்ரல் 21, 1925-ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், திருச்சியில் உள்ள உறவினர்கள் வீட்டில் வளர்ந்தார். சிறுவயதில் பொருளாதார சூழல் காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத இவர், தொடர்ச்சியாக முயன்று 1944ம் ஆண்டு நேஷனல் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்தார். அதன்பின்னர் குடும்ப சூழலால் கல்லூரிப் படிப்பை படிக்க முடியவில்லை.
-
2 ஓவிய ஆர்வம்
சிறுவயது முதலே ஓவியத்தின் மீது பேரார்வம் கொண்டிருந்த இவர், பள்ளியில் கரும்பலைகளில் சுவாமி படங்களை வரைந்து ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார். சிறுவயதிலேயே பாரதி என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தி வந்த இவர், சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றார். ஓவியத்தைப் போலவே கதை எழுதுவதிலும் ஆர்வம் அதிக கொண்டிருந்த வாண்டு மாமா, பள்ளி மாணவராக இருக்கும்போதே கதை எழுதத் தொடங்கிவிட்டார். இவரது முதல் கதையான குல்ரக், கலைமகள் பத்திரிகையில் வெளியானது.
-
3 பத்திரிகை பணி
பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், திருச்சி கல்ச்சர் டைமண்ட் வியாபாரிகள் சங்கத்தில் விளம்பர லேபிள்கள், பிரசுரகர்த்தர்களின் புத்தக அட்டை, புத்தகங்களுக்கு உள்படம் உள்ளிட்டவைகளை உருவாக்கித் தரும் வேலையைச் செய்யத் தொடங்கினார். பின்னர் சென்னையில் பிரபல வாரப் பத்திரிகையில் வேலை கிடைத்தும், ஆசிரியர் குழுவில் இடம் கிடைக்காததால், திருச்சி வந்து சிவாஜி பத்திரிகையில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார். இவர் அறிமுகப்படுத்திய சிவாஜி சிறுவர் மலர் பின்னாளில் பொருளாதார சுமை காரணமாக நிறுத்தப்பட்டது.
-
4 கௌசிகன் வாண்டு மாமாவான தருணம்
கௌசிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்காக எழுதியவரை ஓவியர் மாலி, குழந்தைகளுக்காக எழுதும்படி ஊக்குவித்தார். குழந்தைகளுக்காக `வாண்டு மாமா’ என்ற பெயரில் கதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், சிவாஜியிலிருந்து விலகி `வானவில்’ சிறுவர் இதழைத் தொடங்கினார். அதன் பின்னர் பள்ளித் தோழர் ஜம்புசாமியுடன் இணைந்து தனது வீட்டிலியே `கிண்கிணி’ என்ற சிறுவர் இதழைத் தொடங்கி நடத்தினார். அதன் பின்னர், கல்கியில் சர்க்குலேஷன் பிரிவில் குமாஸ்தாவாக பணியில் சேர்ந்த வாண்டு மாமா, மிக விரைவிலேயே ஆசிரியர் குழுவில் இணைந்தார்.
இவருக்காகவே கல்கி நிறுவனம் கோகுலம் என்ற சிறுவர் இதழைத் தொடங்கியது. அப்போதுதான் பிரபலமான `பலே பாலு’, `சமத்து சாரு’ கதாபாத்திரங்களை வாண்டு மாமா உருவாக்கினார். வாண்டு மாமா மட்டுமல்லாது, விசாகன், சாந்தா மூர்த்தி ஆகிய புனைப் பெயர்களிலும் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார். இதுதவிர, தினமணி கதிர், குங்குமம், பூந்தளிர் (குழந்தைகள் இதழ்) போன்றவற்றில் பணியாற்றிய இவர், சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை அனுபவம் கொண்டவர். -
5 சிறுவர் இலக்கியங்கள்
அந்த காலகட்டத்தில் சிறுவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுப்பதே அரிது என்ற சூழல் இருந்தது. அப்படியான சூழலில் சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து பயணித்தவர் வாண்டு மாமா. குமாஸ்தா தொடங்கி நூலகர் வரை பல்வேறு வேலைகளைப் பார்த்தபோதிலும் குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என்ற தனது இலக்கை நோக்கிய பயணத்தை இவர் என்றுமே கைவிட்டதில்லை. சிறுவர் இலக்கியத்தில் இவர் எழுதிய 160-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. வெளிவராத புத்தகங்கள் இருமடங்கு இருக்கும் என்கிறார்கள். வாண்டுமாமாவுக்குப் பின்னர் தமிழ் சிறுவர் இலக்கிய உலகில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்படாமலேயே இருக்கிறது. தான் வாழ்நாளின் பிற்பகுதியில் கடைசி 15 ஆண்டுகளாக புற்றுநோயால் சரியாகப் பேசமுடியாமல் அவதிப்பட்டார் வாண்டு மாமா. அவரது மனைவி சைகையிலே பேசி இவருக்கு உதவிக் கொண்டிருந்தார். மனைவி சாந்தாமூர்த்தி மறைவால் சோகத்தில் இருந்த வாண்டு மாமா, 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி மறைந்தார்.
-
6 எதிர்நீச்சல்
வாண்டு மாமா, தனது சுயசரிதையை `எதிர்நீச்சல்’ என்ற பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில், வாழ்விலும் பத்திரிகை துறையில் தான் போட்ட எதிர்நீச்சல்கள் பற்றி சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜியை நேரில் சந்தித்த அனுபவங்கள், பூந்தளிர் தொடங்கப்பட்ட சுவாரஸ்யம், கல்கி இதழ் அனுபவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
அந்த நூலில், ``நான் பெரிய அரசியல்வாதியோ, மேதையோ, சீர்திருத்தவாதியோ அல்ல. ஒரு சாமானியன். அதிலும் ஒரு எழுத்தாளன்! இது ஒரு துணிச்சலான செயல்தான். தன்னம்பிக்கை, விடா முயற்சி, சகிப்புத் தன்மை, தடைகளைத் தகர்த்துக் கொண்டு முன்னேறி `வாழ்ந்து காட்ட வேண்டும்’ என்ற வீம்பு இவற்றை வெளிப்படுத்துவதே என் சுயசரிதையின் நோக்கம். தோல்விகளால் துவண்டு போகக் கூடாது என்பதற்கு உதாரணமாக விளங்குவது என் வாழ்க்கை. அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவாவினால்தான் எதிர்நீச்சலை எழுதினேன்’’ என்று சுயசரிதைக்கான காரணத்தையும் வாண்டு மாமா பகிர்ந்திருப்பார்.Photo Credits - King Viswa - tamilcomicsulagam.com
0 Comments