ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட `கொங்கு நாடு’ விவகாரம்… என்ன நடந்தது?

சென்னையில் நடந்த அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் கொங்குநாடு விவகாரம் எதிரொலித்திருக்கிறது. என்ன நடந்தது?

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் 22-ம் தேதி காலை 10.30 மணிக்குத் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாகவே நேற்று காலை 7 மணி முதலே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கரூர், சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடங்கி நடந்துகொண்டிருந்தது. இந்த சூழலில் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் திடீரென அறிவிக்கப்பட்டது. இதுபற்றி அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிப்பு வெளியாகாத நிலையில், மதியம் 12.30 மணியளவில் கூட்டம் நடைபெற்றது.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 2014-க்குப் பிறகு அ.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், செப்டம்பர் 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல், அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் புதிய அவைத் தலைவரை நியமனம் செய்வது, சசிகலாவின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்த ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறி கண்டனம் தெரிவித்தனர். சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வழக்கறிஞர்கள் கூறிய நிலையில், ரூ.25.56 லட்சம் பணம், சொத்து சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் உள்ளிட்டவைகள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சொன்னது.

கொங்கு நாடு விவகாரம்

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
ADMK

தமிழகத்தைப் பிரித்து கொங்கு நாடு என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட இருப்பதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்ற எல்.முருகன் பற்றிய விவரக் குறிப்பில் கொங்கு நாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் நேற்று நடந்த அ.தி.மு.க கூட்டத்திலும் எதிரொலித்திருக்கிறது. மேற்கு, வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இந்த விவகாரத்தை கூட்டத்தில் எழுப்பியிருக்கிறார்கள். கொங்கு நாடு விவகாரம் குறித்தும், அ.தி.மு.க-வுக்கு மாற்று பா.ஜ.க-தான் என அக்கட்சியினர் பேசிவருவது குறித்தும் தெளிவான நிலைப்பாட்டோடு கட்சித் தலைமையில் இருந்து அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகச் சொல்கிறார்கள். இதுபோன்ற சர்ச்சைகளின்போது பா.ஜ.க தலைவர்களிடம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பேசி அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அதேபோல், பா.ஜ.க கூட்டணிதான் தோல்விக்குக் காரணம் என கட்சித் தொண்டர்கள் பேசிவரும் நிலையில் பலரும் கட்சியில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்து வருவது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.

Also Read – எம்.ஆர்.விஜயபாஸ்கர் – 24 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை… எஃப்.ஐ.ஆர் – கொதிக்கும் அ.தி.முக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top