அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு, அலுவலகங்கள் என சென்னை, நாமக்கல், ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐந்தாவது அமைச்சர்
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரசாரத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசியிருந்தார். தேர்தலில் வென்று கடந்த மே மாதத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில், அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது.

இந்தநிலையில், அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் நாமக்கல் குமாரபாளையம் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்களுக்குச் சொந்தமான இடங்கள் என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில் இருக்கும் அவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சராக இருந்தபோது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தங்கமணி மீதான எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தங்கமணி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3-க்கும் அதிகமான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் தங்கமணியோடு, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோரின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. 2016 மே மாதம் தொடங்கி 2021 மார்ச் வரையிலான காலகட்டத்தில் தங்கமணியின் சேமிப்பு ரூ.2.60 கோடியாக இருந்தது. ஆனால், வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருக்கிறது. குடும்பத்தினர் மட்டுமல்லாது உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

எந்தத் தொழிலும் செய்யாத தங்கமணியின் மனைவி சாந்தியின் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டிருப்பதாகவும், அவரது மகன் தரணிதரனுக்குச் சொந்தமாக முருகன் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் சார்பில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை என்றும், அந்த நிறுவனம் பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை கூறியிருக்கிறது. முறைகேடாக வரும் பணத்தையும் சொத்தையும் பாதுகாப்பதற்காக மட்டுமே பயன்பட்டது. முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்தில் பெருமளவு பணத்தை தங்கமணியும் அவரது உறவினர்களும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை கூறியிருக்கிறது.
Also Read –
0 Comments