தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா என ஐந்து மாநிலத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி 25-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் களம் வெவ்வேறாக இருந்த நிலையில், பிரதமர் மோடி பா.ஜ.க-வின் முக்கிய பிரசார பீரங்கியாக எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்ததோடு மத்திய பா.ஜ.க அரசின் சாதனைகளையும் பட்டியலிட்டுப் பேசியிருக்கிறார். ஐந்து மாநில தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு எதை மையமாகக் கொண்டிருந்தது… பார்க்கலாம் வாங்க.
-
1 தமிழ்நாடு
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து பா.ஜ.க தேர்தலைச் சந்தித்தது. பா.ஜ.க 20 இடங்களில் போட்டியிட்ட நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் மார்ச் 30-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமே தமிழகத்தில் அவர் கலந்துகொண்ட முதல் கூட்டம். அந்த மேடையில் பிரதமர் மோடியோடு தமிழக முதலமைச்சரும் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அதையடுத்து ஏப்ரல் 2-ம் தேதி மதுரை மற்றும் கன்னியாகுமரி என ஒரே நாளில் இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மோடி பேசினார். தமிழகத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடியின் உரை, தமிழகத்தின் தனிப்பட்ட கலாசாரம், பண்பாடு மற்றும் அரசின் சாதனைகளைச் சுற்றியே இருந்தது.
மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் எவ்வாறு பயனடைந்தார்கள் என்பது குறித்து பேசிய மோடி, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வைக் கடுமையாக விமர்சிக்கவும் தவறவில்லை. அதேபோல், முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரைப் பற்றியும் பேசிய மோடி, காங்கிரஸ் ஜனநாயகத்தையே மதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவந்தது, மதுரை எய்ம்ஸ் போன்றவைகளும் மோடி உரையின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆண்டாளையும் ஔவையாரையும் முன்மாதிரியாகக் கொண்டு உருவானது என்றும் மோடி, தனது பேச்சில் குறிப்பிட்டார். `தேசிய ஜனநாயக் கூட்டணியின் நோக்கம் வளர்ச்சி. ஆனால், தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் வாரிசு அரசியல்தான் பிரதானம்’ என்று தாக்கிப் பேசினார். -
2 புதுச்சேரி
புதுச்சேரியில் மார்ச் 30-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் அங்கு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அதைக் குறிப்பிட்டுப் பேசிய மோடி, சரியான அரசு நிர்வாகத்தை காங்கிரஸ் அரசு தரத் தவறிவிட்டது என்றார். எஸ்.சி, எஸ்.டி மக்களின் வளர்ச்சிக்கென புதுச்சேரியில் இருந்த அரசுகள் எதையும் செய்யவில்லை என்ற மோடி, ஊழலில் திளைத்தவை அந்த அரசுகள் என்றார்.
புதுச்சேரி தேர்தலில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுகுறித்து பேசிய மோடி, `புதுச்சேரியின் தற்போதைய நிலை மிகவும் தனித்தன்மையானது. அது காங்கிரஸ் கட்சியின் இப்போதைய நிலையைப் பிரதிபலிக்கிறது. கட்சிக்கு விசுவாசமாக பல ஆண்டுகள் இருந்தும் அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை’ என்றும் மோடி காங்கிரஸை விமர்சித்தார். -
3 மேற்குவங்கம்
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-வுக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்து வரும் மாநிலம் இது. மேற்குவங்கத்தில் காலூன்றியே ஆக வேண்டும் என்பது பா.ஜ.க-வின் முக்கியமான அஜெண்டாக்களில் ஒன்று. இதனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவரும் அமைச்சருமான ஜெ.பி.நட்டா ஆகியோர் மேற்குவங்கத் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தினர்.
ஆறு கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்கத்தில் மட்டும் பிரதமர் மோடி 11 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். அவரின் முதல் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டமும் மேற்குவங்கத்தில்தான் நடந்தது. கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் மார்ச் 7-ம் தேதி நடைந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அதன்பின்னர் மார்ச் 18-ல் பூர்லியாவிலும், மார்ச் 20-ல் காரக்பூரிலும், ஏப்ரல் 2-ல் பங்குரா கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். அதேபோல், மார்ச் 24-ல் கந்தி, உலுபேரியா, ஜெயாநகரிலும், ஏப்ரல் 3-ல் தரகேஷ்வர், சோனார்பூர் கூட்டங்களிலும் அவர் பேசினார். ஏப்ரல் 6-ல் கூச் பிஹார் மற்றும் ஹவுராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார்.
