கூகுள் – ஜியோ கூட்டணியில் Google Jio next என்ற பட்ஜெட் லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்திருக்கிறார். இந்த ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
ஜியோ நிறுவனத்தின் 44-வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் பேசிய முகேஷ் அம்பானி கூகுள் ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஓராண்டில் மட்டும் கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் என மூன்று மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களோடு கைகோர்த்திருக்கும் ஜியோ ஒரு லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகளை ஈர்த்திருக்கிறது.
Google jio next
அந்தவகையில் கூகுளுடன் இணைந்து பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க இருக்கிறது ஜியோ. இதுகுறித்து கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, “இன்றைய சூழலிலும் இந்தியாவில் 300 மில்லியன் மொபைல்போன் பயன்பாட்டாளர்கள் 2ஜி சேவையில் இருந்து அப்கிரேட் ஆக முடியாத நிலை இருக்கிறது. காரணம், குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களைக் கூட வாங்க முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். நானும் சுந்தரும் கடந்த ஆண்டு இதுபற்றி பேசினோம். எல்லா வசதிகளும் கொண்ட அதேநேரம் குறைந்த விலையில், ஒரு ஸ்மார்ட்போனைத் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்’’ என்றார்.
இந்த கூட்டத்தில் வீடியோகான்ஃப்ரஸில் உரையாற்றி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை, “டிஜிட்டல் இந்தியாவின் ஒரு முயற்சியாக ஜியோ நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஸ்மார்ட்போனுக்காகவே ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கியிருக்கிறோம்’’என்று தெரிவித்தார்.
ஃபியூச்சர்ஸ்
கூகுள் ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் இருக்கும் பெரும்பாலான வசதிகள் பற்றி கூறப்பட்டிருந்தாலும், அதன் விலை எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஆனால், இந்த ஸ்மார்ட்போனின் விலை 10,000 ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள். மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே, பிளே ஸ்டோர் வசதி, வாய்ஸ் அசிஸ்டெண்ட், ஆட்டோமெட்டிக் ரீட்-அலௌட் ஸ்க்ரீன் டெக்ஸ்ட் வசதி, மொழிபெயர்ப்பு வசதிகளோடு வரும். 2ஜியில் இருந்து 4ஜிக்கு அப்கிரேட் ஆக நினைப்பவர்களைக் குறிவைத்துக் களமிறக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனுக்காகவே பிரத்யேகமான ஆண்ட்ராய்டு ஓ.எஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஐ பவர்டு கேமரா பல்வேறு ஃபில்டர்களையும் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கூகுள் வழங்கும் வழக்கமான ஓ.எஸ் அப்டேட்டுகளும் இதற்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
Also Read – உங்க பெயர்ல எத்தனை சிம் கார்டு இருக்கு… கண்டுபிடிக்க ஈஸியான வழி!