Rajaji

சுவடே இல்லை… தமிழக அரசியல் களத்தில் காணாமல்போன கட்சிகள்!

காங்கிரஸ், நீதிக்கட்சி தொடங்கி திராவிடக் கட்சிகள் வரை தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்திருக்கின்றன… இருந்து வருகின்றன. 1967-க்குப் பிறகு தமிழகத்தில் தி.மு.க – அ.தி.மு.க என இரண்டு திராவிடக் கட்சிகளே ஆட்சியமைத்து வருகின்றன. இவற்றைத் தவிர்த்து தமிழகத் தேர்தல் வரலாற்றில் தலைவர்கள் பலர் பல்வேறு காலகட்டங்களில் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். அவற்றில் பல இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போன வரலாறு நிலைத்திருக்கிறது.

தமிழகத் தேர்தல் களத்தில் தொடங்கப்பட்டு காணாமல் போன அரசியல் கட்சிகளைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

சுதந்திரா கட்சி – ராஜாஜி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆவடி, நாகபுரி மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இடதுசாரி கொள்கையின் அடிப்படையில் இருந்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த ராஜாஜி, தங்கதூரி பிரகாசம் பந்துலு, மினு மாசானி, பேராசிரியர் என்.ரங்கா, கே.எம்.முன்ஷி ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இவர்கள் ஒன்றுசேர்ந்து ராஜாஜி தலைமையில், 1959ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி சுதந்திரா என்ற கட்சியைத் தொடங்கினர்.

Rajaji
Rajaji

1962 தேர்தலில் போட்டியிட்ட சுதந்திரா கட்சி 18 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலில் 6.8% வாக்குகளைப் பெற்றது. அதேபோல், பீகார், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஒடிசா சட்டப்பேரவைகளில் முக்கியமான எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்தது. அடுத்துவந்த 1967 தேர்தலில் 8.7% வாக்குகளுடன் 44 தொகுதிகளிலும் வென்றது. 1971 தேர்தலில் வாக்குசதவிகிதம் 3-ஆகக் குறைந்தநிலையில், 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 1971-ல் ராஜாஜி மறைவுக்குப் பின்னர், கட்சியின் செயல்பாடுகள் மங்கின. 1974-ல் சரண்சிங் தலைமையில் இக்கட்சி பாரதிய லோக் தளத்தோடு இணைந்துக் கொள்ளப்பட்டது.

தமிழரசுக் கட்சி – மா.பொ.சி

சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து விலகி தொடங்கிய கட்சிதான் தமிழரசுக் கட்சி. 1945ம் ஆண்டு முதல் மா.பொ.சி தமிழரசு எனும் மாத இதழை நடத்தி வந்தார். பின்னர் தமிழரசுக் கட்சி என்ற பெயரில் 1946 நவம்பர் ஒன்றாம் தேதி புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்தார். மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரித்து ஆந்திரா 1953-ல் உருவாக்கப்பட்டபோது, மதராஸ் மனதே’ என்று தெலுங்கு பேசும் பகுதி மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மா.பொ.சிவஞானம்
மா.பொ.சி

தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம்’ என்ற கோஷத்தோடு தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார் மா.பொ.சி. இதனால், சென்னை தமிழகத்துக்குக் கிடைத்தது. அதேபோல், 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பின்போது திருத்தணி, செங்கோட்டை போன்றவை தமிழகத்தோடு இணைய இவரது போராட்டமே காரணம். மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெறவும் மா.பொ.சி தலைமையிலான தமிழரசுக் கட்சி முக்கியக் காரணமாக இருந்தது. 1995 அக்டோபர் 3-ம் தேதி மா.பொ.சி மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி காணாமல் போனது.

தமிழ் தேசியக் கட்சி – ஈ.வெ.கி சம்பத்

EVK Sambath
ஈ.வி.கே.சம்பத்

பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி சம்பத், திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா விலகி தி.மு.க-வைத் தொடங்கியபோது அவரோடு இணைந்தார். சுமார் 12 ஆண்டுகள் தி.மு.க-வின் முன்னணித் தலைவராக இருந்த அவர் திராவிட நாடு பிரிவினைக் கொள்கை தொடர்பாக அண்ணாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று 1961-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினார். கண்ணதாசன், பழ.நெடுமாறன், சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் இவரது கட்சியில் பணியாற்றியவர்கள். 1962 தேர்தலில் இந்தக் கட்சி படுதோல்வியடைந்தது. போட்டியிட்ட 9 இடங்களிலும் தோற்றது. அதன்பின்னர், 1964-ல் கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைந்தார் ஈ.வெ.கி. சம்பத்.

எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.க – சு.திருநாவுக்கரசர்

Thirunavukarasar
சு.திருநாவுக்கரசர்

1991 – 96 ஆட்சிக்காலம் அ.தி.மு.கவுக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. 1996 தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியடைந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.கவிலிருந்து சு.திருநாவுக்கரசர் தலைமையில் ஒரு பிரிவினர் விலகி புதிய கட்சியைத் தொடங்கினர். பின்னர், அது எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.க என்று பெயர் மாற்றம் பெற்றது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சி இடம்பெற்றது. 2001 சட்டமன்றத் தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்டு 1.21 லட்சம் வாக்குகளைப் பெற்றது. 2002-ல் இந்தக் கட்சியை திருநாவுக்கரசர் பா.ஜ.க-வில் இணைந்துக் கொண்டார்.

நாடாளும் மக்கள் கட்சி – கார்த்திக்

நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக்

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி ஹீரோவாக இருந்த கார்த்திக், 2006ம் ஆண்டு முதல் ஃபார்வார்டு பிளாக் கட்சியில் செயல்பட்டு வந்தார். அக்கட்சியிலிருந்து விலகி 2009-ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2009 தேர்தலில் விருதுநகர், தேனி என இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின்னர் இந்தக் கட்சி காணாமல் போனது. இந்தநிலையில், கடந்த 2018 டிசம்பர் 15-ல் திருநெல்வேலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கார்த்திக், `2016-க்குப் பிறகு அகில இந்திய நாடாளும் கட்சி செயல்படவில்லை. அதனால், அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு தற்போது மக்கள் உரிமைகளை வென்றெடுக்க மக்கள் உரிமை காக்கும் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்குகிறேன்’ என்று அறிவித்தார்.

தாயக மறுமலர்ச்சிக் கழகம், அகில இந்திய லட்சிய தி.மு.க – டி.ராஜேந்தர்

தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டு வந்த இயக்குநர், நடிகர் டி.ராஜேந்தர் அக்கட்சியில் இருந்து 1991-ல் நிக்கப்பட்டார். அப்போது தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிய அவர், 1991 சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார். அதில், 2 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், 1996-ல் கட்சியை தி.மு.கவில் இணைத்தார். பின்னர், 2001 -2004 அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், 2004 ஏப்ரலில் அகில இந்திய லட்சிய தி.மு.க என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார்.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

2013-ல் கருணாநிதியை அவர் நேரில் சந்தித்தார். அதன்பிறகு கட்சி செயல்பாடுகள் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், இலட்சிய தி.மு.க என்ற லெட்டர் பேடில் அவருக்கு டி.ராஜேந்தர் அஞ்சலிக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கட்சி இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவர்தான் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

நாம் தமிழர் கட்சி – சி.பா.ஆதித்தனார்

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்ற முழக்கம் மூலம் தமிழ் மக்களுக்காகப் போராடியவர் சி.பா.ஆதித்தனார். சிங்கப்பூர் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு சென்னைக்குக் குடும்பத்தோடு இடம்பெயர்ந்த சி.பா.ஆதித்தனார், 1942ம் ஆண்டு தினத்தந்தி நாளிதழைத் தொடங்கியவர். 1942-ல் தமிழ் ராச்சியக் கட்சி என்ற கட்சியைத் தொடங்கிய அவர், பின்னர் 1957-ல் அதைநாம் தமிழர் கட்சி’ என்று பெயர் மாற்றம் செய்தார். அதற்குக் காரணமாக சி.பா.ஆதித்தனார் சொன்னது; “நான் அயர்லாந்து விடுதலை இயக்கத்தை அறிந்துள்ளேன். அதன் பெயர் ‘சின்பெயின்’. அதன் பொருள் நாங்கள் ஐரிஷ் மக்கள்.

சி.பா.ஆதித்தனார்

இங்கிலாந்து மக்களும் அயர்லாந்து மக்களும் வேறு வேறானவர்கள் என்பதையும் அது குறித்தது. அதுபோல் ‘நாம் தமிழர்’ என்று சொல்லும்போது நாங்கள் இந்தியர்களுமல்ல, திராவிடர்களுமல்ல, நாங்கள் தமிழர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. அதனால் தான் நாம் தமிழர் என்ற பெயரை தெரிவு செய்தேன்” என்றார்.

அண்ணாவின் அழைப்பை ஏற்று தி.மு.கவில் பணியாற்றிய சி.பா.ஆதித்தனார், தமிழக சட்டப்பேரவை சபாநாயகராகவும் பணியாற்றியவர். தினம் ஒரு திருக்குறள், தமிழ் அறவே தெரியாதவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் பேச வேண்டும் போன்ற திருத்தங்களைக் கொண்டுவந்தவர். சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி அதன்பிறகு செயல்படவே இல்லை. இந்தநிலையில், 2010 மே 18-ல் நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் சீமான் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அந்த கட்சி சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வருகிறது.

Also Read – எம்.ஜி.ஆருக்குப் பிறகு தி.மு.க-வை உடைத்த வைகோ – ம.தி.மு.க உருவான பின்னணி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top