சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் விதர்பா சுழற்பந்து வீச்சாளர் அக்ஷய் கர்னாவேர், 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி சாதனை படைத்திருக்கிறார். டி20 வரலாற்றில் ஒரு பவுலர் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசுவது இதுவே முதல்முறையாகும்.

சையது முஷ்டாக் அலி கோப்பை
நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான சையது முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான போட்டி நடந்து வருகிறது. இதில், மணிப்பூருக்கு எதிரான போட்டியில், முதலில் பேட் செய்த விதர்பா அணி 222 ரன்கள் குவித்தது. மணிப்பூர் அணியை 55 ரன்களில் சுருட்டிய விதர்பா, 167 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அக்ஷய் கர்னாவேர்
இந்தப் போட்டியில், 7வது ஓவரை வீசிய விதர்பாவின் அக்ஷய், மணிப்பூரின் Sanatombary laiphanbam விக்கெட்டை வீழ்த்தினார். 9வது ஓவரின் முதல் ஐந்து பந்துகளை டாட் பால்களாக வீசிய அவர், கடைசி பந்தில் ஜான்சன் சிங்கை ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின்னர் வீசிய இரண்டு ஓவர்களையும் மெய்டன்களாக வீசிய அக்ஷயின் மேட்ச் ஸ்பெல் 4-4-0-2 என்றிருந்தது. வலது மற்றும் இடது என இரண்டு கைகளாலும் சுழற்பந்து வீசும் இந்தியாவின் முதல் Ambidextrous பந்துவீச்சாளரான அக்ஷய் இதுகுறித்து பேசுகையில், `என்னால் இதை நம்பவே முடியவில்லை. ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் பந்துவீசியது அசாதாரண விஷயம்தான். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்’ என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிக்கனமான பந்துவீச்சு என்ற பாகிஸ்தானின் முகமது இர்ஃபான் சாதனையை அவர் முறியடித்திருக்கிறார். மேலும், டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்கள் பந்துவீசி, அந்த நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசிய முதல் பவுலர் என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரராகியிருக்கிறார். அதேபோல், இன்று நடந்த சிக்கிம் அணிக்கெதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய அவர், 4 ஓவர்களில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். அதேபோல், மத்தியப்பிரதேச அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் ஐயர், பீகார் அணிக்கெதிரான போட்டியில் 4 ஓவர்களில் 2 மெய்டன்கள், 2 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் (4-2-2-2) வீழ்த்தினார். டி20 கிரிக்கெட்டின் மிகவும் சிக்கனமாக பந்துவீச்சுப் பட்டியலில் இது 5-வது இடம்பிடித்திருக்கிறது.
Also Read : கிரிக்கெட் வர்ணனையில் சாதியைப் பற்றி பேசுவதா… சுரேஷ் ரெய்னாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!