திருநாவுக்கரசர்

ஸ்டாலினுக்கெதிரான அரசியல்; ஜெயலலிதாவின் பகை – திருநாவுக்கரசர் சம்பவங்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் முதல் அரசியல் நண்பர்.. ஒரே தொகுதில 6 தடவை எம்.எல்.ஏவான ஒரே அரசியல்வாதி… திமுக இளைஞரணியின் இளைய சூரியன் மு.க.ஸ்டாலினுக்கெதிராக அதிமுக இளைஞரணியின் இளைய நிலாவாகக் கொண்டாடப்பட்டவர். 28 வயசுலேயே துணை சபாநாயகர்… மூன்று கட்சிகளின் முக்கிய தளகர்த்தராக வெவ்வேறு காலகட்டங்களில் களமாடியவர். அறந்தாங்கியின் அடையாளமாய் எம்.ஜி.ஆர் காலம்தொட்டே கால் நூற்றாண்டாய் கோலோச்சியவர்…
காங்கிரஸ் எம்.பி சு.திருநாவுக்கரசரைப் பத்தி இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கு… அவரோட அரசியல் எஸ்.டி.டியைத்தான் பார்க்கப்போறோம்…

ஸ்கூல் காலேஜ் டைமில் இருந்தே அரசியல் ஈடுபாடு திருநாவுக்கரசருக்கு இருந்திருக்கு. ஆரம்பத்துல திமுக இளைஞரணில பயணிச்சவர், எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்குனதுக்கு அப்புறம் அங்கே சென்று பணியாற்றத் தொடங்கிருக்கார். ஒரு கட்டத்தில் திமுக இளைஞரணியின் இளைய சூரியனேனு மு.க.ஸ்டாலின் கொண்டாடப்பட்டப்போ, அதுக்குப் போட்டியா எம்.ஜி.ஆர் அதிமுக இளைஞரணியைத் தொடங்கி அதோட பொறுப்பை திருநாவுக்கரசருக்குத் தான் கொடுத்திருக்கார். அப்போ இளைய நிலானு இவரை ரத்தத்தின் ரத்தங்கள் கொண்டாடினர்.

1977 தொடங்கி 1996 வரைக்கும் வந்த தொடர்ச்சியான 6 தேர்தல்களில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவான பெருமை பெற்றவர். ஒரே தொகுதியில் ஆறு முறை தமிழ்நாட்டு எம்.எல்.ஏங்குற சாதனை இவர்கிட்ட மட்டும்தான் இருக்கு. 1999ல புதுக்கோட்டை எம்.பியானார். கட்சி தாண்டி நேசக்கரம் நீட்டும் பண்பாளர்களில் முக்கியமானவர். இவரோட கல்யாணத்தை எம்.ஜி.ஆர் தலைமேற்று நடத்தி வைத்தபோதிலும் கலைஞரும் மூப்பனாரும் வாழ்த்துரை வழங்கி வாழ்த்திய சம்பவமே அதற்கு உதாரணம்.

Also Read – கலெக்டரா இருந்துட்டு தாசில்தாராலாம் இருக்க முடியாது…`கா’னா கருப்பசாமி பாண்டியன் சம்பவங்கள்!

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா பேக்‌ஷன் எம்.எல்.ஏக்களை பாதுகாத்த தளகர்த்தர்களில் முக்கியமானவர். அதேபோல், சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தின்போதும் அவரைப் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தவர் திருநாவுக்கரசர்தான்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் 1989 மார்ச் 25-ம் நாள் மறக்க முடியாத நாள். 13 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபோது, நிதியமைச்சராகவும் இருந்த முதலமைச்சர் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, தனது ராஜினாமா கடிதம் குறித்த கோபத்தில் இருந்த ஜெயலலிதா, கிரிமினல் குற்றவாளி பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என்று பேசினார். அதையடுத்து ஏற்பட்ட களேபரத்தில் அதிமுகவின் செங்கோட்டையன் கைபட்டு கருணாநிதியின் கண்ணாடி கீழே விழுந்தது. அவரைத் தாக்கியதாக நினைத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டு பட்ஜெட் பண்டல்களை எடுத்து வீசத் தொடங்கினர். ஜெயலலிதா மீதும் பண்டல்களை வீச முற்படுகையில் அவரை திருநாவுக்கரசரும் கேகேஎஸ்எஸ்ஆரும் சூழ்ந்து நின்று பாதுகாத்தனர். அத்தோடு பத்திரமாக வெளியே அழைத்து வந்து அவரை தேவகி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் ஒலித்தது. அவைக்குறிப்பை சுட்டிக்காட்டி அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னாட்களில் ஜெயலலிதாவே இவருக்கு எதிராகக் களமாடியபோதும் அதைத் திறம்பட சமாளித்தவர். இவரின் தனிப்பட்ட செல்வாக்கே அவர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட காரணமாக அமைந்தது.

