உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் திருமணம் முடிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து கேட்டு சியாட்டில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
பால் ஆலென் என்பவருடன் இணைந்து 1975-ல் மைக்ரோசாப்டை நிறுவிய பில்கேட்ஸ், 1987ம் ஆண்டிலேயே தனது 31 வயதில் பில்லினியரானார். உலகின் இளம்வயது பில்லியனரானார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஊழியராகப் பணியில் சேர்ந்த மெலிண்டாவை, 1987ம் ஆண்டு அவர் சந்தித்தார். நியூயார்க்கில் நடைபெற்ற கம்ப்யூட்டர் டிரேட் ஷோவில் மெலிண்டாவைச் சந்தித்த பில்கேட்ஸ், அவருடன் பழகத் தொடங்கினார். 1993-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொள்வது என முடிவெடுத்தனர். அதன்படி ஹவாய் தீவில் 1994-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகள் ஜெனிஃபர் (25), இரண்டாவது மகன் ரோரி (21) மற்றும் மூன்றாவது மகள் போபி (18). தங்களது திருமண பந்தம் மீட்கமுடியாத அளவுக்குச் சென்றுவிட்டதாக விவாகரத்துக் கேட்டு சியாட்டில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் இருவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக ட்விட்டரில் இருவரும் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `நிறையவே சிந்தித்து, இந்த உறவை சரிசெய்ய எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், எங்களது திருமண பந்தத்தை முறித்துக் கொள்வது என முடிவு செய்திருக்கிறோம். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் மூன்று சிறந்த குழந்தைகளை வளர்த்தெடுத்திருக்கிறோம். இருவரும் பிரிந்தாலும், எங்களது அறப்பணியை இணைந்தே தொடர்வது என முடிவெடுத்திருக்கிறோம்.
பில்கேட்ஸின் உதவிக்கரம்
உலக பணக்காரர்கள் வரிசையில் டாப் 5-ல் இடம்பெற்றிருக்கும் இவர், தனது சொத்தின் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே செலவிட்டு வந்திருக்கிறார். மனைவி மெலிண்டாவுடன் சேர்ந்து உலக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே கடந்த 2000-ம் ஆண்டில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிறுவினார். தொடக்கத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகளைத் தன்வசம் வைத்திருந்த பில்கேட்ஸ், கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தனது அறக்கட்டளைக்கு மாற்றினார். தற்போதைய சூழலில் வெறும் ஒரு சதவீத மைக்ரோசாஃப்ட் நிறுவன பங்குகளே அவர் வசமிருக்கின்றன.
இவர்களது அறக்கட்டளை பொது சுகாதாரம், கல்வி மற்றும் காலநிலை மாறுபாடு போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. 1994 முதல் 2018 ஆண்டு இடைவெளியில் மட்டும் பல்வேறு சேவைகளுக்காக பில்கேட்ஸ் தம்பதியினர் 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.2.655 லட்சம் கோடி) செலவிட்டிருக்கிறார்கள்.
பில்கேட்ஸின் சொத்து மதிப்பு
புளூம்பெர்க் கணிப்பின்படி இந்தத் தம்பதியின் சொத்து மதிப்பு 145 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.10.69 லட்சம் கோடி). இவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 20% மட்டுமே மைக்ரோசாப்ட் நிறுவனமாகும். அதேநேரம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை வைத்து பில்கேட்ஸ் தொடங்கிய கேஸ்கேட் இன்வெஸ்மெண்ட்ஸ் என்ற முதலீட்டு நிறுவனமே, பில்கேட்ஸின் தற்போதைய வருமானத்தின் பெரும்பகுதியை அளிக்கிறது. விவாகரத்துக்காக மனுசெய்தபிறகு, கேஸ்கேட் நிறுவனத்தில் மொத்த பங்குகளில் 14.1 மில்லியன் பங்குகள் மெலிண்டாவிடமும் 87.3 மில்லியன் பங்குகள் பில்கேட்ஸிடமும் இருக்கும் என்று அமெரிக்க பங்குவர்த்தக ஆணையத்திடம் கேஸ்கேட் நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், 66,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வாஷிங்டன் மெடீனா பகுதியில் உள்ள மேன்ஷன் உள்பட அமெரிக்காவில் பெரும் பரப்பு நிலத்தைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் பில்கேட்ஸ் தம்பதியினர். அமெரிக்காவின் 18 மாகாணங்களில் பரந்து விரிந்திருக்கும் 2,42,000 ஏக்கர் விவசாய நிலத்துக்குச் சொந்தக்காரரான பில்கேட்ஸ், அந்நாட்டின் மிகப்பெரிய தனியார் விவசாய நில உரிமையாளராக அறியப்படுகிறார்.
கடந்த 2019-ல் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ், தனது மனைவி மெக்கன்சி ஸ்காட்டை விவாகரத்து செய்தார். விவாகரத்தின்போது, அமேசான் நிறுவனத்தில் ஜெஃப் பேசோஸுக்குச் சொந்தமா 16 சதவிகித பங்குகளை 75-25 என்ற விகித அடிப்படையில் மனைவி மெக்கன்சிக்குப் பிரித்துக் கொடுத்தார். இதன்மூலம், உலகின் நான்காவது கோடீஸ்வர பெண்மணியானார் மெக்கன்சி. அவர்களை விட பில்கேட்ஸ் – மெலிண்டா விவாகரத்துக்குப் பின்னர் சொத்துகளைப் பிரித்துக் கொள்வது மிகவும் சிக்கலான நடைமுறை என்கிறார்கள் அமெரிக்க நிதித்துறை வல்லுநர்கள்.
விவாகரத்துக்கு என்ன காரணம்?
பில்கேட்ஸ், மெலிண்டாவை விவாகரத்து செய்வதற்கான உறுதியான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம், இந்த விவாகரத்துக்குக் காரணமே பில்கேட்ஸின் முன்னாள் காதலி ஆன் வின்ப்ளாட் என்று அமெரிக்க ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. 1987ம் ஆண்டு மெலிண்டாவை சந்தித்தபின்னர் ஆன் வின்பிளாட்டுடனான காதலை பில்கேட்ஸ் முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன்பின்னரும் இருவரது நட்பு தொடர்ந்ததாகச் சொல்கிறார்கள். 1993-ல் மெலிண்டாவைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது, அதுகுறித்து ஆன் வின்பிளாடிடம் ஒப்புதல் பெற்றார் பில்கேட்ஸ் என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன. திருமணத்துக்குப் பின்னரும் ஆண்டுதோறும் முன்னாள் காதலி ஆன் வின்பிளாட்டுடன் வெக்கேஷன் செல்வதை பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து வந்ததாகவும், இதற்காகத் தனது மனைவியிடம் அவர் முன்னரே பேசி அனுமதி பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், விவாகரத்துக்குப் பின்னர், தன்னை விட ஐந்து வயது மூத்தவரான முன்னாள் காதலி ஆன் வின்பிளாடுடன் பில்கேட்ஸ் சேர்ந்து வாழப்போவதாகவும் ஒரு தகவல் அமெரிக்க ஊடகங்களில் றெக்கை கட்டிப் பறக்கிறது.
Also Read – பப்ஜியில் நீங்கள் PRO ப்ளேயரா? NOOB ப்ளேயரா? வாங்க கண்டுபிடிக்கலாம்!