Retired Out – Retired Hurt வித்தியாசம்… ஐசிசி விதி என்ன சொல்கிறது?

லக்னோ அணிக்கெதிரான போட்டியின் 19-வது ஓவரில் ராஜஸ்தான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், Retired Out முறையில் வெளியேறினார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் Retired Out முறையில் அவுட்டான முதல் வீரர் என்ற வரலாறைப் படைத்தார். Retired Out-க்கும் Retired Hurt-க்கும் என்ன வித்தியாசம். ஐசிசி விதி என்ன சொல்கிறது என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 10-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது, ராஜஸ்தான் அணியின் வழக்கமான நம்பர் 6 பேட்ஸ்மேனான ரியான் பராக்குக்குப் பதிலாக அஸ்வின் களமிறக்கப்பட்டார். ஆறாவது விக்கெட்டுக்கு ஷிம்ரான் ஹெட்மெயரோடு கைகோர்த்து 68 ரன்கள் எடுத்த அஸ்வின், 23 பந்துகளில் 28 ரன்கள் சேர்ந்தார். அவேஷ் கான் வீசிய 18-வது ஓவரின் முதல் 2 பந்துகள் முடிந்திருந்த நிலையில், திடீரென அஸ்வின் களத்தை விட்டு வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 135 ரன்களாக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய ரியான் பராக் 4 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ஹெட்மெயர் 59 ரன்கள் சேர்க்கவே, ராஜஸ்தான் 165 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் அந்த அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

அஸ்வின்
அஸ்வின்

19-வது ஓவரில் அஸ்வின் திடீரென வெளியேறியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முதல் இன்னிங்ஸ் முடிவில் பேசிய ஹெட்மெயர் கூறியிருந்தார். மேலும், அஸ்வின் மிகவும் சோர்வாக இருந்ததாகவும், அடுத்து களமிறங்கிய ரியான் பராக் ஒரு சிக்ஸர் அடித்து வலு சேர்த்ததாகவும் அவர் கூறினார். இந்தநிலையில், அஸ்வின் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறியது அணி நிர்வாகத்தின் முடிவுதான் என கேப்டன் சஞ்சு சாம்சன் பதிலளித்தார்.

Retired Out – Retired Hurt – ஐசிசி விதி என்ன சொல்கிறது?

பேட்டிங்கின்போது பேட்ஸ்மேன் காயமடைந்தால், அதற்கு மேல் தன்னால் பேட் செய்ய முடியாது என்பதை உணர்ந்தால், நடுவரிடம் தெரிவித்துவிட்டு Retired Hurt முறையில் வெளியேறலாம். அப்படியான சூழலில், விக்கெட்டுகள் கைவசம் இல்லாத நிலையில் அவரால் பின்வரிசையில் களமிறங்கி விளையாட முடியும். சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் இது எத்தனையோ முறை நடந்திருக்கிறது. 2019 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான அந்தப் போட்டியில் சி.எஸ்.கே வீரர் கேதர் ஜாதவ் Retired Hurt முறையில் வெளியேறினார். பின்னர், கடைசிக் கட்டத்தில் காயத்துடன் விளையாடி சி.எஸ்.கேவுக்கு வெற்றி தேடித்தந்திருப்பார்.

கேதர் ஜாதவ்
கேதர் ஜாதவ்

ஆனால், Retired Out மூலம் களத்தை விட்டு வெளியேறியவர் மீண்டும் களமிறங்க அனுமதியில்லை. ஐபிஎல் தொடரில் Retired Out முறையில் வீரர் ஒருவர் வெளியேறியது இதுதான் முதல் நிகழ்வு. ஐசிசி விதி 25.4.1-ன்படி, வீரர்/வீராங்கனை ஒருவர் பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் நடுவரிடம் காரணத்தைத் தெரிவித்துவிட்டு ரிட்டையர்டு ஆக முடியும். ஆனால், நடுவரிடம் அனுமதி பெறாமல் களத்தை விட்டு வெளியேறினால், அவரது இன்னிங்ஸை மீண்டும் தொடங்க எதிரணியின் கேப்டனின் அனுமதி கிடைக்காது. அப்படி வெளியேறியவர், மீண்டும் வர இயலாமல் போனால் அவர், Retired Out ஆனதாகக் கருதப்படுவார்.

இதற்கு முன் நடந்திருக்கிறதா?

இங்கிலாந்தின் நார்தம்ஷயர் அணிக்கெதிராகக் கடந்த 2010-ல் நடந்த டி20 போட்டியில் Retired Out முறையில் பாகிஸ்தானிஸ் அணியின் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி வெளியேறினார். சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, கடந்த 2019-ல் நடந்த தெற்காசிய டி20 தொடரில் மாலத்தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் பூடான் வீரர் சோனம் டாப்கே இதேமுறையில் வெளியேறியிருக்கிறார். அதேபோல், 2019 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் கமீலா வாரியர்ஸ் அணியின் சன்ஸாமுல் இஸ்லாம் என்கிற வீரரும் Retired Out முறையில் வெளியேறிய சம்பவம் நடந்திருக்கிறது.

Also Read – உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் ஐபிஎல் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top