கமென்ட்ரியில் `The Prince of Dark’ என்கிற இவரது செல்லப் பெயரைச் சொல்லி அழைக்கும்போது பார்க்கும் நம் உடல் சிலிர்க்கும். மல்யுத்த களத்தின் ஆறடிக் காற்று இவர். இவரைக் கண்டாலே பல மல்யுத்த வீரர்களுக்குப் பதைபதைக்கும். மார்க் வில்லியம் கேலவே (எ) தி அண்டர்டேக்கர்தான் இக்கட்டுரையின் நாயகன். அவரது அருமை பெருமையெல்லாம் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், தற்போது அவரது பெருமையோடு அவரைப் பற்றி தெரியாத சில பர்சனல் பக்கங்களைப் பார்க்கலாம்.
-
1 கூடைப்பந்து - கால்பந்து வீரர்
படிப்பின் மீது ஈர்ப்பில்லாத மார்க்குக்கு சிறு வயது முதலே விளையாட்டின் மீது பற்று அதிகம். இவரது உயரமும், மெலிந்த தேகமும் இவருடைய விளையாட்டு வாழ்க்கைக்கு ரொம்பவே கை கொடுத்தது. கால்பந்தும் கூடைப்பந்தும்தான் இவரின் ஃபேவரைட் ஸ்போர்ட். படிப்பு நம்முடைய பீஸ் ஆஃப் கேக் இல்லையென்பதை உணர்ந்த மார்க், விளையாட்டின் மீது முழு கவனத்தையும் செலுத்தினார்.
கூடைப்பந்தில் பல ஆட்டங்களை தனது அணிக்காக ஜெயித்துக் கொடுத்தார். பிற்காலத்தில் தான் ஒரு சிறந்த மல்யுத்த வீரனாக ஜொலிக்கப்போகிறோம் என்பதை உணரும் முன் ஐரோபாவில் முழு நேர கூடைப்பாந்தாட்ட வீரனாக வலம்வந்தார். அதன் பின்னர் படிப்பை பாதியேலே விட்டுவிட்டு மல்யுத்தம் பக்கம் கவனம் செலுத்தி அதற்கான பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினார். -
2 டெக்சஸ் ரெட்
மல்யுத்தத்தைப் பொறுத்தவரை `ரிங் நேம்' மிகவும் முக்கியம். அதுதான் பிற்காலத்தில் அவனுடைய அடையாளமாகப்போகும் பெயர். அதனால், அதைப் பக்காவாகப் பொருத்திக்கொண்டால்தான் ஊர் மெச்சும் வீரனாகத் திகழமுடியும். அந்த வகையில் `தி அண்டர்டேக்கர்' என்கிற பெயருக்கு முன் பல பெயரைத் தனக்கு சூட்டிப் பார்த்திருக்கிறார். முதன் முதலில் `டெக்சஸ் ரெட்' என்கிற பெயரோடுதான் 1987-ல் தனது முதல் மேட்சை களம்கண்டார். ஆனால், முதல் சண்டையே தோல்வியில்தான் முடிந்தது.
அதன் பிறகு `தி மாஸ்டர் ஆஃப் பெயின்', `தி பனிஷர்', `மீன் மார்க்' உள்ளிட்ட பல பெயர்களை தனக்கு சூட்டிக்கொண்டு விளையாடினார். அதன் பின்னர் WWF-ல் இணைந்த பிறகு `கெய்ன் தி அண்டர்டேக்கர்' என்ற பெயரோடு விளையாட ஆரம்பித்தார். ஆனால், அந்தப் பெயரில் திருப்தியடையாத WWF, அவருக்கு `அண்டர்டேக்கர்' என்கிற பெயரையே இறுதியில் சூட்டியது. -
3 90ஸ் நாயகன்
சினிமாவுக்கு நிகரான ஒரு கிரேஸ் ரெஸ்லிங் மீதும் நமக்கு இருந்தது. இதில் நமக்கு என்று நான் குறிப்பிட்டிருப்பது 90ஸ் கிட்ஸை. `இது பொய்', `எல்லாமே ஸ்க்ரிப்ட்', `பொய்யா அடிவாங்குறாங்க', `நடிக்கிறாங்க'... இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் ரெஸ்லிங் மீது தற்போது வைக்கப்படுகிறது. ஆனால், இது எதையும் பகுத்தறியாத பாப்பாவாக நாம் இருந்த காலகட்டத்தில், திங்கள், செவ்வாய் வந்துவிட்டால் டியூஷனை கட் அடித்துவிட்டு டிவி முன் அமர்ந்து RAW மற்றும் SMACKDOWN பார்க்க அமர்ந்துவிடுவோம்.