மேற்குவங்கத்தில் பிரதமர் மோடியின் பேச்சு, மாநிலத்தில் வளார்ச்சியின்மை, அரசியல் வன்முறை, ஊழல் என இந்த மூன்றை பிரதானப்படுத்தியே இருந்தது. ஊழல் குறித்து பேசுகையில், `மேற்குவங்க மாநிலத்தில் எங்கெல்லாம் திட்டம் என ஒன்று இருக்கிறதோ அங்கெல்லாம் ஊழலும் சேர்ந்தே இருக்கிறது’ என்றார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸை விமர்சித்த அதேநேரத்தில், சோனார் பங்ளா (தங்க மேற்குவங்கம்) என்ற கருத்தை முன்வைத்து பா.ஜ.கவே சரியான மாற்று என்றும் குறிப்பிட்டார். பரிவர்தான் (மாற்றம்), சலோ பால்டி (மாற்றத்தை இணைந்து கொண்டுவருவோம்) என மோடி பல்வேறு கருத்தியல்களை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். மேற்குவங்கத்தின் கிருஷ்ணா நகரில் மோடி ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இது அவர் கலந்துகொள்ளும் 26-வது பொதுக்கூட்டமாகும். -
4 கேரளா
கேரள சட்டப்பேரவையில் ஒரே ஒரு எம்.எல்.ஏவே பா.ஜ.க-வுக்கு இருக்கிறார். அந்த எண்ணிக்கையை எப்படியும் இந்த முறை அதிகரித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க களமிறங்கியிருக்கிறது. ஆளும் இடது முன்னணி கூட்டணி, காங்கிரஸின் ஜனநாயக முன்னணி என இரண்டு கூட்டணிகளையும் கடுமையாக விமர்சித்து மோடி பேசினார். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மூன்று பொதுக்கூட்டங்களில் மோடி கலந்துகொண்டு பிரசாரம் செய்தார். ஏப்ரல் 30-ல் பாலக்காட்டிலும், ஏப்ரல் 2-ம் தேதி திருவனந்தபுரம் மற்றும் பத்தினம்திட்டா பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார்.
ஆளும் கம்யூனிஸ்டும் காங்கிரஸுன் அதிகாரதுஷ்பிரயோகம், ஊழல், சாதியம் மற்றும் வாரிசு அரசியல் போன்றவற்றில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்ற விமர்சனத்தை மோடி முன்வைத்தார். சபரிமலை விவகாரம் கேரள தேர்தலில் முக்கிய பேசுபொருளாக இருந்தது. சபரிமலை போராட்டத்தின் மையப்புள்ளியான கொன்னியில், கம்யூனிஸ்ட் கட்சியை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து மோடி பேசினார். `ஐயப்ப பக்தர்களை மலர்களால் வரவேற்காமல், வன்முறையால் வரவேற்றது ஆளும் கம்யூனிஸ்ட் அரசு’ என்று மோடி விமர்சித்தார். அதேபோல், சமீபத்திய பட்ஜெட்டில் கேரள வளர்ச்சிப் பணிகளுக்கென ரூ.65,000 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் மோடி பேசினார். -
5 அசாம்
அசாமில் காங்கிரஸ், ஏ.ஐ.யு.டி.எஃப் உள்ளிட்ட 10 கட்சிகள் இருக்கும் மெகா கூட்டணியை எதிர்த்து பா.ஜ.க களமிறங்குகிறது. சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் தொடர்பான பிரச்னை, அசாம் மாநிலத்தின் பண்பாடு, கலாசாரத்தைக் காப்பதே பா.ஜ.கவின் அஜெண்டா என அம்மாநிலத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். அங்கு கரீம்கஞ்ச் பகுதியில் மார்ச் 18-ம் தேதி நடந்த பொதுக்கூட்டம் தொடங்கி, சௌபா, போகாகட், பிபூரியா, ஷிபாஜ்ஹர், கோகிராஜ்ஹர் மற்றும் தாமல்பூர் என 7 பொதுக்கூட்டங்களில் மோடி கலந்துகொண்டு பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டினார்.
அவரது பேச்சு பெரும்பாலும் மஹாஜோத் என்றழைக்கப்படும் எதிர்க்கட்சி கூட்டணியை விமர்சிப்பதையே மையப்படுத்தியே இருந்தது. எதிர்க்கட்சிகள் கூட்டணி மஹாஜோத் அல்ல; மஹாஜூத் (பெரிய பொய்கள்) என்று முழங்கினார் மோடி. சட்டவிரோதாமக் குடியேறியவர்களுக்கு ஏ.ஐ.யு.டி.எஃப் கட்சி ஆதரவு கொடுப்பதாக மோடி விமர்சித்தார். என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வரும் நிலையில், பா.ஜ.க அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லும் என்று மோடி அங்கு பேசினார். அசாமில் 30% அளவுக்கு இருக்கும் இஸ்லாமியர்களைக் குறிவைத்து பல வாக்குறுதிகளையும் மோடி கொடுத்தார்.
0 Comments