நாகூர் அனீபா அவர்களின் சிறுவயதிலேயே அவருடைய பெற்றோர் நாகூருக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். நாகூர் செட்டியார் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இஸ்லாமிய மாணவர்கள் முன்னிலையில் இறைவணக்கப் பாடல் பாடியதே அவரது முதல்மேடை. 11 வயது முதலே மேடையில் பாடத் தொடங்கிவிட்டார் அனீபா.
`அண்ணா அழைக்கிறார்’, `ஓடி வருகிறான் உதயசூரியன்’, `வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததாடா…’, `இறைவனிடம் கையேந்துங்கள்’ போன்ற பாடல்கள் வாயிலாக நாகூர் அனீபாவின் குரல் இன்றும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உரக்கப் பாடியதால், செவித்திறன் பாதிப்பு ஏற்பட்ட பின்னரும், இடைவிடாமல் மேடைகளில் பாடியவர் இசை முரசு நாகூர் அனீபா. ஒன்று, இரண்டல்ல, 15,0000-த்துக்கும் அதிகமான மேடைகளில் பாடியிருக்கிறார். இருந்துன், `நான் கச்சேரிக்காரன் அல்ல; கட்சிக்காரன்’ என்றே இறுதிக் காலம் வரை பெருமையோடு கூறிவந்தார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என திராவிட இயக்கத்தின் அனைத்து பரிமாணங்களையும் பார்த்த நேரடி சாட்சி இவர். பெரியார், அண்ணா, காயிதே மில்லத் உள்ளிட்ட தலைவர்கள் மீது ஈடுபாடு கொண்ட அவர், அண்ணாவின் அழைப்பை ஏற்று நாடகங்களிலும் நடித்தார். பணம் என்ற நாடகத்தில் கவிஞர் வேடமேற்ற அனீபா, கல்சுமந்த கசடர் நாடகத்தில் போர்வீரனாக நடித்தார்.
நாகூர் அனீபா வாழ்வின் ஐந்து நெகிழ்ச்சிகள்.
-
1 இந்தி எதிர்ப்புப் போராட்டம்
மத்திய அரசின் இந்தி எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் திராவிட இயக்கத்தோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் அனீபா. குறிப்பாக 1952ல் திருச்சி ரயில் நிலையப் பெயர்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் கருணாநிதியும் அனீபாவும் ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு இணைந்து பங்கேற்றனர்.
-
2 முதல் சினிமா வாய்ப்பு
சுயமரியாதை உணர்வை உயிரினும் மேலாகக் கொண்ட அனீபாவுக்கு சினிமாவில் பாட வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். அந்த வாய்ப்பும் அவருக்கு ஒருமுறை நண்பர்கள் உதவியால் கிடைத்தது. ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்தார்கள். அனீபா என்ற பெயரில் பாடாமல் குமார் என்ற புனைப்பெயரில் பாட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. அரிதாகக் கிடைத்த அந்த வாய்ப்பை நிராகரித்தார் அனீபா. சுயமரியாதை உணர்வுதான் அவரை அந்த வாய்ப்பைப் புறந்தள்ள வைத்தது.
-
3 தி.மு.க வேட்பாளர்
திராவிட இயக்க மேடைகளைத் தனது குரலால் அலங்கரித்த நாகூர் அனீபா, தி.மு.க-வின் முதல் தேர்தலிலும் பங்கெடுத்தார். அண்ணா தலைமையில் 1957-ல் தி.மு.க சந்தித்த முதல் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் அனீபாவால் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. நாகப்பட்டினம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசன் அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றார். இரண்டாவது இடம் பிடித்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம்.
-
4 ஓடிவருகிறான் உதயசூரியன்
தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ சின்னமான உதயசூரியனை தமிழகம் முழுவதும் கொண்டுசேர்த்ததில் முக்கியமானவர் நாகூர் அனீபா. தி.மு.க மேடைகளில் நாகூர் அனீபாவின் காந்தக் குரலில் ஒலித்த `ஓடி வருகிறான் உதயசூரியன்’ பாடல் உடன்பிறப்புகள் மத்தியில் மிகப்பிரபலம். இன்றும் தி.மு.க மேடைகளில் அந்தப் பாடல் ஒலிப்பதைக் கேட்கமுடியும். அண்ணா மறைந்த போது, `எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்’ பாடல், கருணாநிதி மறைவின்போதும் பொருந்திப் போனது.
-
5 பால்யகால நண்பன் கருணாநிதி
பள்ளிப் பருவத்தில் திருவாரூரில் தொடங்கிய கருணாநிதி - நாகூர் அனீபாவின் நட்பு இறுதிக் காலம்வரை தொடங்கியது. தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் இருந்தபோது அவருடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தவர் அனீபா. தி.மு.க தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அப்போது தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பலர் எம்.ஜி.ஆரோடு இணைவதில் ஆர்வம் காட்டினார்.
ஆனால், அந்த சூழலில் எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது பால்யகால நண்பன் கருணாநிதிக்குப் பக்கபலமாக நின்றார் நாகூர் அனீபா. கருணாநிதி வாழ்வில் கல்லக்குடி போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. `கல்லக்குடி தந்த கருணாநிதி வாழ்கவே...’ என்று அந்த நிகழ்வைப் பாராட்டி மகிழ்ந்தார் நாகூர் அனீபா.
0 Comments