22 வயதே ஆன மருத்துவ மாணவி விஸ்மயா, அவரது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. வரதட்சனைக் கொடுமையால் நடந்த இந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது?
கொல்லம் மாவட்ட சாஸ்தம்கொட்டா பகுதியைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கிரண் குமாருக்கும் விஸ்மயாவுக்கும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் திருமணம் நடந்திருக்கிறது. அரசுப் பணியில் இருக்கும் தனக்கு வரதட்சனை அதிகமாகக் கொடுக்க வேண்டும் என கிரண் குமாரும் அவரது குடும்பத்தினரும் தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. விஸ்மயாவின் தந்தை திரிவிக்ரமன், திருமண வரதட்சனையாக 100 பவுனுக்கு மேல் தங்க நகையும், ஒரு ஏக்கர் நிலத்தையும் கொடுத்திருக்கிறார். அதேபோல், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றையும் மாப்பிள்ளைக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் திரிவிக்ரமன் குடும்பத்தினர்.
ஆனால், அந்த குறிப்பிட்ட கார் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் காரை எடுத்துக்கொண்டு 10 லட்ச ரூபாய் பணம் கொடுங்கள் என்றும் கிரண் குமார் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், அதைத் தங்களால் கொடுக்க முடியாது என விஸ்மயா குடும்பத்தினர் மறுத்து வந்திருக்கிறார்கள். திருமணம் முடிந்த புதிதில் இருந்தே குடித்துவிட்டு வந்து விஸ்மயாவை அடிப்பதை கிரண் குமார் வழக்கமாகக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். இதனால், ஒரு கட்டத்தில் கிரண் குமாரை விட்டு பிரிந்து தனது சொந்த வீட்டுக்கே திரும்பியிருக்கிறார் விஸ்மயா. அங்கு சுமார் 5 மாதங்களுக்கும் மேல் அவர் வசித்து வந்த நிலையில், திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் இளங்கலை படித்துவந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 20-ல் தேர்வெழுதுவதற்காக கல்லூரி சென்ற விஸ்மயாவை, சமாதானப்படுத்தி கிரண் குமார் அவரது வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு, கிரண் குமார் வேலைக்குச் சென்ற நேரத்தில் குடும்பத்தினருடன் போனில் பேசுவதை விஸ்மயா வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்தநிலையில், கடந்த 21-ம் தேதி அதிகாலையில் கிரண்குமார் வீட்டு பாத்ரூமில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார் விஸ்மயா. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கிரண்குமார் குடும்பத்தினர் மீது விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சனைக் கொடுமை, கொலை வழக்குப் பதியுமாறு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் கிரண் குமாரை அம்மாநில போக்குவரத்துறை வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறது. தனது இறப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், கணவர் அடித்துத் துன்புறுத்தியதால் காயமடைந்த புகைப்படங்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறார் விஸ்மயா. இளம் மருத்துவ மாணவி வரதட்சனைக் கொடுமையால் இறந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. `இது கொலையே, தற்கொலை அல்ல. கிரண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று விஸ்மயாவின் தந்தை திரிவிக்ரமன் வலியுறுத்தியிருக்கிறார்.
Also Read – ஒரிஜினல் சீவலப்பேரி பாண்டி யார்? #27YearsOfSeevalaperiPandi