அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெஸா பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்றார். உலகம் முழுவதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அழகிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இந்தியாவில் இருந்து ஆட்லின் கேஸ்டலினோ இந்தப் போட்டியில் கலந்துகொண்டு நான்காவது இடத்தைப் பிடித்தார். அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தான் இந்தக் கட்டுரையின் வழியாக தெரிஞ்சுக்கப் போறோம்.
ஆட்லின் கேஸ்டலினோ குவைத்தில் அல்போன்ஸ் மற்றும் மீரா கேஸ்டலினோ தம்பதிக்கு 1998-ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி நகரில் உள்ள உதயவரா பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. பியூட்டி குயினாக வளர்ந்து வரும் சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டார். இதன் வழியாக பெண்கள் அனுபவிக்கும் வலியை புரிந்துகொண்டு அவர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினார். இரவு பகலாக மில்லியன்கணக்கான பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போராளியாகவும் சுயமாகப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் நபராகவும் ஆட்லின் இருந்து வந்துள்ளார்.
டைம்ஸ் பியூட்டி பேஜண்ட் குழுவிடம் ஆட்லின் பேசும்போது, “நான் குவைத் நாட்டில் பிறந்து வளர்ந்தேன். பெண்களுக்கு எதிராக அதிகமாக வன்முறைகள் நடந்த ஒரு பகுதியில் வளர்ந்தேன். அதிகமான வன்முறை சம்பவங்களை நான் கண்டிருக்கிறேன். அதற்கு பலியாகவும் ஆகியிருக்கிறேன். வளர்ந்து வரும் குழந்தையாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஏற்றக்கொள்ளத்தக்கது என்று நான் நினைத்தேன். யாரும் இதற்கு எதிராக பேசாததால் இந்த வன்முறைகளை மிகவும் சாதாரணமாக நினைத்தேன். வளர்ந்த பிறகுதான் ஒரு பெண்ணின் குரல் எவ்வளவு வலிமையானது என்பதை நான் உணர்ந்தேன்.
ஒரு பெண்ணாக இருப்பது போராட்டத்தைப் பற்றியது மட்டும் அல்ல. பெண்ணாக இருப்பதன் வலிமையே உங்களுக்கு முக்கியம் என தோன்றும் விஷயங்களுக்காக எழுந்து நிற்பதுதான். நாங்கள் ஒரு நகரத்தில் இருப்பதால் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கடினமான நேரங்களை எதிர்கொள்ளும் எல்லா பெண்களுக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். வெளியே கேட்கும் சப்தங்களை நிறுத்தி உங்கள் உள்ளே கேட்கும் சப்தத்தை கேளுங்கள். பெண்களுக்கென சரியான அடித்தளம் இல்லாவிட்டால் அந்த சமூகம் செழிக்க முடியாது. சமூகம் தன்னை கட்டியெழுப்ப முடியாது. இதனை கருத்தில் கொள்வது எப்போதும் முக்கியமானது.
Also Read : மன அழுத்தம் குறைய இந்த 6 உணவுகள் உதவலாம்… டிரை பண்ணிப் பாருங்க!
கொரோனா தொடர்பான பதற்றம் நிலவும் சூழலிலும் பெண்களுக்கான அதிகாரத்தை அளிப்பதும் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் மிகவும் முக்கியம். உடல்நலம் சரியாக இல்லாத பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட தேவையை ஆதரிக்கும் எந்த அமைப்பும் இல்லை. எனவே, ஒரு சமுதாயமாக அதிக பொறுப்புள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும். சிறுமிகளை தவறவிடாமல் அவர்களின் நம்பிக்கையை வளர்த்து அவர்களுக்கு உதவ வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் நடக்கும்போது அதற்கு எதிராக அவர்கள் குரல் கொடுப்பார்கள்” என்று பேசினார்.
ஒல்லியாகவும் நிறம் சற்று கருப்பாகவும் இருந்ததால் பலவித ஒடுக்குதல்களுக்கு ஆளானதாக ஆட்லின் குறிப்பிடுகிறார். சமூகம் உங்களைப் பற்றி சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள். அவர்கள் ஒல்லியானவள் என்று அழைத்ததால் நானும் ஒல்லியாக உணர்ந்தேன். நான் குவைத்தில் வளர்ந்ததால் அத்தகைய இடத்தில் அழகுப்போட்டி என்ற ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது. பள்ளியில் படிக்கும்போது ஒருநாள் ஒரு பெண் என்னிடம்
`you are my Miss Universe’ என்று கூறினாள். அது என்னவென்று வீட்டுக்கு வந்து இணையத்தில் தேடி பார்த்தேன். பெண்கள் நம்பிக்கையுடன் மிஸ் யூனிவர்ஸ் நிகழ்ச்சியில் நடப்பதைப் பார்த்து மிகவும் விரும்பினேன். நான் என்னையும் பார்த்தேன். அன்று, இந்த ஒல்லியான பெண் மிஸ் இந்தியாவை நான் பிரதிநிதித்துவப் படுத்துவேன் என்று நான் நினைக்கவில்லை.
