நாடு முழுவதும் சட்டப்பிரிவு 124A-ன் கீழ் தேசதுரோக வழக்குகள் பதிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வழக்கின் பின்னணி என்ன.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.
தேசதுரோக சட்டம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களையும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கும் அரசியல் தலைவர்களையும் ஒடுக்கும் வகையில் பிரிட்டீஷ் அரசு கொண்டுவந்தது தேசதுரோக சட்டம். இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124A-ன் கீழ் இன்றளவும் நடைமுறையில் இருந்து வந்தது. இந்த சட்டம் அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்கள், போராட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபடுபவர்கள் மீது தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால், கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என எடிட்டர் கில்டு போன்ற அமைப்புகள், எம்.பி-க்கள், பொதுநல அமைப்புகள் என ஏராளம் பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்யா காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சட்டம் தேவைதானா என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், 2014-15 முதல் தற்போது வரை காலாவதியான 1,500 சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் மக்களுக்குத் தேவையற்ற 2,500 முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், தேசதுரோக சட்டத்தை மொத்தமாக ரத்து செய்வதா அல்லது அதன் உள்ளடக்கத்தை மாற்றுவதா என்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, தேசதுரோக சட்டம் குறித்து முடிவெடுக்க எவ்வளவு காலம் தேவை என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, மூன்று முதல் நான்கு மாத கால அவகாசம் தேவை என்று மத்திய அரசு பதிலளித்திருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய நீதிமன்றத்தின் கேள்விக்கு, தேசதுரோக சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதியாதீர்கள் என மாநில அரசுக்குத் தாங்கள் அறிவுரை வழங்க முடியாது என்பது அரசின் பதிலாக முன்வைக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
இந்தநிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசின் பதிலைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மத்திய அரசு முடிவெடுக்கும் வரை சட்டப்பிரிவு 124A-ன் கீழ் எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர். ஏற்கனவே இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள், உரிய நீதிமன்றத்தை நாடி பிணை உள்ளிட்ட நிவாரணங்களைப் பெறலாம் என்றும், புதிதாக இந்தப் பிரிவின் கீழ் எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அப்படி பதிவு செய்யப்படும் பட்சத்தில், நீதிமன்றங்களைப் பாதிக்கப்பட்டோர் நாடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளில் மேல்விசாரணையும் நடத்தக் கூடாது என்றும் நீதிபதிகள், தங்கள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.