மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் சாதனை படைத்திருக்கிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த அஜாஸ், இந்திய அணிக்கெதிராக நியூசிலாந்து வீரராக இதை சாதித்திருக்கிறார்.
அஜாஸ் படேல்
மும்பையில் பிறந்து, நகரின் தெருக்களில் எட்டு வயது வரை தனது நண்பர்களோடு கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்டவர் அஜாஸ் படேல். ஃபிரிட்ஜ் மெக்கானிக்கான அஜாஸின் தந்தை யூனஸ், தனது குடும்பத்தோடு நியூஸிலாந்தின் ஆக்லாந்துக்குக் குடிபெயர, புதிய நாட்டில் புதிய ஊரில் குடியேறியிருக்கிறார். சிறுவயதில் பள்ளி விட்டால் வீடு; வீட்டை விட்டால் பள்ளி என சாதாரண மாணவராக நியூசிலாந்தில் ஆரம்ப நாட்களைக் கழித்திருக்கிறார். இதுகுறித்து நியூசிலாந்து ஊடகம் ஒன்றில் பேசியிருக்கும் அவர், `நான், எனது சிறுவயதில் உறவினரின் பிள்ளைகளோடு மும்பை பள்ளியில் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். ஆனால், இங்கு (நியூசிலாந்து) வந்த பின்னர் பள்ளி நாட்களில் பெரிதாக நண்பர் இல்லை. பள்ளி முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்துவிடுவேன்’ என்று ஆரம்ப நாட்களை அசைபோட்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் தந்தையின் சகோதரி ஒருவர் தலையிட்டு, அவரது கவனத்தை கிரிக்கெட் பக்கம் திருப்பியிருக்கிறார். அங்கிருந்த லோக்கல் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து பயிற்சிபெறத் தொடங்கியிருக்கிறார். இயல்பிலேயே இடது கை பழக்கமுள்ள அவர், வேகப்பந்து வீச்சில் சாதிக்க எண்ணியிருக்கிறார். கல்லூரி நாட்களில் இடதுகை வேகப்பந்துவீச்சில் தொடர்ச்சியாக அசத்தியிருக்கிறார். அவாண்டேல் கல்லூரியில் இவருடன் பயின்ற சக மாணவர்கள்தான் மார்டின் கப்தில் மற்றும் ஜீத் ராவல். ஜூனியர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து பெரிய அடி வாங்க, சற்று நிதானித்த அஜாஸ் பேட்டிங்கில் கவனம் செலுத்தலாமா என்று ஓபனாகவே பயிற்சியாளரும் முன்னாள் நியூசிலாந்து வீரருமான தீபக் படேலிடம் விவாதித்திருக்கிறார். இந்த விவாதம் அவரது வாழ்வில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால், தனது உயரத்துக்கு சுழற்பந்துவீச்சில் கலக்க முடியும் என்பதை பயிற்சியாளர் வாயிலாக உணர்ந்துகொண்ட அஜாஸ், ஸ்பின்னில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். ஆனால், வேகப்பந்துவீச்சில் இருந்து ஸ்பின்னுக்கு மாறுவது அவ்வளவு எளிதாக இல்லை. இதற்காகக் கடினமான இலக்குகளை வைத்துக் கொண்டு பயிற்சியைத் தொடர்ந்திருக்கிறார். தினசரி ஆயிரத்துக்கும் குறையாமல் டெலிவரிகளை வீசி கடினமாகப் பயிற்சி எடுத்தார்.
திருப்பம் தந்த உள்ளூர் கிரிக்கெட்
ஆக்லாந்து கிளப் டீமில் ஸ்பின்னர்கள் ஏற்கனவே முடிவாகியிருந்த நிலையில், நேப்பியரின் டாராடேல் கிளப் டீமுக்காக விளையாடத் தொடங்கினார். தொடர்ச்சியா இரண்டு ஆண்டுகள் கிளப் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 5 பௌலர்களுள் ஒருவராக ஜொலித்திருக்கிறார். இதற்காகவே முதல்முறையாக வீட்டை விட்டு தனியாக இருந்த அஜாஸ், மெதுவாக வெற்றிகரமாகத் தடம் பதிக்கத் தொடங்கினார். 2012 டிசம்பர் தொடங்கி தனது ஸ்பின் பவுலிங் கரியரில் அசத்தத் தொடங்கிய அஜாஸ், தனது 30-வது பிறந்தநாளுக்கு சில நாட்கள் முன்பாக நியூசிலாந்து அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்பில் விளையாடும் அணியில் இடம்பெற்றார். மிட்செல் சாட்னர், டாட் ஆஸ்லோ ஆகியோர் காயமடையவே, முக்கிய ஸ்பின்னராக நியூஸிலாந்து இவரைத் தேர்வு செய்தது. அபுதாபி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய அவர், தொடர்ச்சியாகத் தனது திறமையை நிரூபித்து வருகிறார். வான்கடே டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோருக்குப் பிறகு டெஸ்டின் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார். தான் பிறந்த மண்ணிலேயே இந்த சாதனையை அவர் படைத்திருப்பது இன்னும் சிறப்பு.