அப்படிப் பைத்தியமாய் அதைப் பார்க்க முதன்மையான காரணம், `தி அண்டர்டேக்கர்' என்கிற இந்த மனிதன். குறிப்பாக இவருக்கு ஏழு உயிர் என்கிற அந்தக் கட்டுக்கதையை வேற லெவலில் மெயின்டெயின் செய்திருந்தனர். ஸ்டேஜுக்கு இவர் கொடுக்கும் என்ட்ரியில் ஆரம்பித்து தன்னுடைய கெட்அப்பை எப்படியெல்லாம் மாற்றினார் என்பதுவரை இன்னும் நினைவிருக்கிறது. புல்லட் சத்தமும், `டங்ங்ங்' என்ற மணி சத்தமும்தான் இவரது மேஜர் அடையாளம்.
-
4 கார் லவ்வர்
கார் மீதும் பைக்கின் மீதும் இவருக்கு கொள்ளைப் பிரியம். தனது கரேஜில் ஏகப்பட்ட உயர் ரக வாகனங்களை அடுக்கி வைத்திருக்கிறார் இவர். அப்படி என்னென்ன மாடல் கார் மற்றும் பைக் வைத்திருக்கிறார்?
1. Bentley Continental GT
2. Cadillac ATS
3. Jeep Wrangler Rubicon
4. Chevrolet Tahoe
5. 1978 Mercedes Benz
6. Western Club Chopper
7. Harley Davidson Softail fatboy
8. Harley Davidson Breakout
9. Harley Davidson CVO Limited -
5 குடும்பம்
இவருக்கு இது வரை மூன்று முறை திருமணமாகியிருக்கிறது. அந்த மூன்று மனைவிகளுக்கும் நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். 1989 - 1999 வரை ஜோர்டி லின் என்பவரோடு வாழ்ந்திருக்கிறார். இவர்களுக்கு கன்னர் வின்சென்ட் என்கிற மகனும் உள்ளார். இவர் ஓர் 90ஸ் கிட் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொண்டு... இரண்டாவது மனைவியின் பெயர் சாரா ஃப்ராங்க். நீங்கள் யூகித்தது சரிதான். அண்டர்டேக்கர் தன் உடல் முழுக்க டாட்டூ போட்டிருப்பார். அதில் மிக முக்கியமான ஒன்று அவர் கழுத்தில் எழுதப்பட்டிருக்கும் `சாரா' என்கிற அந்த டாட்டூ. அது இவருடைய இரண்டாவது மனைவியின் பெயரேதான்.
பிற்காலத்தில் இருவருக்கும் விவாகரத்தான பின்னர் அந்த டாட்டூவை மறைக்கும் விதமாக வேறு ஒரு டாட்டூவைப் போட்டுக்கொண்டார். இவர்களுக்கு சேஸி மற்றும் கிரேஸி என்கிற இரு மகள்கள் இருக்கின்றனர். 2000-ல் திருமணமாகி 2007-ல் விவாகரத்தானது. மூன்றாவது மனைவியின் பெயர் மிச்செல் மெக்கூல். இவர் ஓய்வு பெற்ற மல்யுத்த வீரர். இவர்களுக்கு கையா ஃபெயித் என்கிற மகளும் உள்ளார். 2010-ல் இருந்து இவருடன்தான் வாழ்ந்து வருகிறார் நம் அண்டர்டேக்கர்.
0 Comments