சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இலுப்பூர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தற்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.

சி.விஜயபாஸ்கர்
கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக சுகாதாரத் துறையில் புகார் எழுந்தது. இந்தநிலையில், அந்தத் துறையின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருக்கும் வீடு உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 43 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
2013-2021 வரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததுடன், மனைவி, மகள் பெயரிலும் சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதுகுறித்து, சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.
என்ன சொல்கிறது எஃப்.ஐ.ஆர்?

புதுக்கோட்டை ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில், 2016 தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த வேட்புமனு, 2021 தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்து மதிப்பை ஒப்பிட்டு வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. 2016 வேட்புமனுவில் ரூ.6.41 கோடி சொத்து மதிப்பாக அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், 2021-ல் ரூ.58 கோடியாக அவர் சொத்து மதிப்பைக் காட்டியிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருக்கிறார். ரூ.53 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ கார், ரூ.40.58 லட்சம் மதிப்பிலான 85.12 சவரன் தங்க நகைகள், சென்னை தி.நகரில் ரூ.14.57 கோடி மதிப்பில் வீடு, ரூ.28.69 கோடி மதிப்பில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள், ரூ.3.99 கோடி மதிப்பில் விவசாய நிலங்கள், லஞ்ச பணத்தில் தொடங்கிய அறக்கட்டளையின் கீழ் 14 கல்வி நிறுவனங்கள், ரூ.6.58 கோடி மதிப்பில் 7 டிப்பர் லாரிகள், 10 கலவை இயந்திரங்கள், ஒரு ஜேசிபி உள்ளிட்டவைகளை வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையை அடுத்து, புதுக்கோட்டை இலுப்பூரில் இருக்கும் விஜயபாஸ்கரின் வீட்டு முன்பாக அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். வீட்டுக்குள் தன்னை அனுமதிக்குமாறு அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையானது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Also Read – Sasikala: நான்காண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா சமாதியில் மரியாதை – கண்ணீர்விட்ட சசிகலா!
0 Comments