தங்கமணி

Thangamani: தங்கமணிக்கு ஸ்கெட்ச் ஏன்… ரெய்டும் பின்னணியும்!

மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது திமுக அரசு இப்போது திட்டமிட்டதல்ல… அவர்கள் எதிர்கட்சியாக இருந்த கடந்த ஆண்டுகளாக திட்டமிடப்பட்டதுதான். அதிலும் ஜெயலலிதா மறைந்து, சசிகலா சிறைக்குப் போன பின்னர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்குத் தூண்களாக இருந்த தங்கமணி, வேலுமணி, கே.சி.வீரமணி, ராஜேந்திரபாலாஜிதான் திமுக-வின் ரெய்டு லிஸ்டில் முன்னனியில் இருந்தவர்கள். ஆனால், அதில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டு விஜய பாஸ்கர் வீட்டில் இருந்து சோதனை தொடஙகப்பட்டது. அதற்குக் காரணம், கடந்த ஆட்சியிலும், அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விஜயபாஸ்கர் அதிகம் சீண்டினார். அதைப்போல் வேலுமணியும் தனிப்பட்ட முறையில் மு.க.ஸ்டாலினையும், கோவையில் திமுக-வையும் அதிகம் பதம் பார்த்தவர்.

தங்கமணி
தங்கமணி

ஏன் தங்கமணி?

ஆனால், தங்கமணி விவகாரம் வேறு. அவருக்கு ஸ்டாலின் குடும்பத்தோடு தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி முறை என்பதாலும், கொங்கு மண்டலத்தில் திமுக-வை தலைதூக்கமுடியாமல் செய்தவர்களில் முக்கியமானவர் என்பதோடு, தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியோடு ஜென்மப் பகையை வளர்த்து வைத்திருந்ததும்தான், அவருக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கு முக்கியக் காரணம் என்கின்றனர் உள்ளடி விவரங்களை அறிந்தவர்கள்.

இன்னும் ஒருபடி மேலேபோய் தங்கமணியை ஒழித்துக்கட்டுவதற்காகவே செந்தில் பாலாஜி, தங்கமணி அமைச்சராக இருந்த மின்சாரத்துறையை முக.ஸ்டாலினிடம் கேட்டு வாங்கியதாகவும் சொல்கிறார்கள். அதை தங்கமணியும் தனது பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். மின்சாரத்துறைக்கு பொறுப்பேற்ற செந்தில் பாலாஜியும், தங்கமணி செய்த முறைகேடுகள், ஊழல்கள், வெளி நாட்டு முதலீடுகளை தோண்டியெடுப்பதிலேயே கடந்த 6 மாதங்களாக குறியாக இருந்தார். 

ஸ்டாலின் - செந்தில் பாலாஜி
ஸ்டாலின் – செந்தில் பாலாஜி

மின்சாரத்துறையைப் பொறுத்தவரை, நிலக்கரி இறக்குமதி செய்வதில்தான் மிகப்பெரிய ஊழல் நடக்கும். கடந்த பத்தாண்டுகளாக அந்தத் துறையை கையில் வைத்திருந்த நத்தம் விஸ்வநாதன், தங்கமணி போன்றவர்கள், தாங்களே அந்தத் தொழிலில் முதலீடு செய்வதும், அதற்காக ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூரில் சொத்துக்கள் வாங்குவதும் வழக்கம். அதையெல்லாம் தோண்டியெடுத்து, முதலமைச்சரிடம் செந்தில் பாலாஜி கொடுத்த பிறகே இந்த அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது. 

இதில் விவகாரம் என்னவென்றால், வெளி நாட்டு முதலீடுகள், கிரிப்டோ கரன்சியில் தங்கமணி செய்த முதலீடுகள் எல்லாம் பரபரப்பாக பேசுவதற்கு பயன்படுமே தவிர, வழக்கு நடத்தும்போது அது தங்கமணிக்கே சாதகமாகப் பயன்படும். ஆனால், அவர் வீட்டில் கையிருப்பாக சிக்கிய ரொக்கப்பணம், ஊழல் பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காகவே நடத்தப்பட்ட போலி கம்பெனிகள்தான் அவருக்கு வில்லஙகமாக மாறும் என்கின்றனர் லஞ்ச ஓழிப்புத்துறை அதிகாரிகள். அந்த வகையில் தற்போது சிக்கி இருப்பவை, தங்கமணிக்கு பெரிய தலைவலிதான் என்கின்றனர். 

தங்கமணி
தங்கமணி

வீட்டில் சிக்கியவை என்ன?

குறிப்பாக, தங்கமணி அமைச்சராக பதவியேற்ற காலத்தில் அவரது சொத்து மதிப்பு  ஒரு கோடியே  1 லட்சத்து 86 ஆயிரத்து 17 ரூபாய். தற்போது அவருடைய சொத்துமதிப்பு 8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 118 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் தங்கமணி, அவருடைய மனைவி சாந்தி, மகன் தரணிதரன் என மூவரும் சட்டபூர்வமாக சம்பாதித்த தொகை  5 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 617 ரூபாயாக உள்ளது. மற்ற சேமிப்புகள், செலவுகளுக்கு முறையான கணக்கில்லை. அதாவது 4 கோடியே 85 ஆயிரத்து 72 ஆயிரத்து 19 ரூபாய் கணக்கில் வரவில்லை.  இந்தத் தொகைதான் தங்கமணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். எப்படி கணக்குக் காட்டினாலும் அதிகபட்சம் 2 கோடி ரூபாய்க்கு காட்டுவதே பெரிய விசயம். மீதித் தொகைக்கு கணக்குக் காட்டவே முடியாது என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

Also Read – Thangamani: வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து; கிரிப்டோ கரன்சி – தங்கமணி மீதான எஃப்.ஐ.ஆர் என்ன சொல்கிறது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top