ரஜினி ராகவேந்திரா மண்டபம் கட்ட அனுமதி கேட்டிருந்த நிலையில், அதே இடத்தில் மற்றொரு கட்டடத்துக்கு பிரபலமான தொழிலதிபர் ஒருவரும் அனுமதி கோரினாராம். ரஜினியோ எம்.ஜி.ஆரின் உதவியை நாடவே, அப்போது அமைச்சராக இருந்த திருநாவுக்கரசர்தான் அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்திருக்கிறார். அதன்பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களாகியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதை எம்.ஜி.ஆரே போனில் கண்டிக்கும் அளவுக்குச் சென்றது. `என்னுடைய முதல் அரசியல் நண்பரான திருநாவுக்கரசரிடம் பல்வேறு விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்திருக்கிறேன். அதை அவர் எந்த இடத்திலும் வெளியே சொன்னதில்லை’ என்று ரஜினியே ஒரு பேட்டியில் பகிர்ந்திருப்பார். பின்னாட்களில் அக்னிப் பார்வை என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக திருநாவுக்கரசர் நடித்திருப்பார். அந்தப் படத்தில் இவரின் ஜோடி சரண்யா பொன்வண்ணன். அதன்பிறகு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

1990-ல் அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகத்தையும் 1996-ல் எம்.ஜி.ஆர் அதிமுக என இரண்டு கட்சிகளைத் தொடங்கினார். 1991 தேர்தலில் திருநாவுக்கரசர் கட்சி இரண்டு இடங்களில் வென்றது. எம்ஜிஆர் அதிமுகவின் ஒற்றை எம்பியாக இருந்தபோதே இவரை கூட்டணியில் சேர்த்து இணையமைச்சராக்கியது பிஜேபி. வாஜ்பாய் காலத்தில் இவர் பிஜேபியில் இணைந்த பிறகுதான் எஸ்.திருநாவுக்கரசு – சு.திருநாவுக்கரசரானார். 2004-ல் இவர் அக்கட்சியில் இணைந்தபோது அதிமுக – பிஜேபி கூட்டணி அமைந்தது. பழைய பகையை மனதில் கொண்டு இவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என ஜெயலலிதா நிர்பந்தித்தபோதும் இவரை விட்டுக் கொடுக்காத பிஜேபி, மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்.பியாக்கி அழகுபார்த்தது. 2009-ல் காங்கிரஸில் சேர்ந்த இவர் , 2016-ல் கட்சியின் மாநிலத் தலைவராகவும் பின்னர் தேசியச் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தார். தற்போது திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.

பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசர். இவரோட பெரியப்பா முத்துவேல், பெரிய மாமனார் ராமநாதன் ஆகிய ரெண்டு பேருமே அறந்தாங்கி தொகுதில காங்கிரஸ் சார்பா போட்டியிட்டவங்க. அதேமாதிரி இவரோட அப்பா சுப்பராமன் தீயத்தூர் ஊராட்சித் தலைவராவும் இருந்தவரு. இதனாலேயே இவர் அதிமுகல இருந்தப்பவே மூப்பனார் இவரை `காங்கிரஸ் மாப்பிள்ளை’னு தான் கூப்பிடுவாராம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top