என்னுடைய கைகளிலும் கால்களிலும் பல கொசுக்கள் கடித்த பல தழும்புகள் இருந்தன. இப்படி இருக்கும்போது என்னால் எதையும் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் மும்பைக்கு வந்த பிறகு நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. நிறைய மனிதர்களை சந்திப்பதும் மக்கள் தங்களை நம்புவதன் மூலம் பல்வேறு விஷயங்களை அடைவதையும் பார்த்தேன். இது எனக்குள் பல மாற்றங்களைக் கொண்டு வந்தன.” என்றார். எதையும் பேசுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் செயல்களிலும் ஆட்லின் மிகச்சிறந்தவராகத் திகழ்கிறார். மக்களுக்குத் தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார். கொரோனா தொடர்பான ஊரடங்குகள் இருக்கும் இந்த நேரத்திலும் தொடர்ந்து உதவிகளைச் செய்து வந்தார். சமூக ஊடகங்களின் வழியாக எச்.ஐ.வி பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டி வழங்கியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக அக்ஷய பாத்ரா என்ற பணம் திரட்டும் திட்டத்தை ஃபேஸ்புக்கில் அறிமுகப்படுத்தி நிதி திரட்டியுள்ளார். PCOS தொடர்பான பிரசாரம் ஒன்றையும் மேற்கொண்டு பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்தப் பிரசாரத்தில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1.5 லட்சம் பெண்கள் இணைந்தனர். கடந்த ஆண்டின் இறுதியில் சான்டாவாகவும் நடித்து குழந்தைகளுக்கு மறுசுழற்சி செய்யும் வகையில் பல பரிசுகளை வழங்கியுள்ளார். ஆட்லின் இந்தியப் பெண் விவசாயிகளுக்கு இலவச விவசாய உபகரணங்களை வழங்கும் நோக்கில் நிதி திரட்டவும் செய்துள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடும்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளார். பல்வேறு என்.ஜி,ஓக்களுடனும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் ஆரம்பகாலத்தில் பணியாற்றினார். 2018-ம் ஆண்டு Miss TGPC season 4' டைட்டிலை வென்றார். 2019-ம் ஆண்டு
`Miss Cocoberry Diva’ பட்டத்தை வென்றார். நடனமாடுவது, பயோகிராபிக்கல் ஆவணப்படங்களைப் பார்ப்பது. ஸ்டாண்ட் அப் காமெடிக்களை பார்ப்பது போன்றவை இவரது பொழுதுபோக்குகளாகும். இவர் மிகச்சிறந்த ஸ்விம்மர், டேபிள் டென்னிஸ் ப்ளேயர் மற்றும் த்ரோ பால் ப்ளேயர். `Liva Miss Diva Universe 2020’ பட்டம் வென்றது அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மாடலிங் துறையில் அவரை பிஸியான நபராகவும் மாற்றியது.
“என்னுடைய பாட்டி எனது தாயை 22 வயதில் பெற்றெடுத்தபோது மறைந்தார். இன்று எனக்கு வயது 22. மிஸ் யூனிவர்ஸில் இந்தியா சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. என் பாட்டியைப்போல ஒவ்வொரு பெண்ணையும் பிரதிநிதித்துவப்படுத்தவே நான் விரும்புகிறேன். என்னுடைய பாட்டி எப்படி இருந்தார் என்றுகூட யாரும் பார்த்ததில்லை. யாரிடமும் அவருடைய புகைப்படம் இல்லை. நம்முடைய சமூகத்தில் பெண்கள் எப்படி மறைக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்த்து நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன். பெண்களின் பார்வையில் எந்த வரலாறும் எழுதப்படுவது இல்லை. அது எப்போதும் ஆண்களின் கண்களால் எழுதப்படுகிறது. எனவே, பெண்களை குறிப்பாக எனது பாட்டியை பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய விஷயமாகும். இந்த போட்டிகளின் மூலம் அவரை நான் உலகுக்கு தெரியப்படுத்துகிறேன்” என்று ஆட்லின் தெரிவித்துள்ளார்.
Also Read : பொறியியல் படிப்பு… ஒப்பனைக் கலைஞர் – மிஸ் யூனிவர்ஸ் ஆண்ட்ரியா மெஸாவின் சுவாரஸ்ய பக்கங்கள்!