தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று 40 நாள்களுக்குப் பின் டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சுமார் 25 நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஸ்டாலினின் 2 நாள் டெல்லி பயணத்தில் நடந்தது என்ன?
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகக் கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். முதலைமைச்சர்களாகப் பொறுப்பேற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது வழக்கம். ஆனால், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில், டெல்லி பயணத்தை ஒத்திவைத்துவிட்டு அதைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார் ஸ்டாலின். சுமார் 40 நாட்கள் புதிய அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன் பயனாக தினசரி 35,000-த்துக்கும் மேல் இருந்த பாதிப்பு 10,000-த்துக்கும் கீழ் குறைந்தது.

இந்தநிலையில், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. ஜூன் 17-ம் தேதி மாலை நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 16-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற ஸ்டாலின், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். டெல்லியில் கட்டப்பட்டு வரும் தி.மு.க அலுவலகக் கட்டடப் பணிகளைப் பார்வையிட்ட அவர், தி.மு.க எம்.பிக்கள், தமிழக அதிகாரிகள் என பல தரப்பினரையும் டெல்லியில் சந்தித்துப் பேசினார். டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
டெல்லி வரும் தமிழக முதல்வர்கள் பிரதமரை சந்திக்க பல்வேறு புரோட்டோகால்கள் இருக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, அந்த புரோட்டாகால்கள் எல்லாமும் கடைபிடிக்கப்படவில்லை என்கிறார்கள். ஆனால், ஸ்டாலினின் டெல்லி பயணம் உறுதி செய்யப்பட்டபோது முதல் ஆளாக டெல்லி சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஏ.கே.எஸ். விஜயனும் பயணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனித்தார். ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழகத் தலைமைச் செயலாளர் வி.இறையன்பு ஆகியோர் சென்றிருந்தனர். டெல்லியில் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஃபுல்லட் ஃப்ரூப் காரும் அனுப்பிவைக்கப்பட்டது.

17-ம் தேதி மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். சுமார் 25 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த சந்திப்பில் நீட் தேர்வு பிரச்னை, தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி, கச்சத்தீவு பிரச்னை, குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண்மை சட்டங்கள், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், எழுவர் விடுதலை, மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் அளித்திருக்கிறார் ஸ்டாலின்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், `கொரோனா பெருந்தொற்று காரணமாக முன்கூட்டியே பிரதமர் மோடியைச் சந்திக்க முடியவில்லை. அவருடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது.
தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்’ என்று என்னிடம் உறுதியளித்தார். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் என்னிடமே வெளிப்படையாகத் தெரிவிக்கலாம்’ என்றும் கூறினார். தமிழகத்தின் கோரிக்கைகளை அவரிடம் மனுவாகக் கொடுத்திருக்கிறோம்’ என்றார்.
மத்திய அரசுடனான உறவு குறித்த கேள்விக்கு,உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்று பதிலளித்தார் ஸ்டாலின்.
Also Read – சுவடே இல்லை… தமிழக அரசியல் களத்தில் காணாமல்போன கட்சிகள்!
0 Comments