முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் தலைவி படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தைச் சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தாலும், அதையெல்லாம் எதிர்க்கொண்டு படக்குழு ஷூட்டிங் முடித்தது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கான திரைக்கதையை `பாகுபலி’கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்துடன் இணைந்து மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்.
-
1 அடிமைப் பெண் ஷூட்டிங் ஸ்பாட்
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா என இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருந்த அடிமைப்பெண் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த தருணம் இது. 1969ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தை எம்.ஜி.ஆரே தயாரித்திருந்தார். சி.வி. சங்கர் இயக்கத்தில் வெளியான அடிமைப் பெண் படம், ஜெய்ப்பூர் அரண்மனை, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஊட்டி என ஸ்டூடியோவை விட்டு வெளியில் அதிகம் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் முதல் படமாகும்.
-
2 அ.தி.மு.க-வில் இணைந்த ஜெயலலிதா
அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கி தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக 1977-ல் எம்.ஜி.ஆர் அரியணை ஏறினார். அது முதலே கட்சியில் இணையும்படி ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் வலியுறுத்தி வந்தார். ஆனால், எம்.ஜி.ஆர் சொன்னதைத் தொடக்கத்தில் மறுத்து வந்த ஜெயலலிதா, 1982-ல் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
-
3 ஜெயலலிதாவின் முதல் மேடைப் பேச்சு
அ.தி.மு.க-வில் இணைந்த ஜெயலலிதா, `பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ஜெயலலிதாவின் முதல் பொதுக்கூட்ட உரை இதுதான். இந்த பேச்சு மிகவும் பிரபலமடைந்தது. ஜெயலலிதாவின் அந்த உரையை இந்திரா காந்தியே பாராட்டியிருக்கிறார்.
-
4 மாநிலங்களவை எம்.பி
மாநிலங்களவையில் தமிழகத்தின் பிரச்னைகளை எடுத்துரைக்க ஆங்கிலப் புலமை கொண்ட ஒருவர் தேவை என்று கருதிய எம்.ஜி.ஆர், 1984ம் ஆண்டு ஜெயலலிதாவை ராஜ்யசபா எம்.பியாக்கினார். மாநிலங்களவையில் பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் ஜெயலலிதா ஆற்றிய உரைகள் பிரசித்தி பெற்றவை. மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் இருக்கை எண் - 185. ராஜ்யசபா எம்.பியாக அண்ணா இருந்தபோது அவரது இருக்கை எண்ணும் இதேதான்.
-
5 தமிழக அரசியலின் எதிர்காலத்தை மாற்றிய நாள்
1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க ஜெ அணி 27 இடங்களில் வென்றது. அதன்மூலம் சட்டப்பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. 1989ம் ஆண்டு மார்ச் 25-ல் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் கருணாநிதியின் பட்ஜெட் உரையின்போது ஜெயலலிதா குறுக்கிட முயன்றார். கருணாநிதி வார்த்தைகளில் கடுமைகாட்டி எதிர்வினையாற்றினார்.
அப்போது இருதரப்பிலும் கடுமையாக மோதிக்கொண்டனர். ஜெயலலிதாவும் இந்த களேபரத்தில் தாக்கப்பட்டார். சேலை கிழிந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய ஜெயலலிதா, `முதல்வராகத்தான் இனிமேல் சட்டப்பேரவைக்குள் நுழைவேன்’ என்று சபதமேற்றுவிட்டு வெளியேறினார். -
6 எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம்
உடல்நலக் குறைவால் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி உயிரிழந்தார். அதனால், தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. 1987ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆர் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்து ஜெயலலிதா, கீழே தள்ளிவிடப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
7 அரசியலே வேண்டாம்
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் இரண்டு அணிகளாகப் பிரிந்து இரட்டை இலை சின்னத்தையும் அ.தி.மு.க இழந்திருந்தது. அதையடுத்து வந்த 1989-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையிலான அணி, சிங்கம் சின்னத்திலும் ஜெயலலிதா தலைமையிலான ஜெ அணி இரட்டைப் புறா சின்னத்திலும் தேர்தலை எதிர்க்கொண்டன. இதில், 27 இடங்களில் ஜெயலலிதா அணி வென்று அவர் எதிர்க்கட்சித் தலைவராக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இந்தத் தேர்தலில் பெரிதாக சோபிக்க முடியாமல் போன எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதையடுத்து, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஒன்றிணைந்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டது.
-
8 சூறாவளி பிரசாரம்
1991ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை அ.தி.மு.க ஜெயலலிதா தலைமையில் எதிர்க்கொண்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸுடன் கைகோர்த்து அ.தி.மு.க கூட்டணி. ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.
-
9 முதலமைச்சர்
இரண்டு அணிகளையும் ஒன்றிணைந்து அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தையும் மீட்ட ஜெயலலிதா 1991 தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து நடைபெற்ற இந்தத் தேர்தலில் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 224 தொகுதிகளில் வென்றது. இரண்டே இடங்களில் மட்டுமே தி.மு.கவால் அந்தத் தேர்தலில் வெல்ல முடிந்தது.
-
10 கட்சி கட்டுப்பாடு
பெண் பின்னால் அணிவகுப்பதா என அ.தி.மு.க தலைவர்களிடம் தயக்கம் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தனது அணுகுமுறையால் அ.தி.மு.க என்ற கட்சியின் தலைமை நான் தான் என்பதை அழுத்தமாக 1991 தேர்தல் வெற்றிக்குப் பின் பதிவு செய்தார் ஜெயலலிதா. அப்போது முதல் ஜெயலலிதா மறைவு வரையிலான 2016ம் ஆண்டு வரை கட்சிக்குள் அவரை எதிர்த்து யாரும் குரல் கொடுத்ததில்லை என்பது வரலாறு.
0 Comments