Indian Team

ஒரே நேரத்தில் 2 தொடர்கள்.. 2 வெவ்வேறு அணிகள்… இந்திய அணியின் அப்ரோச் சொல்லும் சேதி?

வரும் ஜூன் மாதத்தில் இந்திய அணி, உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. அதேநேரம், மற்றொரு அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் – டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு தொடர்கள்… என்ன காரணம்?

ஐசிசியின் முதல் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் மைதானத்தின் ஜூன் 18-21 தேதிகளில் நடக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கிய இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடர் முதல் 2021 பிப்ரவரியில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை தொடர் வரை சுமார் 2 ஆண்டுகளில் 27 டெஸ்ட் தொடர்கள் சாம்பியன்ஷிப்புக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. டெஸ்ட் தொடர்கள் முடிவில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகின.

Virat Kohli - Kane williamson

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

கொரொனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளோடு உலக அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோலவே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் கட்டுப்பாடுகளோடு நடத்தப்பட இருக்கின்றன. இதற்காக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் மாதத் தொடக்கத்தில் இங்கிலாந்து புறப்பட்டுச் செல்ல இருக்கிறது. ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்திய வீரர்கள் குடும்பத்தோடு நேரம் செலவிட்டு வருகிறார்கள். அதேநேரம், கொரோனா விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர்களுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியிருக்கிறது.

இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லும்முன் மும்பையில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை மறந்துவிடுங்கள் என பிசிசிஐ எச்சரிக்கும் தொனியிலேயே அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது என்கிறார்கள். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குப் பின்னர், இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது.

இலங்கை தொடர்!

இந்தசூழலில் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. அனைத்து போட்டிகளும் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 16 மற்றும் 19 தேதிகளிலும் அதைத் தொடர்ந்து டி20 போட்டிகள் ஜூலை 22, 24 மற்றும் 27 தேதிகளிலும் நடக்கின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து செல்லவிருக்கும் நேரத்தில், இந்தத் தொடரில் ஷிகர் தவன் தலைமையில் ஒயிட்பால் ஸ்பெஷலிஸ்ட்கள் அடங்கிய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ-யின் புதிய முடிவு

ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் நடக்கும் இரண்டு தொடர்களுக்கு வெவ்வேறு அணிகளை அனுப்பும் வழக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இல்லை. ஆனால், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில் ஐசிசியின் எஃப்.டி.பி எனப்படும் எதிர்காலத்தில் திட்டமிட்டிருக்கும் தொடர்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டே பிசிசிஐ இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா என முக்கிய வீரர்கள் இங்கிலாந்து செல்ல இருக்கும் நிலையில், இலங்கை தொடருக்காகப் பல புதுமுகங்கள் அணியில் சேர்க்கப்பட இருக்கிறார்கள். இதற்காக ஜூலை 5-ம் தேதி இலங்கை செல்லும் இந்திய பி டீம், குறுகிய காலத்தில் தொடர்களை முடித்துவிட்டு அம்மாதம் 28-ம் தேதியே இந்தியா திரும்புகிறது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read – முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம்… விண்ணப்பிப்பது எப்படி? #FAQs

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top