சோ

சீனிவாச ஐயர் ராமசாமி `சோ’-வாக மாறிய தருணம்! #RememberingCho

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், வழக்கறிஞர், விமர்சகர், நாடக ஆசிரியர், நடிகர் உள்ளிட்ட பன்முகங்களுக்குச் சொந்தக்காரரான ‘சோ’ ராமசாமியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் நேற்று. ஜெயலலிதாவுடன் நல்ல நட்பில் இருந்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த இரண்டாம் நாள் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். சீனிவாச ஐயர் ராமசாமி ‘சோ’ ராமசாமியானது எப்போது?

சோ
சோ

சீனிவாச ஐயர் ராமசாமி

சென்னை மயிலாப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராமசாமி. லயோலா கல்லூரி, விவேகானந்தர் கல்லூரிகளில் பயின்று பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் சில காலம் பணிபுரிந்தார். பின்னர், சில தனியார் நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். 1970-ல் துக்ளக் வாரப்பத்திரிகையைத் தொடங்கிய இவர் நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகைத் துறையில் தீவிரமாகப் பணியாற்றியவர். இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சியை விமர்சித்தி துக்ளக் பத்திரிகையின் அட்டைப்படத்தைக் கறுப்பு நிறத்தில் கொண்டுவந்தவர். தி.மு.க ஆட்சிக்காலத்தில் துக்ளக் பத்திரிகை வெளிவராமல் தடுக்கப்பட்டபோது, கள்ள சந்தையில் பிரதி ரூ.25 அளவுக்கு துக்ளக் விற்றது, சோவின் எழுத்துக்கான மக்களின் அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது.

எழுத்தின் மீது தீரா ஆர்வம் கொண்டிருந்த சோ நாடகங்களில் நடிக்கத் தொடங்கி பின்னாட்களில் அவற்றை எழுதி, இயக்கவும் செய்தார். 1957-ல் நாடகங்களை எழுதத் தொடங்கினார். அரசியலை நய்யாண்டி செய்யும் வசனங்கள் கொண்ட இவரது ‘முகமது பின் துக்ளக்’ நாடகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பின்னாட்களில், அதே பெயரில் படமாகவும் சோ இதை இயக்கினார். அந்த நாடகத்தில் இடம்பெற்றிருந்த கதாபாத்திரத்தின் தாக்கத்திலேயே இவரது பத்திரிகைக்கும் துக்ளக் என்று பெயர் வைத்தார். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15-ம் தேதி நடைபெறும் ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் இவரின் கேள்வி – பதில் வகை உரையைக் கேட்கவே தனி ரசிகர் வட்டம் உண்டு. அந்த விழாவுக்கு அரசியல் தலைவர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது சோவின் வழக்கம். அப்படி ஒரு விழா மூலம்தான் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை அழைத்து வந்தார். அந்தவகையில், மோடியை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை சோவுக்கு உண்டு என்றே சொல்லலாம். சோவை `ராஜகுரு’ என்று அழைத்தார் மோடி. திராவிட இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தவர் சோ. அவரால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் தி.மு.க தலைவர் கருணாநிதிதான். ஒருபுறம் விமர்சனங்கள் இருந்தாலும், மறுபுறம் அரசியல் தலைவர்களோடு நட்பு பாராட்டக் கூடியவர். ஜெயலலிதா உள்பட பலருக்கு அரசியல் ஆலோசனை கூறுபவராக சோ கருதப்பட்டார்.

சோ
சோ

`சோ’ ராமசாமி

சோ முதன்முதலில் நடித்த நாடகம் கல்யாணி. அவர் 14 நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். பல நாடகங்களில் முக்கியமான வேடங்களை ஏற்றிருக்கிறார். பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்து 1964-ல் வெளியான ‘பார் மகளே பார்’ படம் மூலம் திரையில் அறிமுகமான சோ, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி வரையில் முக்கிய நடிகர்களோடு நடித்திருக்கிறார். முகமது பின் துக்ளக் உள்ளிட்ட 4 படங்களை இயக்கியிருக்கிறார். நாடக உலகில் ராமசாமி என்று புகழ்பெற்றிருந்த அவர், ‘சத்திய கங்கை’ ஆசிரியர் பகீரதன் எழுதிய ‘தேன்மொழியாள்’ நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு சோவுக்குக் கிடைத்தது. அந்த கதாபாத்திரம் அவரின் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கவே, அந்த நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயரான ‘சோ’ என்பதையே தனது புனைப்பெயராக வைத்துக் கொண்டார் சோ.

Also Read : #JusticeforManikandan: முதுகுளத்தூர் மணிகண்டன் சந்தேக மரணம்… வலுக்கும் சர்ச்சை.. என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top