கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. சுமார் 74 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். இறுதிச்சுற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மெக்ஸி்கோவைச் சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பிரேசிலைச் சேர்ந்த ஜூலியா என்பவர் இரண்டாவது இடத்தையும் பெருவைச் சேர்ந்த ஜானிக் மெக்டா மூன்றாவது இடத்தையும் இந்தியாவைச் சேர்ந்த அட்லின் கேஸ்டிலினோ நான்காவது இடத்தையும் பெற்றனர். முதலிடம் பெற்ற ஆண்ட்ரியா மெஸா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் இங்கே…
Also Read : `Friends’ சீரிஸ் ஏன் இத்தனை பேருக்குப் பிடித்தது?
-
1 மெக்ஸிக்கோவில் இருந்து மூன்றாவது அழகி
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றதன் மூலம் மெக்ஸிகோ பத்தாண்டுகளுக்கு பிறகு அழகி பட்டத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 1991-ம் ஆண்டு லூபிடா ஜோன்ஸ், 2010-ம் ஆண்டு ஜிமினா நவரே ஆகியோர் இதற்கு முன்பு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றிருந்தனர். மிஸ் வேர்ல்ட் போட்டிக்கு ஆண்ட்ரியா புதிதாக வந்தவர் அல்ல. 2017-ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் மெக்ஸிகோவாக முடிசூட்டப்பட்டார். சீனாவில் சன்யா நகரில் நடைபெற்ற 2017-ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் அந்தப் போட்டியில் ரன்னர்-அப்பாக வந்தார்
-
2 பெண்கள் உரிமைகள் ஆர்வலர்
ஆண்ட்ரியா, மெக்ஸிக்கோவில் அமைந்துள்ள `INMUJERES' என்ற திட்டத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். INMUJERES என்ற திட்டமானது பாகுபாடு இல்லாமல் பாலினங்களுக்கு இடையே சமத்துவம் மற்றும் பெண்களுக்கான உரிமைகளை முழுமையாக வழங்குவது தொடர்பாக பணியாற்றி வருகிறது. அரசியல், கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் அவர்கள் சமமாக பங்கேற்கும் நிலையை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டம் செயலாற்றி வருகிறது. பாலின பாகுபாட்டிற்கு எதிரான பல போராட்டங்களிலும் அவர் கலந்துகொண்டுள்ளார்.
-
3 பாஸிட்டிவ் பெண்மணி
மிஸ் யூனிவர்ஸ் இறுதிச் சுற்றின்போது அவர்,``நாம் மிகவும் அட்வாஸான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவு அட்வாசான சமூகத்தில் நாம் வாழ்கிறோமோ அதே அளவு பழமைவாதங்களுடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.” என்றார். குறிப்பாக அழகு பற்றி பேசிய ஆண்ட்ரியா, ``இப்போதெல்லாம் அழகு என்பது நாம் பார்க்கும் பார்வையில் மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை அழகு என்பது நம் இதயத்திலும் நம்மை நாமே நடத்தும் விதத்திலும் இருக்கிறது. நீங்கள் மிகவும் மதிப்புமிக்கவர் அல்ல என்று யாரும் உங்களிடம் சொல்ல அனுமதிக்காதீர்கள்” என்று பாஸிட்டிவ் வைப்ஸ் தெறிக்கப் பேசினார்.
-
4 சாஃப்ட்வேர் இன்ஜினீயர்
ஆண்ட்ரியா மென்பொருள் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். ஆண்கள் அதிகம் பயிலும் இந்த துறையில் தானும் படித்து பட்டம் பெற்றதற்காக மிகவும் பெருமைப்படும் பெண்ணாக இருக்கிறார். கூடுதலாக ஆண்ட்ரியா சான்றிதழ் பெற்ற ஒப்பனைக் கலைஞராக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு மாடலும்கூட. மெக்ஸிகோவில் உள்ள அவரது சொந்த ஊரான Chihuahua-வின் சுற்றுலா வர்த்தக தூதராகவும் இருந்து வருகிறார்.
-
5 வெஜிடேரியன்
விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதனால், அவர் சைவ உணவு குறிப்பாக `வீகன்' டயட் முறையை பின்பற்றி வருகிறார்.
-
6 ஆண்ட்ரியாவின் அடுத்த பணி
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஆண்ட்ரியா தனது கடமைகளை நிறைவேற்ற Chihuahua நகரில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு செல்ல இருக்கிறார். அதாவது மிகவும் நீண்ட பிரஸ் டூர் ஒன்றுக்கு தயாராக உள்ளார். இந்த சுற்றுலாவின் போது பிராண்ட் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்ப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments