ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அம்மாநில அரசுப் பணி தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இந்தத் தேர்வில் ஜோத்பூர் பகுதியின் முனிசிபல் கார்ப்பரேஷனில் தூய்மைப் பணியாளராக வேலைப் பார்த்து வந்த ஆஷா கந்தாரா என்பவர் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு சமூக வலைதளங்களின் வழியாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரது வெற்றி அரசாங்கத் தேர்வுகளுக்கு தயாராகும் பல மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஆஷாவுக்கு கடந்த 1997-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே அவரது கணவர் அவரையும் குழந்தைகளையும் விட்டு பிரிந்துள்ளார். பின்னர், தனது பெற்றோரின் உதவியுடன் தனது குழந்தைகளை சிங்கிளாக வளர்த்து வந்தார். இதனைத் தொடர்ந்து, ஜோத்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனில் துப்புரவாளர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். தூய்மைப்பணியாளராக இருந்ததற்காவும், பட்டியலின வகுப்பைச் சார்ந்தவராக இருந்ததற்காகவும், கணவரால் கைவிடப்பட்ட நிலைமையில் இருந்ததற்காகவும் சமூகத்தில் பல்வேறு வகையான இன்னல்களை எதிர்கொண்டுள்ளார். ஆனால், இவை எதுவும் அவரது இலக்கினை தடுக்கவில்லை.
இரண்டு குழந்தைகளின் தாயான ஆஷா கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் அட்மினிஸ்ட்ரேட்டிவ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கொரோனா காரணமாக இதன் முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி அறிவிக்கப்பட்டன. தனது வெற்றியைத் தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய திருமண வாழ்க்கை பாதியில் முறிந்தது. சாதிய பாகுபாடு முதல் பாலின பாகுபாடு வரை நிறைய விஷயங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், இவற்றால் நான் துவண்டுவிடவில்லை. இவைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
கணவரிடம் இருந்து பிரிந்த ஆஷா சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது கல்வியைத் தொடர முடிவு செய்தார். 2016-ம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்தார். ஜோத்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனில் பணிபுரிந்த அவரது தந்தையுடன் வாழ்ந்து வந்தார். “நான் 2018-ம் ஆண்டு நடந்த ஜோத்பூர் மாநகராட்சியில் நடந்த தூய்மைப் பணியாளருக்கான வேலையில் சேர்ந்தேன்” என்று தெரிவித்த அவர், தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிக்கொண்டே ஆர்.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். 2018-ம் ஆண்டு ஆகஸ்டில் பிரிலிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இது அவருக்கு தொடர்ந்து தேர்வுக்கு தயாராவதற்கான உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடந்த மற்ற தேர்வுகளிலும் வெற்றிப் பெற்று துணை ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது அவருக்கு வயது 40.
அரசுப்போட்டித் தேர்வுகளில் ஆர்வம் வந்தது தொடர்பாக ஆஷா பேசும்போது, “நான் சென்ற இடங்களில் எல்லாம் `நீ என்ன கலெக்டரா?’ என்று மக்கள் என்னை கேலி செய்வார்கள். கலெக்டர் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், கூகுளில் தேடி கலெக்டர் என்றால் அர்த்தம் என்ன என்பதை கண்டுபிடித்தேன். அப்போதே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால், ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயதை நான் கடந்துவிட்டேன். இதனைத் தொடர்ந்து ஆர்.ஏ.எஸ் தேர்வுக்கு முயற்சி செய்யலாம் என முடிவு செய்தேன்” என்றார்.
ஜோத்பூரின் வீதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தூய்மைப் பணிகளை செய்து வந்தார். இதனால், மாதம் அவருக்கு ரூ 12,500 சம்பளமாக கிடைத்துள்ளது. “நான் தூய்மைப் பணியாளர் பணியைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் ஒன்றுதான். எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவளிப்பதற்கான ஒரே வழியாக அதுதான் இருந்தது. எந்த வேலையும் சிறியதோ அல்லது பெரியதோ கிடையாது என்பதை உணர்ந்தேன். மற்றவர்கள் சொல்வதன் மேல் கவனத்தைச் செலுத்தாமல் எனது பணியில் கவனம் செலுத்தினேன். அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பேன். பணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் படிப்பேன். நாம் எப்போதும் நம்மை குறைவாக மதிப்பிடக்கூடாது. நம்மை நாம் மதிக்கவில்லை என்றால் எதிலும் வெற்றி பெற முடியாது. கடின உழைப்பால் எதையும் பெற முடியும்” என்று துடிப்பாக பேசியுள்ளார்.
ஆஷா வெற்றி பெற்றதற்கு அவரது ஊரைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். அவரது பகுதியைச் சேர்ந்த மேயர் குந்தி தேவ்ரா ஆஷாவின் வெற்றி தொடர்பாக பேசும்போது, “எங்களது மாநகராட்சியின் தூய்மைப் பணியாளராக இருந்த ஒருவர் ஆர்.ஏ.எஸ் அதிகாரியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறோம். ஆஷா கடின உழைப்பாளியாகவே இருந்து வருகிறார். எங்களது கார்ப்பரேஷனில் எதிர்காலத்தில் அவர் மூத்த அதிகாரியாக பணியாற்றினால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். அவரது வெற்றி மற்ற பெண்களையும் சமூகத்தின் பிற மக்களையும் ஊக்குவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார். அவரின் ஆசைப்படி ஐ.ஏ.எஸ் ஆவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. அதாவது சுமார் 15 வருட அனுபவத்திற்குப் பிறகு ஆஷா ஐ.ஏ.எஸ் ஆக வாய்ப்புள்ளது.
Also Read : கிரிக்கெட் வர்ணனையில் சாதியைப் பற்றி பேசுவதா… சுரேஷ் ரெய்னாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!