வேலு நாச்சியார், சிவகங்கைச் சீமையை 1780 முதல் 1789-ம் ஆண்டு வரை நல்லாட்சி புரிந்த, பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையர்களை எதிர்த்த முதல் பெண் அரசி.
சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்த வேலு நாச்சியாரைப் பற்றி தெரிந்துகொள்வோமா?
ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி – முத்தாத்தாள் தம்பதியின் மகளாக 1730-ம் ஆண்டு சக்கந்தி என்ற இடத்தில் பிறந்தவர் வேலு நாச்சியார். ஆண் வாரிசுகள் வேண்டும் என்று எண்ணும் அரச குடும்பத்தினர் மத்தியில் தனது ஒரே குழந்தையான வேலு நாச்சியாருக்கு சிறுவயது முதலே குதிரையேற்றம், வாள்வீச்சு, தற்காப்புக் கலைகள், போர்ப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி உள்ளிட்டவைகளைப் பயிற்றுவித்து வளர்த்தார் செல்லமுத்து சேதுபதி.
சிவகங்கை சீமையை ஆண்ட முத்து வடுகநாதருக்கும் வேலு நாச்சியாருக்கும் 1746-ல் திருமணம் நடந்தது. இதையடுத்து, சிவகங்கை சீமையின் இளவரசியானார். ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குப் பணிந்து நடந்த ஆற்காடு நவாப், வரி கேட்டு முத்து வடுகநாதரை அணுகினார். ஆனால், ஆங்கிலேய அரசுக்கு அடிமையாக இருக்க முடியாது என்று நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்றார் முத்து வடுகநாதர். இதையடுத்து, 1772-ல் காளையார் கோவிலில் ஆங்கிலேய படைத்தளபதிகள் ஸ்மித், பாஞ்சோர் தலைமையிலான படைகளோடு மோதினார். இதில், முத்து வடுகநாதர் வீர மரணம் எய்தினார். கணவரின் வீரமரணத்துக்குப் பழிதீர்க்க ஆங்கிலேயப் படைகளை விரட்டி, சிவகங்கைச் சீமையை மீட்பேன் என்று சூளுரைத்தார்.
வெள்ளையர்களிடமிருந்து தப்பிய வேலு நாச்சியார், அவர்களுக்கு எதிராகப் படை திரட்ட மருது சகோதரர்கள் உதவினர். காளையார் கோவிலில் இருந்து திண்டுக்கல் அருகே கோபால நாயக்கரின் ஆட்சியில் இருந்த விருப்பாட்சி பாளையத்துக்குச் சென்றனர். ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்ததால், திண்டுக்கல்லில் அவர்களுக்கு வரவேற்புக் கிடைத்ததுடன், உதவிகளும் கிட்டின. வேலு நாச்சியார், அவரது மகள் வெள்ள நாச்சியாருடன் திண்டுக்கல்லில் தங்கியிருந்த நிலையில், மருது சகோதரர்கள் சிவகங்கை திரும்பி மக்களை நவாபுக்கு எதிராகக் கிளர்ச்சியூட்டினர். வேலு நாச்சியாரின் தலைமைத் தளபதியாக இருந்த தாண்டவராயன் பிள்ளை முதுமை காரணமாக 1773-ல் மரணமடைந்தார். அதன்பின்னர், வேலு நாச்சியாரின் படைத் தளபதிகளாக இருந்து அவர் சிவகங்கையை மீட்க பெரும் உதவி செய்தனர் மருது சகோதரர்கள்.
ஆங்கிலேய படைகளிடம் இருந்து சிவகங்கையை மீட்க ஹைதர் அலி உதவி செய்தார். மருது சகோதரர்கள் படைகளைத் திரட்டியதுடன், ஹைதர் அலி ஆயிரம் காலாட் படை வீரர்கள், ஆயிரம் குதிரைப் படை வீரர்களோடு சேர்த்து 12 பீரங்கிகளையும் கொடுத்தார். சிவகங்கையை இழந்து சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இழந்த மண்ணை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க மருது சகோதரர்களுடன் புறப்பட்டார் வீரமங்கை வேலுநாச்சியார்.
அவரின் பெரும்படை வருவதை அறிந்த ஆங்கிலேயப் படை நான்கு இடங்களில் வழிமறிந்தது. திண்டுக்கல்லில் இருந்து வந்த ராணி வேலுநாச்சியாரின் படையை திருப்புவனத்தில் ஆங்கிலேயப் படையின் அடியாள் மல்லாரி ராவ் தலைமையிலான பீரங்கிப் படை வழிமறித்தது. அங்கு நடந்த போரில் வளரி ஆயுதத்தால் மல்லாரி ராவ் கொல்லப்படவே அவனது தலைமையிலான படைகள் சிதறி ஓடின.
இதையடுத்து, சிலைமானில் மல்லாரி ராவின் சகோதரன் ரங்கா ராவ் தலைமையிலான படையை வென்று முன்னேறிய வேலு நாச்சியாரின் படைகளை, மானாமதுரையில் எதிர்க்கொண்டது கர்னல் மார்ட்டிஸ் தலைமையிலான ஆங்கிலேயப் படை. உள்ளூர் படைகளின் ஆதரவோடு மானாமதுரையில் வெற்றிக்கொடி நாட்டினார். அதன்பிறகு, காளையார் கோவிலை மீட்க அங்கு முகாமிட்டிருந்த நவாப் மற்றும் ஆங்கிலேயப் படைகள் மீது மும்முனைத் தாக்குதலைத் தொடுத்தார். அங்கு நடந்த கடுமையான போரில் வெற்றிவாகை சூடிய வேலு நாச்சியார் தலைமையிலான படை, சிவகங்கை சீமையை 1780-ல் மீட்டது. வேலு நாச்சியார் அரசியானார்.
சிவகங்கை சீமையை 1780ம் ஆண்டு முதல் 1789ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார் வேலு நாச்சியார். முதுமை காரணமாகத் தனக்குப் பிறகு தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை அரசியாக்கினார். அவரது ஆட்சியில் பெரிய மருது படைத்தலைவராகவும் சின்ன மருது தலைமை அமைச்சராகவும் பதவி வகித்தனர். வைகையின் கடைமடைப் பகுதியான சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்வளத்தைப் பெருக்க ஊரணிகள், குளங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டதாகப் பல்வேறு கல்வெட்டுகள் கூறுகின்றன.